உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / விட்டுக்கொடுத்தால் வெற்றி !

விட்டுக்கொடுத்தால் வெற்றி !

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக பா.ஜ.,வுக்கு எத்தனையோ தலைவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் எவரும் அண்ணாமலை போன்று, கட்சியை பெரிய அளவில் கொண்டு சென்றதில்லை.தேர்தல் சமயம் திராவிடக் கட்சிகளின் கூட்டணி தயவில், 'சீட்' பெறுவதுடன், முந்தைய தலைவர்களின் கட்சி வேலை முடிந்து விடும். ஆனால், தமிழக பா.ஜ., தலைவராக 2021ல் நியமிக்கப்பட்ட அண்ணாமலை, தன் அதிரடி அரசியலால், தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்ததுடன், எதிர்க்கட்சிகளை திணற வைத்தார். தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏதோவொரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்துதான், தங்கள் ஓட்டு வங்கியை தற்போது வரை பாதுகாத்து வருகின்றன. ஆனாலும் அவைகள், 10 சதவீத ஓட்டுகளை கூட தனித்துப் பெற முடியவில்லை. ஆனால், 'நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி' என்று எதிர்க்கட்சிகள் கேலி, கிண்டல்கள் செய்த நிலையில், அவர்களை வாயடைக்க செய்யும் வகையில், 2024 பார்லிமென்ட் தேர்தலில், 18 சதவீத ஓட்டுகளை பெற்று, மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.,வை வலுப்பெற வைத்தார், அண்ணாமலை. இதுவரை இருந்த தமிழக பா.ஜ., தலைவர்களில் எவரும், ஆளுங்கட்சியின் ஊழல்களை புள்ளி விபரங்களுடன் பேசி, அக்கட்சிக்கு நெருக்கடி கொடுத்தது இல்லை; அண்ணாமலை அவ்வேலையை செய்தார். அவர் மீது பல கோடி ரூபாய் மானநஷ்ட வழக்குகள் போடப்போவதாக, தி.மு.க., வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பினரே தவிர, வழக்குகள் தொடுத்து அவரை முடக்க முடியவில்லை.ஆனால், அவரது வாட்ச் பில் கேட்ட செந்தில் பாலாஜி, ஊழல் வழக்கில் சிறை செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார், அண்ணாமலை. அதேபோன்று, அ.தி.மு.க.,வின் தோல்விக்கு பா.ஜ., கூட்டணிதான் காரணம் என்று சொல்லி விலகிய அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியால், பார்லிமென்ட் தேர்தலில், அக்கட்சி பல தொகுதிகளில் டிபாசிட் இழந்ததுதான் மிச்சம். இன்றைய சூழலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காமல், அ.தி.மு.க.,வால் தேர்தலில் வெற்றி பெறவே முடியாது.இதை உணர்ந்துதான், சில வாரங்களுக்கு முன், பழனிசாமி தன் சகாக்களுடன் டில்லி சென்று, அமித் ஷாவை சந்தித்து, கூட்டணியை உறுதிபடுத்தி வந்துள்ளார். அதேநேரம், அண்ணாமலையை நீக்கிவிட்டு, புதிதாக வேறு ஒருவரை தலைவர் பதவியில் நியமிக்க கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.ஜெயலலிதா போன்று வலிமையான மக்கள் தலைவர் இல்லை பழனிசாமி. அதேநேரம், தற்போதைய நிலையில், பட்டிதொட்டி எங்கும், பா.ஜ.,வின் அடையாளமாக இருப்பது அண்ணாமலைதான். அண்ணாமலை இல்லாத பா.ஜ., நிச்சயம் பழனிசாமிக்கு வெற்றியைத் தராது. அதனால், தேவையில்லாத உள்குத்து வேலைகளில் இறங்காமல், தி.மு.க.,வை எப்படி தோற்கடிப்பது என்பது குறித்து மட்டுமே யோசிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தால் மட்டுமே வெற்றியை அறுவடை செய்ய முடியும் என்பதை இரு கட்சி தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்!

முதல்வர் அறிவுரை கூறலாமா?

செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஏ.டி.எம்., சேவை கட்டண உயர்வால், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்' என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின். உண்மையில், ஏழைகளுக்காக இவர் குரல் கொடுப்பவராக இருந்தால், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் உடல் நலத்தையும், அவர்கள் குடும்பத்தினர் வாழ்க்கையையும் சீரழிக்கும், டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கலாமே!'ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை அப்பட்டமான சுரண்டல், பணக்காரர்கள் திளைக்க, ஏழைகள் அட்டையை தேய்க்க துாண்டுகிறது' என்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் டாஸ்மாக் வாயிலாக கிடைக்கும் பணம், எந்த பணக்காரர்கள் உண்டு திளைக்க, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்படுகிறது?ஓராண்டிற்கும் மேலாக சிறைவாசம் இருந்து திரும்பிய ஒருவரை, சிவப்பு கம்பளம் விரித்து, அமைச்சர் பதவியில் வைத்து அழகு பார்க்கிறீர்களே... எந்த பணக்காரர்கள் உண்டு கொழுக்க, அவர் ஏழை, எளிய மக்களிடம் இருந்து பாட்டிலுக்கு, 10 ரூபாய் அதிகம் வசூலிக்கிறார்? இன்று, ஏ.டி.எம்., சேவை கட்டண உயர்வு குறித்து ரிசர்வ் வங்கியையும், மத்திய அரசையும் குற்றஞ்சாட்டும் நீங்கள்தான், 2021 தேர்தல் அறிக்கையில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும்' என்று கூறினீர்கள். நடைமுறைபடுத்தினீர்களா?டாஸ்மாக் மதுபானக் கடைகளை சந்து பொந்து களில் எல்லாம் திறந்துவைத்து, ஏழை மக்களை குடிகாரர்களாக்கி, அவர்களது வாழ்க்கையை நாசம் செய்துவிட்டு, இப்போது, 'ஏ.டி.எம்., சேவை கட்டண உயர்வால், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்' என்று, அவர்களுக்காக பரிந்து பேசுவது, 'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை'யாக உள்ளது! 

மக்கள் மயங்குவரா?

டி.கே.முத்தையா, விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: 'மக்கள் நலம் சார்ந்த விஷயங்களில் அரசின் செயல்பாடு தவறாக இருந்தால், தமிழக அரசை எதிர்ப்போம்' என கூறுகின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம்.முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில் கூட்டணியில் இருந்தபோது, 'தேர்தல் கூட்டணி வேறு; கொள்கை வேறு' எனக் கூறி, பல சந்தர்ப்பங்களில் அக்கட்சியை எதிர்த்தனர். இதை மக்களும் வரவேற்றனர். ஆனால் இன்று, திராவிட மாடல் ஆட்சி முடிய ஓர் ஆண்டே உள்ளது. இதுவரை, மக்கள் பிரச்னைக்காக, ஆளும் அரசை எதிர்த்து, ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. மூன்றுமுறை மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் ஏற்றம், இப்படி நிறைய குறைகள்... இதுகுறித்து ஒருநாள் கூட, இந்த, 'பொதுவுடமைகள்' வாய் திறந்ததில்லை. ஏழை மற்றும் ஊனமுற்றோரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி, பணமோசடி செய்த வழக்கு குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். இவர்களுடன் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை போன்றவர்களும் இணைந்து, அரசுக்கு அதிகமாய் ஜால்ரா போடுவது யார் என்று போட்டி வைத்து, அதையே தங்கள் ஜனநாயக கடமையாக நினைத்து செயலாற்றுகின்றனர்.பல துறைகளிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு, ஆசிரியர், போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்னை அப்படியே இருக்கிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து வாய் திறக்க மறுக்கும் இவர்கள் தான், தமிழக அரசை எதிர்ப்போம் என்கின்றனர். வெறும் வாயில் பந்தல் போட்டு, அதில் பலனடைய நினைக்கின்றனர்... மக்கள் இதற்கு மயங்குவரா என்ன? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
ஏப் 08, 2025 18:02

சுருக்கமாக சொன்னால் காலத்தை இருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி சொல்லுவதும் எடப்பாடியை அண்ணாமலை திட்டுவதும் நல்லது அல்ல. இதை புரிந்து கொள்ளுங்கள் இல்லை வீணாய் போங்கள்.


MARUTHU PANDIAR
ஏப் 06, 2025 22:24

அண்ணா மலை அவர்களே உங்களுக்குத் தெரியாதது இல்லை . நீங்கள் நினைக்கும் பியூரிட்டன் அரசியல் , அதன் மூலம் ஆட்சி அமைப்பது எல்லாம் இன்றைய கால கட்டத்தில் சாத்தியமா, அதற்குள் காலம் கடந்து நடக்கக் கூடாதவை எல்லாம் முழுஇதும் நடந்து, அதன் பின் உங்கள் லட்சியக கனவு கனவாகவே போய் விடும் என்பதை நீங்கள் உணாந்தால் நல்லது . காரணம் மோடி, அமித் ஷாபோன்ற வலுவான தூண்களுக்கும் , ஏன் உங்களுக்கும் கூட வயது எறிக் கொண்டே போகிறது . ராமன் வாலியை வீழ்த்திய காரணமும், கண்ணன் மகாபாரதத்தில் செய்த தந்திரங்களும் 100/100 தர்மத்தின் பால் பட்டவையா ? நேரம் அமையும் போது செய்ய வேண்டியதை செய்ய வில்லை என்றால் தவற விட்ட நேரம் தவற விட்டது தான் ,,திரும்ப வராது . மீண்டும் அதர்மமே கோலோச்சும் .


முக்கிய வீடியோ