உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பொய் வாக்குறுதி வேண்டாம்!

பொய் வாக்குறுதி வேண்டாம்!

ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., நிறைவேற்ற முடியாத எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சியை கைப்பற்றி, நான்கு ஆண்டுகள் முடியப் போகின்றன. அதில், முக்கியமான ஒன்று, 'நீட்' தேர்வு ரத்து!இத்தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது முதல்வருக்கும், உதயநிதிக்கும், அமைச்சர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும், அரசியல் நாடகத்தை அரங்கேற்ற கிடைத்த மேடையாக, நீட் தேர்வை கருதுகின்றனர்!பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு என்று புலம்பும்தி.மு.க., அரசு, அம்மாணவர்கள் அத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள இதுவரை என்ன வசதிகளை செய்து கொடுத்துள்ளது? 'மத்திய அரசுதான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்; மாநில அரசால் முடியாது' என்பது தெரிந்தும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களை ஏன் ஏமாற்ற வேண்டும்? 'நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் என்னிடம் உள்ளது' என்று, அன்றைய விளையாட்டு துறை அமைச்சரும், இன்றைய துணை முதல்வருமான உதயநிதி கூறியது, இன்று தமாசு நடிகர் வடிவேலுவின் காமெடியை விட பொதுவெளியில் நகைப்புக்குரிய விஷயமாக போய் விட்டது. எனவே, இனியும் நீட் தேர்வு ரத்து என்ற பொய்யான வாக்குறுதியை தராமல், பின்தங்கிய ஏழை மாணவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்கள் நீட் போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள, கல்வித் தரத்தை உயர்த்துங்கள்!அதை விடுத்து, வரும் சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து, பொய்யான வாக்குறுதிகளை தராதீர்கள். மக்கள் விழிப்படைந்து விட்டனர்; நீட் தேர்வு நாடகம் செல்லுபடியாகாது! 

மடைமாற்றும் குணம் மாறாது!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில், பொதுப்பணித் துறை அமைச்சர்வேலு, 'முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்மேற்கொள்ளும்போது, தாய்மார்கள் தங்கள் குழந்தையை அவர் கையில்கொடுத்து, முத்தம் கொடுக்கச் சொல்கின்றனர். 'அப்படி கொடுக்கப்பட்ட குழந்தை ஒன்றை அவர் கையில் துாக்குவதுபோல் ஓர் அருமையான படம் கிடைத்தது. அப்படத்தை என் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன்.அதை பார்க்கும்போது, அரசிளங்குமரி படத்தில், எம்.ஜி.ஆர்., குழந்தை ஒன்றை துாக்கிப்பிடித்ததுபோல் இருந்தது. அத்துடன், அவர் பாடிய, 'சின்னப்பயலே... சின்னப்பயலே... சேதி கேளடா' என்ற பாடலும் நினைவுக்கு வந்தது' என்று கூறி, அப்பாடலை ராகத்துடன் பாடினார், வேலு. அதை, ஆளுங்கட்சியினர் மகிழ்ச்சியுடன் ரசித்தனர். பாடலுக்கு தடை ஏதும் சொல்லாமல், ரசித்து சிரித்தார், சபாநாயகர் அப்பாவு.அதேநேரம், முந்தைய நாள், அ.தி.மு.க., உறுப்பினர் அரக்கோணம் ரவி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கையின் போது, இதே பாடலை பாடினார். அப்போது, 'எம்.ஜி.ஆர்., ஒன்றும் இதைப் பாடவில்லை; வாய்தான் அசைத்தார்; பாடகர்தான் பாடினார்' என்று கூறி கிண்டல் செய்தார், அப்பாவு. சபாநாயகர் ஆசனத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை புரிந்து, மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும், அப்பாவு. எங்கள் தங்கம் திரைப்படத்துக்காக, எம்.ஜி.ஆருக்கு ஒரு பாடலை எழுதும் பணியை கவிஞர் வாலியிடம் கொடுத்திருந்தார், கருணாநிதி. அதுகுறித்து வாலியிடம் அவர் கேட்டபோது, 'நான் அளவோடு ரசிப்பவன்' என்று முதல் வரியை எழுதி விட்டேன்; அடுத்த வரியை யோசித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார், வாலி. சட்டென்று, 'அடுத்ததை நான் சொல்கிறேன் எழுதிக் கொள்ளுங்கள்...' என்று கூறி, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என, அடுத்த வரியை கவிஞருக்கு எடுத்துக் கொடுத்தார், கருணாநிதி. இப்பாடல், வாயசைக்கும் எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்டதே தவிர, பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்காக எழுதப்பட்டது அல்ல என்பதை அப்பாவு போன்றவர்கள் உணர வேண்டும். அதைப்போன்றே, 'சின்னப்பயலே...சின்னப்பயலே...' பாடலும் எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்டதே!ஒரு விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பேசுவதும், அதே விஷயத்தை பிறருக்கு எதிராக மடைமாற்றம் செய்வதும் தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை. இதையெல்லாம் பார்க்கும்போது...'காட்டுப்புலியை வீட்டில் வச்சாலும்கரியும் சோறும் கலந்து வச்சாலும்குரங்கு கையில் மாலையை கொடுத்து கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது' எனும் எம்.ஜி.ஆர்., பாடல் தான் நினைவுக்கு வருகிறது!

முயற்சி செய்யட்டும்!

கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நுாற்றாண்டு கடந்தும் இயங்கும் அரசுப் பள்ளிகள், 2,238 உள்ளதாக கூறி, மாவட்டத்துக்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து, நுாற்றாண்டு விழா கொண்டாடி வருகிறது, தமிழக அரசு. உண்மையில், அப்பள்ளிகளின் நிலையை நேரில் ஆய்வு செய்தால் தான் தெரியும்... அவை எந்த நிலையில் இயங்கி வருகின்றன என்று!தி.மு.க., இதற்கு முன் ஐந்து முறை ஆட்சியில் அமர்ந்து இருந்தும், தற்போது ஆறாவது முறையாக ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு தரம் உயர்த்தப்படவில்லை என்பதே உண்மை!கடந்த 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற புதிதில், டில்லி சென்ற தமிழக முதல்வர், அங்கு அரசுப் பள்ளிகள் எப்படி இயங்குகின்றன என ஆய்வு செய்து வந்தவர், 'தமிழகத்திலும் அதுபோன்று அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்' என்று பேட்டி அளித்தார்.ஆனால், இன்றுவரை ஓர் அரசு பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், சட்டசபை கேள்வி நேரத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 'மாணவர்களின் தலை தப்பிக்கவே, மரத்தடியில் வகுப்புகள் நடத்துகிறோம்' என, சிறிதும் வெட்கம் இன்றி கூறுகிறார். ஆட்சியில் அமர்ந்த ஜோரில், 'தமிழக அரசுப் பள்ளிகளை, டில்லி அரசு பள்ளிகளைப் போன்று தரம் உயர்த்துவோம்' என்று கூறியவர்கள், நான்கு ஆண்டுகள் கடந்த பின், 'மாணவர்களின் தலை தப்பிக்கவே, மரத்தடியில் வகுப்பு நடத்துகிறோம்' என்கின்றனர்.மது விற்பனையில் ஆண்டுதோறும், 50,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அரசு, அதில் பாதியை பள்ளிகளின் உட்கட்டமைப்புக்கு செலவு செய்திருந்தால் கூட, இன்று மரத்தடியில் மாணவர்கள் கல்வி பயிலும் அவலம் ஏற்பட்டு இருக்காது! எனவே, தற்போதுநுாற்றாண்டு விழா கொண்டாடும் பள்ளிகள் நினைவுச்சின்னங்களாக மாறும்முன், அவற்றின் தரத்தை உயர்த்த, தமிழக பள்ளிக் கல்வித் துறை முயற்சி செய்யட்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை