எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 1964ல் ஏற்பட்ட புயல், வெள்ளத்தால், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தனுஷ்கோடி நகரம் முழுதுமாக அழிந்து, அங்கிருந்த மக்கள் தங்களது உடைமைகளையும், வீடுகளையும் இழந்து நிர்கதியாகினர்.அப்போது, அந்த மக்களின் துயர் துடைக்க, அன்றைய நடிகரான எம்.ஜி.ஆர்., 1 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்தார். அன்று கொடுத்த பணத்தின் இன்றைய மதிப்பு, பல கோடிகளுக்கு சமமானது. அன்றைய பிரபல நடிகர்களின் சம்பளமும் சில ஆயிரங்கள் மட்டுமே.இதுபோல, தமிழக மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் எம்.ஜி.ஆரின் கரங்கள் உதவிக்காக நீண்டன; எனவே, தமிழக மக்கள் அவரை முதல்வராக்கி அழகு பார்த்தனர்.தற்போதும், தமிழக முதல்வராக ஆசைப்படும் சில நடிகர்கள், ஒரு படம் நடிக்க, 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.படம் வெளியாகும் முன், பாடல் வெளியீட்டு விழாக்களில், 'என்னை வாழ வைக்கும் ரசிகர்களே...' என்று, உணர்ச்சி பொங்க பேசிவிட்டு, வாழ வைத்த ரசிகர்கள், புயல் வெள்ளத்தால் உடைமைகளை இழந்து தவிக்கும்போது, அவர்களுக்கு உதவும் எண்ணமின்றி சொகுசு மாளிகையில் உல்லாசமாக பதுங்கிங் கொண்டனர்.சில நடிகர்கள் உதவி செய்தனர் என்றாலும், அதிகபட்சம், 10 லட்சம்ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். படத்துக்கு, 50 - 100 கோடி ரூபாய் வாங்கு வோர், குறைந்தபட்ச நிதியுதவியாக, 5 அல்லது 10 கோடியாவது கொடுக்க வேண்டாமா?முதல்வராக நினைக்கும் முன்னணி நடிகர்கள், 'எச்சில் கையால் கூட காக்கா ஓட்ட மாட்டேன்' என்றால், ஒரு கவுன்சிலர் பதவியில் கூட அமர முடியாது. தங்களது ரசிகர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம்; ஆனால், தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.--- நடுநிலை ஓட்டுகளை அ.தி.மு.க., இழக்கும்!
கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என்று, அ.தி.மு.க., பொதுக் குழுவில் மீண்டும் திட்டவட்டமாக பழனிசாமி அறிவித்து விட்டார். நடக்க இருப்பது லோக்சபா தேர்தல். மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டுமா, கூடாதா என்பதை முன்னிறுத்தி தான் கட்சிகள் போட்டியிடுகின்றன.மோடியை எதிர்க்கும், 'இண்டியா' கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகிக்கிறது. ஆனால், அ.தி.மு.க.,வின் நிலையை இன்னும் பழனிசாமி விளக்கவில்லை.'பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்ததால் தான், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை' என, அ.தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள் ஏற்கனவே பேசியதுதான், கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் தெரிகிறது. மத்தியில் இருக்கும் பா.ஜ., அரசு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக அப்படி என்ன செய்து விட்டது என்பதை, பழனிசாமி விளக்க வேண்டும். கணிசமான அளவில், முஸ்லிம்கள் இருக்கும் உத்தர பிரதேசத்தில், இரண்டாவது முறையாக பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.சிறுபான்மையினருக்கு பெரிய ஆபத்து வந்து விட்டது போல, எல்லா கூட்டத்திலும், 'உங்களுக்கு அரணாக அ.தி.மு.க., இருக்கும்' என்று பழனிசாமி பேசுவது வேடிக்கையாக உள்ளது.கட்சிக்காரர்கள் மட்டும் ஓட்டளித்து எந்த வேட்பாளர்களும் வெற்றி பெறுவதில்லை; பொது மக்களும் ஓட்டளிக்க வேண்டும்.அப்படித்தான் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை பெற்று, எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இருந்தார். அவர் இருந்த வரை, 13 ஆண்டுகள் தி.மு.க.,வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தி.மு.க., போல, அ.தி.மு.க., இனவாதம், பிரிவினை வாதம் மற்றும் ஹிந்து மத எதிர்ப்பு பிரசாரம் செய்யாவிட்டாலும், அப்படி பிரசாரம் செய்யும் எந்த அமைப்பையும் கண்டித்து அறிக்கை விட்டதில்லை.பா.ஜ.,வின் தமிழக தலைவராக அண்ணாமலை வந்த பின், படித்தவர்கள், இளைஞர்கள், ஊழலற்ற ஆட்சியை விரும்பும் மக்கள், அவரின் பக்கம் வர துவங்கி விட்டனர்.தமிழகத்தில், சத்தமின்றி ஒரு மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, கிடைக்க வாய்ப்பில்லாத சிறுபான்மையினர் ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு, கட்சி சார்பற்ற நடுநிலையான மக்களின் ஓட்டுகளை இழக்கப் போகிறது, அ.தி.மு.க., என்பது தான் உண்மை.--- பாகிஸ்தானுக்கே போய் விடுங்கள் பரூக்!
எஸ்.மணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'நவாஸ் ஷெரீப்,
பாகிஸ்தான் பிரதமராக போகிறார். நம்முடன் பேச்சுக்கு தயார் என கூறி
வருகிறார். பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி தீர்வு காணா விட்டால், காசாவில்
தினமும் குண்டு வீச்சுக்கு ஆளாகும் பாலஸ்தீனியர்களின் நிலை தான் நமக்கும்
ஏற்படும்' என்று ஒரு வெடிகுண்டை வீசி, ஆழம் பார்த்து இருக்கிறார், ஜம்மு -
காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா.நம்
நாடு விடுதலை அடைந்த நாள் முதல், 75 ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னையை,
ஆட்சிக்கு வந்த சில ஆண்டு களில் சுமுகமாக முடித்து வைத்திருக்கிறது மத்திய
பா.ஜ., அரசு. முக்கால் நுாற்றாண்டாக சிறப்பு அந்தஸ்தில் குளிர் காய்ந்து
கொண்டிருந்தவர்களால், இந்திய நாட்டோடு இணைந்து வாழ மனம் ஒப்பவில்லை.'ஏசி'
அறையிலேயே, 24 மணி நேரமும் இருந்தவர்களை வெறும் பேன் காற்றில் உறங்க
சொன்னால், உறக்கம் வர மறுக்கிறது; மனம், 'ஏசி' குளிருக்கு ஏங்குகிறது.
பாகிஸ்தானுடன் எதற்காக பேச்சு நடத்த வேண்டும்... ஏன் பேச வேண்டும்?தவிர,
நவாப் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தான் தாக்கல் செய்து
இருக்கிறார்; இன்னும் பிரதமராக வெற்றி பெற்று, முடிசூட்டிக் கொள்ளவில்லை.
அதற்குள் பரூக் அப்துல்லா, அவருக்கு பதவி பிரமாணமே செய்து வைத்து விட்டார்.போதா
குறைக்கு, காசாவில் தினமும் குண்டு வீச்சுக்கு ஆளாகும் பாலஸ்தீனியர்களின்
நிலைதான் நமக்கும், அதாவது காஷ்மீர் மக்களுக்கும் ஏற்படும் என்றும்
பயமுறுத்துகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது
சட்டப்பிரிவு என்பது முடிந்து போன அத்தியாயம்.எனவே, பரூக்
அவர்களே... எப்போது, உங்களுக்கு, சிறப்பு அந்தஸ்து இல்லாத காஷ்மீரில் வாழ
முடியாது என்று கருதுகிறீர்களோ, குடும்பத்தோடு மூட்டை முடிச்சுகளை
கட்டிக்கொண்டு, நவாஸ் ஷெரீப் பிரதமராக போகும் பாகிஸ்தானுக்கே குடி
பெயர்ந்து விடுங்களேன். சுதந்திர இந்தியாவின் பெருமையும்,
மகத்துவமும், பாதுகாப்பும் பாகிஸ்தானுக்கு சென்று வாழ்ந்து பார்த்தால் தான்
பரூக் அப்துல்லாவுக்கு தெரியும்.