உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!

சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!

சி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்கள் ஒன்றும் கடவுளின் அவதாரம் இல்லை என்பதை புரிந்து கொள்ளாதவரை, கரூரில் தமிழக வெற்றிக் கழக பரப்புரை கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகள் போன்று தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். மக்களின் பொழுது போக்கிற்காக நடித்து, அதன் வாயிலாக பணம் ஈட்டும் தொழிலாளர்கள் தான் நடிகர்கள். அவர்கள் ஒன்றும் 'சூப்பர்மேன்'கள் இல்லை. இதை உணராமல் அவர்களை பார்க்கவும், தொட்டுப்பார்க்கவும் துடிக்கின்றனர் ரசிகர்கள் . அதிலும், பள்ளி மாணவியர் முதல் இளம் பெண்கள் வரை நடிகரை தொடுவதையும், அணைத்து கொள்வதையும் பெருமையாக நினைப்பதும், நடிகர்களை பார்த்தவுடன் உணர்ச்சி வசப்படுவதும், கண்ணீர் விடுவதையும் பார்க்கும் போது, சினிமா மோகம் அவர்களை எந்தளவு ஆட்டி வைக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி! கரூர் நிகழ்விற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற பகுத்தறிவு அற்ற ரசிகர்களின் கட்டுப்பாடற்ற ஆர்வமும் ஒரு காரணம்! பொது வாழ்வில் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக வாழ்ந்தது, சிந்தித்தது எல்லாம் காமராஜர், கக்கன் போன்றவர்களோடு முடிந்து விட்டது. இன்று அரசியல் நுழைவு என்பதே பதவி என்ற தங்க சுரங்கத்தை, ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து சுரண்டுவதற்குத் தான்! ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; பதவி சுகத்திற்காக போராடலாம். ஆனால், அவ்வாறு வருவோர் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள், கல்வி, மருத்துவம், பாதுகாப்பு போன்றவற்றை செயலாற்றுவதற்கான திட்டங்கள், எதிர்காலத்திற்கான சரியான திட்டமிடல் என்ன என்பதை தெளிவாக்க வேண்டும்! மக்களும், இதுபோன்று சினிமா கவர்ச்சி மற்றும் இலவச அரசியலுக்கு மதிமயங்காமல், நாட்டுக்கும், மக்களுக்கும் எவரால் நன்மை செய்ய முடியும் என்பதை உணர்ந்து, அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்கால தலைமுறையினருக்காவது வருங்காலம் சிறப்பாக இருக்கும்! lll காமராஜரிடம் இருந்து கற்றுகொள்ளுங்கள்! க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு; புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று, என்றோ பாரதி பாடிவிட்டு சென்றுவிட்டான். இப்போது, அதற்கு விளம்பரம் எடுத்து கொண்டாடுகிறது, திராவிட மாடல் அரசு. மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தேடிக்கொள்வதில் இரு திராவிட கட்சியினரும் சளைத்தவர்கள் அல்லர்! அதனால் தான், இரு கட்சிகளையும், 'ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள்' என்று கூறினார், காமராஜர். காமராஜர் தேர்தலில் தோல்வியடைந்த சமயம், ஒரு தொண்டர் அவரிடம், 'நம் ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை மக்களிடம் விளம்பரம் செய்யாததே நம் தோல்விக்கு காரணம்' என்றார். அதற்கு, 'தாய்க்கு சேலை வாங்கி கொடுத்த ஒருவன், 'எங்கம்மாவுக்கு சேலை வாங்கி கொடுத்தேன்'ன்னு தம்பட்டம் அடிப்பானா...' என்று கேட்டு, அந்த தொண்டரின் வாயை அடைத்தார், காமராஜர். இப்படி பலனை எதிர்பாராமல் கடமையை செய்ததால் தான், 'கர்ம வீரர், கல்விக் கண் திறந்த காமராஜர்' என்ற பட்டங்கள் அவரை தேடி வந்தது, எந்த விளம்பரமும் இல்லாமல்! அதேபோன்று காமராஜர் தேர்தலில் தோற்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ஒரே வார்த்தையில், 'ஜனநாயகம் வென்றது!'என்றார். இன்றைய அரசியல்கட்சி தலைவர்களோ, தேர்தலில் தோற்றால், 'மக்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர். பணம் விளையாடியது, தேர்தலில் தில்லு முல்லு, கள்ள ஓட்டு' என பல காரணங்களை அடுக்குவர். ஏன்... 'ஓட்டு திருட்டு' என்று சொல்லி கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு ஊர்வலம் செல்வர். ஆனால், தேர்தல் தோல்வியை ஜனநாயக முறைப்படி ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் காமராஜர் மட்டுமே! காமராஜர் குறைவாக பேசினார்; நிறைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினார். திராவிட மாடல் ஆட்சியாளர்களோ, பேனை யானையாக்கி, அந்த யானைக்கு டவுசர் தைத்து போட்டு, யானை மீது தமிழக மக்களை எல்லாம் அம்பாரி ஏற வைக்கப் போவதாக வெற்று விளம்பரம் செய்கின்றனரே தவிர, ஆக்கப்பூர்வமான செயல்கள் ஒன்றையும் காணோம்! lll எத்தனை உயிரை பலி கொடுப்பீர்? க.ஹேமமாலினி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாய்க் கடியால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அரசு தனி கவனம் செலுத்துகிறது. கடந்த ஆட்சியில் நாய்க்கடி, பாம்பு கடிக்கான மருந்து, வட்டார, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என, 2,236 சுகாதர நிலையங்களில், நாயக்கடி, பாம்பு கடிக்கான மருந்து இருப்பில் உள்ளது...' என்கிறார், சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன். அவர் தினமும் செய்தித்தாளை படிப்பதில்லை போலும்! திருநெல்வேலி திசையன்விளையில் அரசு மருத்துவமனைக்கு நாய்க்கடிபட்டு சிகிச்சை பெற வந்த மூதாட்டிக்கு, மருந்து இல்லை எனக் கூறி, அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை நெற்குன்றத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேரை தெருநாய் கடித்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்க்கடிக்கான தடுப்பூசி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க, 'மருந்து கையிருப்பில் இல்லை என யாரேனும் நிரூபித்தால், அவர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் நானே விமான, ரயில், பேருந்து டிக்கெட் எடுத்து தருகிறேன்...' என்று கூறியுள்ளார், சுகாதார துறை அமைச்சர். தி.மு.க.,வினருக்கு இந்த வறட்டு வாய் பேச்சுக்கு மட்டும் என்றும் குறைவில்லை. இந்தியாவிலேயே நாய்க்கடியால், உயிரிழப்புகளை சந்திப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2025 ஜனவரி முதல் மார்ச் வரை தமிழகத்தில், 1.18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந் துள்ளனர். ஏன்... கடந்த சில நாட்களில், 3 பேர் ரேபிஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர். தமிழக அரசு இந்த உயிர்பலிக்கு என்ன தீர்வு வைத்துள்ளது? தெருக்களில் மனிதர்கள் நடமாட முடியவில்லை. ஒருபுறம் மாடுகள் ரோட்டை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவற்றிடம் இருந்து தப்பித்து வந்தால், தெருநாயிடம் அகப்பட்டு கடி வாங்க வேண்டியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்னும் எத்தனை பேரை நாய்க்கடிக்கு பலி கொடுத்தபின், அரசு இவ்விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கும்? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natchimuthu Chithiraisamy
அக் 02, 2025 18:46

சுனாமியை தடுத்து நிறுத்தியவர்கள் நடிகர்கள். ஆண்டுதோறும் வெள்ளத்தை கைகளால் அகற்றுகிறார்கள் ஹீரோக்கள்


Anantharaman Srinivasan
அக் 02, 2025 00:30

சென்னை தெருக்களிலேயே மனிதர்கள் நடமாட முடியவில்லை. ஒருரோடுல் குறைந்தது 20 மாடுகள் ரோட்டை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவற்றிடம் இருந்து தப்பித்து வந்தால், கூட்டங்கூட்டமாக தெருநாய்கள்.. ஒவ்வொரு பிரியாணி, மட்டன் கடை முன்னாலும் சுற்றி வருகின்றன.


D.Ambujavalli
அக் 01, 2025 19:10

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், அமைச்சர்கள் நடிகர்களாகிவிடுகிறார்கள் ஆனாலும், மக்களுக்கும் சற்று பொறுப்பு, அறிவு வேண்டாமா?கைப்பிள்ளையுடனாவது வந்து அந்த நடிகனைத் தரிசிக்காவிட்டால் என்ன குடி முழுகிவிடும்? அவருக்கென்ன, ஒரு படத்தில் 200 கோடி வாங்கிக்கொண்டு நடித்துவிட்டு, இவ்விதம் 40, என்ன 400 பேர் செத்தால்கூட ஆளுக்கு 5, 10 லட்சம் கொடுத்துவிடுவார் நம் உயிர், நம் குடும்பத்துக்கு மிஞ்சித்தான் அரசியலும், நடிக்கணும் என்ற தெளிவு என்றுதான் மக்களுக்கு வருமோ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை