உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

'இண்டியா'வுக்கு சிரமம் தான்!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இண்டியா' கூட்டணி, லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று விடும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆசைப்படுகிறார். இவரின் ஆசை, கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினருக்கு இல்லை.ஸ்டாலினின் ஆசையை நிராசையாக்கும் முயற்சியாக, திரிணமுல் மம்தா பானர்ஜியும், ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலும் தனித்துப் போட்டியிட தயாராகி விட்டனர். கூட்டணித் தேருக்கு அச்சாரம் போட்ட நிதீஷ் குமாரோ, தேரே ஆட்டம் காணும் வகையில், கூட்டணியிலிருந்து கழன்று, பா.ஜ.,வுடன் மீண்டும் ஐக்கியமாகி விட்டார். இதைக் கண்டு கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சியினரே, அதிர்ச்சி அடைந்து விட்டனர். தேர்தல் வரையாவது, இண்டியாகூட்டணி நிலைத்திருக்குமா என்பது, கேள்விக்குறியே!பிரதமர் மோடியை, சர்வாதிகாரியாகச் சித்தரிக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். அதை மக்கள் நம்புவரா என்பதும் கேள்விக்குறியே!மதச்சார்பற்றவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள், தங்கள் வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைக்க, போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் இருப்பதாலும், மாநிலத்திற்கு மாநிலம், கூட்டணிக் கட்சியினர் மவுசு இல்லாமல் இருப்பதாலும், இண்டியாவுக்கு இந்த தேர்தல் சிரமம் தான்!இந்திரா, ஜெ., வைப் போன்று இல்லையே?அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டு அரசியலில், மிகவும் துணிச்சலான பெண் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் உண்டு. அதில், முன்னாள் பிரதமர் இந்திராவும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், மத்தியில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்கத் தேவையான, 272 சீட்கள் கிடைக்காது; கூட்டணி ஆட்சி தான் அமையும் என, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின.இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்த வலிமையான மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் மாநிலங்களில் அதிக லோக்சபா சீட்களை வென்றால், பிரதமராக அமர்ந்து விடலாம் என, கனவு கண்டனர்.ஜெயலலிதாவும், 2014 தேர்தலில், 'மோடியா, லேடியா?' என பிரசாரம் செய்தார். சொல்லி வைத்தாற்போல், புதுச்சேரியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 சீட்களில், 37ஐ வென்றார்; அகில இந்திய அளவில், மூன்றாம் பெரிய கட்சியாக அ.தி.மு.க.,வை மாற்றிக் காட்டினார்.அந்த தேர்தலில், பா.ஜ., 282 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் வெறும், 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது.அடுத்த, 2019 லோக்சபா தேர்தலில், 21 சீட்கள் அதிகம் பெற்று, 303 இடங்களில் பா.ஜ., வென்று ஆட்சி அமைத்தது.தற்போது, 2024ல், 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. ஆனால், பிரதமர் வேட்பாளர் தேர்வில் முட்டி மோதி, ஆளாளுக்கு தனித்தனியாக போட்டியிடக் கிளம்பி விட்டன.திரிணமுல் தலைவி மம்தா பானர்ஜி, தனியாகப் போட்டியிடுவதாக, ஓங்கிக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டாலும், இந்திராவைப் போலவோ, ஜெயலலிதாவைப் போலவோ, சொல்லி வைத்து வெற்றி பெறுவாரா என்பது சந்தேகமே!கள நிலவரத்தை அறிவித்த கவர்னர்! -ரெ.ஆத்மநாதன், டாம்பா, புளோரிடா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட கவர்னர் ரவி, தமிழ்நாடு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.'இம்மாவட்டத்தில், பல கிராமங்களுக்குச் சென்று, பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களின் ஏழ்மை நிலை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலை மாற வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.இவ்விவகாரத்தை, அதிக கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.மேலும், 'நம் மாநிலத்தின் தனி நபர் ஆண்டு வருமானம், 2.75 லட்சம் என்று கூறப்படுகிறது. ஆனால், இங்குள்ளவர்களின் ஆண்டு வருமானம், 40,000 தாண்டுமா என சந்தேகம் எழுகிறது' என்றும் கூறியுள்ளார்.ஜனநாயக நாட்டில், சமத்துவமும், சமூக நீதியும் இரு கண்களாகப் போற்றப்பட வேண்டும். ஆனால், 'இல்லான்- உள்ளான்' என்ற ஏற்றத்தாழ்வு, நம் நாட்டில் அதிகம் தென்படுகிறது.சினிமா நடிகர்களும், கிரிக்கெட் போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். மற்றவர்களின் உணவுக்காக உழைப்பவர்களுக்கு கிடைக்கும் ஊதியம், மிக சொற்பமே.நில உச்சவரம்புச் சட்டம்நடைமுறையில் இருப்பதாகச் சொல்லப்படும் நம் நாட்டில், சிலர் மட்டும், 200 ஏக்கர், 300 ஏக்கர் நிலத்தைச் சாகுபடி செய்வதாக, செய்திகள் வெளியாகின்றன.இத்தனை மாறுபாடுகள் இருப்பதால், உண்மையான ஜனநாயகத்தை அடைய நாம், இன்னும் நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.உலக அரங்கில் உயர்வான இடத்தைப் பிடித்துள்ள நம் பிரதமர்,சமத்துவத்தை நம் நாட்டில் ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நம்புவோம்!நேர்மையான கமலைபுறக்கணிக்காதீர்கள்!பெ.பரதன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: நடிகர் கமல்ஹாசன், கட்சி துவக்கியபோதே, தான் ஊழல் செய்து சம்பாதிக்க வரவில்லை என அறிவித்தார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் நற்பணிகள், கட்சிப் பணிகளை செய்து வருகிறார்.'நேர்மை ஒன்றே லட்சியம்' என்று முழங்கிய அவரது மக்கள் நீதி மய்யம், தேர்தலில் வெற்றி பெறவில்லை; அதற்கு காரணம், ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பணம் தான். தங்களுடைய ஊழல் பணத்தில், மக்களுக்கும் பங்கு கொடுத்து, ஓட்டு பெற்று, மீண்டும் ஊழலைத் துவங்குகின்றனர்.'தேர்தலில் வெற்றி என்கிற கட்டாயம் இருந்தால் ஆரம்பத்திலேயே கூட்டணி அமைத்து வென்று இருப்போம். நேர்மையான அரசியலை முன்னெடுத்தால் தோல்வி தான் எனும் நிலைப்பாடு மாற வேண்டும்' என, கமல்ஹாசன் கருதுகிறார்.அரசியல் கலகலப்புக்கு மற்ற தலைவர்கள் இருக்கின்றனர்; நேர்மையான அரசியலுக்கு கமல் இருக்கிறார்.உண்மையான தலைவர்கள், உயிருடன் இருக்கும்போது அவர்களைப் புறக்கணிப்பதும், அவர் மறைவுக்குப் பின் அவரைப் போற்றுவதும் வாடிக்கையாகி விட்டது.அதற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம், விஜயகாந்த்.எனவே, நேர்மையான அரசியல் செய்யும் கமல்ஹாசனை நையாண்டி செய்து, புறக்கணிக்காதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜன 31, 2024 23:20

நேர்மையான அரசியலுக்கு கமல் இருக்கிறார்... கமல்ஹாசனை நையாண்டி செய்து, புறக்கணிக்காதீர்கள்.... இதை படித்தபின் கமலைப்பற்றி இவருக்குத்தெரிந்தது அவ்வளவு தான் என்பது தெளிவாகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை