உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / விவாதிக்க யாரும் தயாராக இல்லையே?

விவாதிக்க யாரும் தயாராக இல்லையே?

கே.என்.ஸ்ரீதரன், பெங்களுரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்கள் அனைத்தும், லோக்சபா தேர்தல் தொடர்பாகவே நடைபெறுகின்றன.'கூட்டணி அமைப்பதில் ஏன் தாமதம், எந்த கூட்டணி வலுவான கூட்டணி, யார் யாருடன் சேருவர்' என்று, உத்தேச விவாதங்களாகவே நடக்கின்றன.இந்த ஊடகங்கள், தேர்தல் களத்துக்குச் சென்று, மக்களை சந்தித்து, அவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, உண்மைகளை வெளியில் சொல்வதில்லை. குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சாதகமாகச் செயல்படுகின்றன.பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு, தமிழகம் முழுதும் அமோக வரவேற்பு இருந்ததை, நான் தமிழகம் வந்தபோது பார்த்தேன். ஆனால், தமிழக, 'டிவி'க்கள் அதை பெரும்பாலும் இருட்டடிப்பு செய்து விட்டதாகவே தோன்றுகிறது.வட மாநில, 'டிவி'க்கள் அதை சிலாகித்துப் பேசியதையும் பார்த்தேன்.தமிழகத்தில், பிரதமர் மோடியை கிட்டத்தட்ட ஒரு வில்லன் போல சித்தரிப்பதைப் பார்த்தால், பூனை தன் கண்ணைக் கட்டியபடி, உலகமே இருண்டது என்று சொல்வதைப் போல இருக்கிறது.ஏனெனில், தமிழகத்தில் ஒரு பக்கம் மது பழக்கமும், போதை கலாசாரமும், இளைஞர் சமுதாயத்தை சீரழித்து கொண்டிருக்கின்றன; மறுபக்கம், பெண்களுக்கு பாதுகாப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுபற்றியெல்லாம் யாரும் விவாதிக்கத் தயாராக இல்லையே?

வங்கிகள் படுத்தும் பாடு!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்றைய நாளில், கையிருப்பு உள்ளதோ இல்லையோ, வங்கியில் குறைந்த பட்சம் ஒரு கணக்கு இருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. பெரும்பாலான தனியார் வங்கிகளில், சாதாரண சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்சம் இருப்பு வைக்க வேண்டியது கட்டாயம்; இல்லாவிட்டால் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து விடுகின்றனர்.குறைந்த பட்ச இருப்பு வைக்க முடியாதவர்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறுஞ்செய்தி அடிக்கடி அனுப்பப்பட்டு, மன ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஏழை, எளியவர்கள், கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்று பிற வருமானங்கள் இல்லாதவர்கள், ஓய்வு ஊதியங்கள் பெறாதவர்கள் போன்றோரிடம், 'குறைந்தபட்ச வைப்பு நிதியை கணக்கில் வையுங்கள்' என்றால், எப்படி சாத்தியம்?இந்த தொந்தரவு தாங்காமல், நானே என் வங்கி கணக்கை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைக் காரணம் காட்டி ஏழை, எளியவர்களின் கணக்கில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் சுரண்டி எடுப்பது, வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.வேலையில் இருக்கும் போது சம்பள கணக்கு என்று சொல்வர்; வேலை போய்விட்டாலோ அல்லது ஓய்வு பெற்று விட்டாலோ, சம்பளம் வரவு வைப்பது நின்றுவிடும். உடனே, 'உங்கள் சம்பளம், உங்கள் கணக்கில் வருவதில்லை. உங்கள் கணக்கை, சாதாரண சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளுங்கள்' என்பர்.மாற்றிய பிறகு குறைந்த பட்ச வைப்புத் தொகை இல்லையென்றால், பிடித்தம்செய்ய துவங்கி விடுவர். இதே போன்று, 'நீங்கள் வங்கிக்கே வர வேண்டாம். எல்லா சேவைகளுக்கும் கார்டையே உபயோகித்துக் கொள்ளலாம்' என்று சொல்லி, கார்டு கொடுப்பர்.பிறகு, கார்டு சேவை கட்டணம், புதிய கார்டு வழங்க கட்டணம் என்று பிடித்தங்கள் செய்ய துவங்கி விடுவர்.கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், வங்கிக்கு வருவதில்லை என்பதால், வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டனர்.மீதமுள்ள ஊழியர்களுக்கும், 'இத்தனை புதிய கணக்குகளை துவங்க ஆர்டர் பிடியுங்கள்; பாலிசி விற்பனை செய்யுங்கள்' என, 'டார்கெட்' கொடுத்து விடுகின்றனர். என்ன பிழைப்பு இது?மத்திய நிதி அமைச்சகம்,இந்திய ரிஸர்வ் வங்கி போன்ற அமைப்புகள், இது போன்ற பிரச்னைகளை தீர ஆய்வு செய்து, வாடிக்கையாளர் விரோத செயல்பாடுகளை களைய வேண்டியது அவசியம். 

கூட்டணிக்கு புதிர் போடும் வயநாடு!

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ------------------------------------------கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில், 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எம்.பி.,யாக ஜெயித்தவர் காங்., ராகுல். வரும் தேர்தலுக்கும் அவரே வேட்பாளர்.தேசிய அளவில், பா.ஜ.,வுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும், காங்.,குடன் கம்யூனிஸ்ட்கள் உள்ளனர்; கேரளாவில் மட்டும் எதிரி.கேரளாவில் இ.கம்யூ., வேட்பாளராக ஆனி ராஜாஅறிவிக்கப்பட்டுள்ளார். கண்ணுார் மாவட்ட, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்; கம்யூ., தலைவர் டி.ராஜாவின் மனைவி; பரம்பரை கம்யூனிஸ்ட்; பெண்ணுரிமை போராளி.இவரது பெயரை அறிவித்த பின், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்.,கின் கேரள நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.'ராகுல், கேரளாவில் கம்யூ.,வை எதிர்த்து போட்டியிட்டால், பல பிரச்னைகள் உருவாகும்; பா.ஜ., வலுவாக உள்ள கர்நாடகாவில் அவர் போட்டியிடலாமே...' என, பலரும் கருத்து கூறுகின்றனர்.ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில், போட்டியிட்ட 16 தொகுதிகளுள், 15 தொகுதிகளில் வென்றதுகாங்., கூட்டணியினர் கூடுதலாக நான்கு தொகுதிகளை வென்றுக் கொடுத்தனர்.இம்முறையும் அதே அளவு வெற்றி கிடைக்கும் என அக்கட்சி நினைக்கிறது. கேரள மாநிலத்தில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சி, கொஞ்சம் இறங்கி வந்தால், தேசிய அளவில், 'இண்டியா' கூட்டணிக்கு நல்லது.

சட்ட வல்லுனர் குழு அமைக்கப்படுமா?

ஆர்.குமார், அம்மாபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபகாலமாக, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரிவர செயல்படவில்லை என்றே தோன்றுகிறது. காரணம், நிறைய காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகங்களில், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகை ஆகியவற்றை தயார் செய்வதற்கான சட்ட வல்லுனர் குழு பற்றாக்குறையாக உள்ளது.இதனால், குற்ற வழக்குகள் நீதிமன்றம் செல்லாமல் தேங்கி கிடப்பதால், குற்றவாளிகளும் இதை பயன்படுத்தி, ஜாமின் பெற்று மீண்டும் மீண்டும் அதே குற்றங்களை செய்து பழகி விடுகின்றனர்.நானும் ஒரு பணம் மோசடி வழக்கில் பாதிக்கப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குற்ற ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்காமல் இழுத்தடிக்கின்றனர். காரணம் கேட்டால், 'லீகல் அட்வைசர்' இல்லை சட்ட வல்லுனர் குழு இல்லை என்று கூறுகின்றனர்.எனவே, ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சட்ட வல்லுனர் குழுவை ஏற்படுத்தி, கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை