உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தொழில் முனைவோராக மாற வேண்டும்!

தொழில் முனைவோராக மாற வேண்டும்!

எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று, 76 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனாலும், பட்டியலின மக்கள் ஜாதி துவேஷத்திலிருந்து இன்று வரை விடுதலை பெறவில்லை. இன்னும்பல கிராமங்களில் இரட்டை டம்ளர் முறையும், கோவில்களுக்குள் பிரவேசிக்க முடியாத நிலையும் உள்ளது.இந்நிலை ஒழிய, அவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும். அதற்காகவே மத்திய, மாநில அரசுகள் பலவிதமான சலுகைகளை கொடுக்கின்றன.ஆனால், அந்த சலுகைகளை பெற்று தொழில் செய்து முன்னேற, அவர்களுக்கு உரிய வழிகாட்டிகள் இல்லை. அரசின் சலுகைகள் பற்றிய விபரமும் அனைத்து பட்டியலின மக்களுக்கும் சென்றடைவதில்லை.இதனால் தான், 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினாலும் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. பட்டியலினத்தவர்கள் தொழில் செய்ய வங்கிகளில், 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அதில், 35,000 ரூபாய் மானியமாக அதாவது இலவசமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கொடுக்கிறது.மேலும், வங்கி கொடுக்கும் கடனுக்கு உரிய வட்டியில் குறிப்பிட்ட தொகையையும், தொழில் முதலீட்டு கழகம் செலுத்துகிறது. இது தெரியாமல், பட்டியலின பட்டதாரி இளைஞர்கள் ஊர், ஊராக வேலை தேடி அலைகின்றனர்.இவர்களின் ஓட்டுகளை பெற்று ஆதாயம் அடையும் ஜாதிக் கட்சிகளின் தலைவர்கள், இது தெரிந்தும், பட்டியலின மக்கள் முன்னேற வேண்டும் என எண்ணுவதில்லை.அவர்கள் முன்னேறி விட்டால், தங்கள் கட்சிக்கு கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் ஆள் இல்லாமல் போய் விடும் என கருதி, சலுகைகளை தெரிவிப்பதில்லை. இவர்களின் ஓட்டுகளை வைத்து, பெரிய கட்சிகளிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசி, சில சீட்களை பெற்று ஜெயித்து வசதியாக வாழ்கின்றனர்.எனவே, தீண்டாமை கொடுமைகள் ஒழிவது, பட்டியலின இளைஞர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் அரசு சலுகைகளை பெற்று தொழில் முனைவோராக மாற வேண்டும். மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.900 தலை வாங்கும் அடாவடி பாலாஜி!என்.பாரதி, சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்று ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் பதுங்கி இருக்கும் செந்தில் பாலாஜியின் வழக்கில், 100 ஆண்டுகள் ஆனாலும் தீர்ப்பு வெளிவராத சூழ்நிலை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது.சுருங்கச் சொல்வதென்றால், 'உனக்கும் பெப்பே; உங்கப்பனுக்கும் பெப்பே!'போக்குவரத்து துறையில்வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை, வேலை வாங்கி தராமல், முழுங்கி ஏப்பம் விட்டதாக தான், செந்தில் பாலாஜி மீது வழக்கு.ஆனால், இந்த மோசடியில் போக்குவரத்து துறை ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் உட்பட, 900 பேர் வரை சம்பந்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் பெயர் கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாகவும்,தற்போது ஒரு குண்டு வீசப்பட்டுள்ளது.அதிர்ஷ்டவசமாக, அரசு பேருந்துகளில்பயணம் செய்த பயணியரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.ஒரு நூறு பயணியரின்பெயரையும் சேர்த்திருந்தால், '1,000 தலைவாங்கிய அடாவடி பாலாஜி' ஆகி இருப்பார்.இந்த மோசடி நடந்ததே,அ.தி.மு.க., ஆட்சி காலமான 2011- - 16 கால கட்டத்தில் தான். மோசடி வழக்கை கையில் எடுத்து கோப்பாககோர்க்கவே எட்டுஆண்டுகள் ஆகியுள்ளன.இந்த 900 பேரில்,நபருக்கு ஒரு மாதம் என்று கணக்கு வைத்தால்,விசாரணை முடிய, 75 ஆண்டுகள் ஆகிவிடும்.இத்தனை ஆண்டுகளில், எந்த கில்லாடி கீரை வடைகள் உயிரோடு இருக்கப் போகின்றனர்? அப்படியே இருந்தாலும், 100 வயதைத்தாண்டியோரின் நினைவாற்றல் எப்பேர்ப்பட்டதாக இருக்கும்?எனவே, 'இண்டியன் பீனல் கோடு' இவர்களுக்கு சரிப்பட்டு வராது; சிலப்பதிகார சிலம்புவழக்கில், பாண்டியன் நெடுஞ்செழியன் தீர்ப்பு போல, வழங்கினால்மட்டுமே நீதி கிடைக்கும்!ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்.,கவனத்திற்கு!அ.சேகர், கடலூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: விரைவில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியும், தற்போது நீதிமன்றத்தால் கட்சி கொடியைக் கூட பயன்படுத்த முடியாத பன்னீர்செல்வமும், ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவது, உண்மையான அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்களை, வருத்தம் அடைய செய்து இருக்கும்.ஜெயலலிதா மறைவுக்குப்பின், பழனிசாமி முதல்வராகவும், பன்னீர்செல்வம்துணை முதல்வராகவும் அமர்ந்ததுமே, கட்சியில் பிளவு ஏற்பட துவங்கியது.பழனிசாமி தலைமையில், அப்போதைய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த அனைவரும், அவர்களின் துறைக்கேற்ப ஊழல் செய்து, பணம் சம்பாதித்தனர்.இன்றைய முதல்வர் ஸ்டாலின், ஒருமுறை, அ.தி.மு.க., அமைச்சர்கள்செய்த ஊழல்களை,பட்டியலாக தயார் செய்து, அப்போதைய கவர்னரிடம் கொடுத்தார்.கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அ.தி.மு.க., அமைச்சர்களின் மீது ஊழல்வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அனைவரும் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர்' என்று கூறினார்.ஆனால், யாரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்ததாகத் தெரியவில்லை.கடந்த, 2019 லோக்சபா தேர்தலில் கூட,அ.தி.மு.க., தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது;அப்போதே பாடம் படிக்க தவறி விட்டனர், அ.தி.மு.க., தலைவர்கள்.பின் நடந்த சட்டசபைத் தேர்தலில், பலர் தங்களதுசொந்த செல்வாக்கில் தான், பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றனர். கூடவே, எப்போதும் இரட்டை இலை சின்னத் திற்கு என்று விழும் ஓட்டுகள் மற்றும் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளால்மட்டுமே, அ.தி.மு.க., சில தொகுதிகளில் வெற்றி பெற்றது.எம்.ஜி.ஆருக்கு விழுந்த ஓட்டு போல, தற்போது கனவு கண்டால், நடக்கவேநடக்காது. ஜெயலலிதாவுக்கே, 1996ல் 'தண்ணி' காட்டியவர்கள் தமிழகமக்கள்.எனவே, 'எனக்கு இந்த ஜாதி ஓட்டுகள், உனக்கு இந்த ஜாதி ஓட்டுகள்' என, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கண்ணாமூச்சு விளையாட்டு விளையாடினால், மக்கள், அடுத்த கட்சி மீது தான் கவனம் செலுத்துவர்.இதை, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 13, 2024 00:00

அரசு ஊழியர்கள் மொத்தபேரையும் ஒரு G.O மூலம் Dismiss செய்ததால் மொத்த பேரும் சேர்ந்து 1996ல் 'தண்ணி' காட்டி தோற்கடித்தனர்.


Anantharaman Srinivasan
ஜன 12, 2024 23:50

பல சலுகைகளிருந்தாலும் பட்டியலின மக்கள் முன்னேறுவதை யாரும் விரும்புவதில்லை. ஜாதிக் கட்சிகளின் தலைவர்கள் ஒண்ணோயிரண்டோ சீட் வாங்கி ஜெயித்து தாங்கள் வளம் பெறவே விரும்புகின்றனர். எனவே முன்னேறிய பட்டியலினத்தவர் தன் முயற்சியில் இன்னொரு குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவர வழி காட்ட லேண்டும் அடுத்தவரை நம்பி பிரியோசனமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை