உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / எங்களுக்கு கருத்து கூற, நீங்கள் யார்?

எங்களுக்கு கருத்து கூற, நீங்கள் யார்?

குரு.பவுன்ராஜ், தேவாரம், தேனி மாவட்டத் திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மீன் பிடிக்க கற்றுக் கொண்டு விட்டால், 'இலவசமாக மீன் தருவோம்' என்ற வெற்று அறிவிப்புகள் ஓட்டுகளாக மாறாது என்ற உயரிய சித்தாந்தத்தின் வெளிப்பாடு தான், தேசிய கல்விக் கொள்கையை புறக்கணிக்கும் செயல்!ஹிந்தி கற்காத இரு தலைமுறை மாணவர்கள் தேசிய வேலை வாய்ப்பிலும், வணிகர்கள் தாராளமயமான வர்த்தகத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஹிந்தி கற்றால் தமிழ் அழிந்து விடும் என்று அச்சுறுத்தும் இந்த திராவிட கூட்டம், தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தது? அடுக்குமொழியில் பேசினால், எழுதினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா? அறிவியல் வளர்ச்சிக்கான மொழியாக தமிழை மாற்ற என்ன முயற்சி செய்தது? ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகமாடும் இவர்களில் எத்தனை பேருக்கு இலக்கண சுத்தமாக, பிழையின்றி தமிழில் எழுதத் தெரியும்?தமிழகத்தின் கல்விக் கொள்கை இருமொழி தான் என்று அறைகூவல் விடுக்கும் இவர்கள், தங்கள் வாரிசுகளை மட்டும் மும்மொழியை படிக்க வைப்பதன் மர்மம் என்ன? ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர் என்று கூப்பாடு போடும் அரசியல்வாதிகளே... புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கட்டாயம்; இரண்டாவதாக இணைப்பு மொழி ஆங்கிலம்; மூன்றாவது மாணவர்களின் விருப்ப மொழியாக இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளதே தவிர, ஹிந்தி கட்டாயம் என்று எந்த பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது? இல்லாத ஒன்றுக்காக ஏன் நெஞ்செலும்பு துருத்த வீரவசனம் பேசி, பொய் பரப்புகிறீர்? தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் தரமான கல்வி, ஏழை மாணவர் களுக்கு இலவசமாக கிடைக்கக் கூடாதா? அதற்கான கட்டமைப்புகள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தக் கூடாதா?அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்களின் குழந்தைகள் தான் பலமொழிகள் அறிந்திருக்க வேண்டுமா? அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் அவற்றை படிக்கக் கூடாதா? உங்கள் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை, நீங்கள் தீர்மானித்தது போல், எங்கள் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை, பொதுமக்களான எங்களிடம் தானே கருத்துக் கேட்டிருக்க வேண்டும்?அதை விடுத்து, நீங்கள் அரசியல் செய்ய எங்கள் பிள்ளைகளின் கல்விதான் கிடைத் ததா? தமிழுக்காக நீங்கள் உயிரை எல்லாம் துறக்க வேண்டாம்; பதவியை துறந்து செல்லுங்கள். எங்களுக்கான ஆட்சியை நாங்கள் அமைத்துக் கொள்கிறோம்!

தமிழ் பத்திரிகைகளை புறக்கணிப்பது ஏன்?

க.சண்முகம், காஞ்சிபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'தமிழகத்தில், கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் தமிழ் என பேசுவோர் தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எதுவுமே செய்யவில்லை' என குற்றஞ்சாட்டியுள்ளார், கவர்னர் ரவி.அவர் கூறுவது நுாற்றுக்கு நுாறு உண்மை!'திராவிட மாடல்' என்று கூறியபடியே, 'தமிழ் வளர்க்கிறோம்' என்று மேடைதோறும் முழங்குகின்றனர்; 'தமிழர்களின், தமிழகத்தின் பாதுகாவலர்கள் நாங்கள் தான்' என்றும் மார்தட்டுகின்றனர்.அவ்வப்போது தங்கள் பதவிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து வரும்போதெல்லாம், 'ஹிந்தி எதிர்ப்பு' என்ற போர்வைக்குள் ஒளிந்தபடி, 'தமிழ் மொழியை காப்போம்' என, கூக்குரல் எழுப்புகின்றனர். ஹிந்தியை எதிர்க்கும் இவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு என்ன தான் செய்தனர் என்று கேட்டால், கழகம் ஆட்சிக்கு வந்த இந்த, 58 ஆண்டுகளாக எந்த ஒரு பதிலும் இல்லை.அதேநேரம், தினமும் பல லட்சம் பேரை, தமிழ் மொழியை வாசிக்க வைத்து, மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் பத்திரிகைகளை இந்த அரசு எப்படியெல்லாம் புறக்கணிக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்...சாலை விரிவாக்கம், தொழிற்பேட்டை வளாகம், விமான நிலைய விரிவாக்கம், வீட்டு வசதி வாரிய திட்டம் போன்ற அரசு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலங்கள் பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக, அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இவ்விளம்பரங்கள் ஆங்கில பத்திரிகைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன.அரசு திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கான நிலங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் இருந்தே எடுக்கப்படும் நிலையில், 'தமிழுக்காக உயிரை விடுவோம்' என, கூக்குரலிடும் தி.மு.க., அரசு, இதற்கான விளம்பரங்களை, தமிழ் பத்திரிகைகளில் வெளியிடாமல், ஆங்கில பத்திரிகைகளில் மட்டுமே வெளியிடுகிறதே ஏன்? காரணம், 'நிலம் எடுப்பு விதிகளின்படி விளம்பரம் வெளியிட்டது போலவும் இருக்க வேண்டும்; ஆனால் அது, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலும் இருக்க வேண்டும்; அப்படியே தெரிந்தாலும், அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதிருக்க வேண்டும்' என்பது தான் நோக்கம்!இத்தனைக்கும் தமிழ் பத்திரிகைகளை விட, ஆங்கில பத்திரிகைகளில் விளம்பர கட்டணம் அதிகம். அப்படியும் தமிழ் பத்திரிகைகள் புறக்கணிக்கப்படுகின்றன!'தமிழ்... தமிழ்...' என்று மார்தட்டும் திராவிட மாடல் அரசு, தமிழுக்கும் எதுவும் செய்வதில்லை; தமிழ் பத்திரிகைகளின் நலனுக்கும் எதுவும் செய்ததில்லை. ஆட்சியாளர்கள் தமிழுக்கு சேவை செய்வதாக இருந்தால், தமிழை, பல கோடி தமிழர்களுக்கு தினமும் எடுத்துச் சென்று, மொழியை மக்களிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் பத்திரிகைகளுக்கு, முதலில் மரியாதை அளிக்கட்டும்!அதை விடுத்து, வெற்று முழக்கம் வேண்டாம்!

வீழ்ச்சியே சாட்சி!

த.யாபேத்தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: கடந்த 2015 மற்றும் 2020 டில்லி சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சிகளே இல்லையெனும் அளவில், மிகப்பெரிய வெற்றியடைந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், இன்று தன் சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்துள்ளார். காரணம், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே துவங்கிய போராட்டத்தின் போதும், அதன்பின்பும், ஊழலுக்கு எதிரான புனிதராகவும், காந்தியவாதியாகவும் தன்னைக் காட்டிக் கொண்டார் கெஜ்ரிவால். அதை நம்பிய மக்கள், அவரை இருமுறை அரியணையில் ஏற்றினர்.ஆனால், காந்திஜியின் கொள்கைக்கு எதிரான மதுபான கொள்கையை உருவாக்கியதில், காந்தியவாதி என்ற அவரது பிம்பம் ஆட்டம் கண்டது. மதுபான ஊழலில் சிறை சென்றபோதோ, நேர்மையாளர் என்ற பிம்பம் அடியோடு கவிழ்ந்தது.அத்துடன், தன்னை மிகவும் எளிமையானவர் போல் காட்டிக் கொண்டிருந்தார். அவரது ஆடம்பர சொகுசு பங்களா விஷயத்தில், அதுவும் உருக்குலைந்து போனது.மொத்தத்தில் தன்னை குறித்து கட்டமைத்த அனைத்து பிம்பங்களையும், தன் செயல்களால் நொறுக்கி விட்டார்.சொல்லும், செயலும் எதிரெதிராக இருந்தால், மக்கள் அதை நீண்ட காலத்திற்கு சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு, கெஜ்ரிவாலின் வீழ்ச்சியே சாட்சி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Minimole P C
மார் 06, 2025 08:34

If CM has guts, let him conduct a referendum among people and decide. Why these all claims and counter claims. For politicians they live in others earnings. For 90% people every day is a working day to live. Please think of poors.


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 23, 2025 13:04

தமிழகத்தில் உள்ள திருட்டு அயோக்கியர்களின் வீழ்ச்சி எப்போது ஏற்படும் என்று மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Sridhar
பிப் 23, 2025 12:19

மும்மொழி கொள்கையில் இந்தி இல்லைங்கறது ஒருபுறம். அதைவிட்டுவிட்டு இந்தி கற்றுக்கொண்டால் என்ன நன்மை என்று பார்க்கும்போது, திராவிடியாக்கள் சொல்வது வடக்கத்தான் வேலைதேடி இங்கு வருகிறான், நாங்கள் இங்கேயே வேலை பார்ப்போம் இல்லையென்றால் எங்கள் ஆங்கில அறிவை வைத்து அமெரிக்கா செல்வோம் என்று எல்லா மாணவர்களும் வேலை அடிப்படையில்தான் படிக்கவேண்டும் என்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஏன் வேலை ஒன்றுதான் குறிக்கோளாக இருக்கவேண்டுமா? ஒரு மாணவனும் தொழில் முனைவோராக ஆக நினைக்ககூடாதா? ஒரு விவசாயம், ஒரு தொழிற்ச்சாலை இவற்றை அமைத்து வியாபாரம் செய்ய முனையும்போது, அதனால் வரும் பொருட்களை சந்தைப்படுத்த மற்ற மாநிலங்களுக்கு செல்ல நேரிடும். அப்பொழுது பலமொழிகள் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகுமே? இதே உத்தியை வைத்துதானே மார்வாரிகள் எல்லா மாநிலத்திலும் அவர்கள் வியாபாரத்தை விருத்தி செய்யமுடிகிறது? இந்தி வேண்டாம் என்று சொல்லும் அதே வேளையில் வியாபாரம் வேண்டாம் என்று சொல்லமுடியுமா? ஏன் நம் மாணவர்களை தொழில் முனைவர்களாக பார்க்கக்கூடாது? பிறருக்கு வேலை செய்து பிழைக்கும் அடிமை வர்க்கமாக ஏன் தமிழக மாணவர்களை சித்தரிக்க வேண்டும்?


kumar
பிப் 23, 2025 07:34

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டு வர மட்டும் போராடும் இந்த லஞ்சம் வாங்கி வேலையே செய்யாமல் தண்டச் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர மட்டும் போராட்டம் நடத்தாதது ஏன்? இவன்களுக்கு ஓய்வூதியம் ஒரு கேடு. தமிழ்நாட்டு ஓட்டுப் போடும் மக்களே சிந்தியுங்கள்.


சமீபத்திய செய்தி