உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தியாக சீலரா சோனியா?

தியாக சீலரா சோனியா?

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த 2004ல், தான் பிரதமராக பதவியேற்க மறுத்தது குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, தன் சுயசரிதை புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார். முதலில், சோனியா பிரதமராக பதவி ஏற்க மறுத்தாரா என்ற கேள்விக்கே இங்கே இடமில்லை. ஏனெனில், சோனியா பிரதமராவதை, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, இன்று, ‘இண்டி’ கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவி மம்தா போன்றோரும், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்த்தனர். அதுமட்டுமல்ல... காங்., கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த சரத் பவார், பி.ஏ.சங்மா மற்றும் தாரிக் அன்வர் போன்றோர், சோனியா பிரதமராவதை விரும்பாமல் கடுமையாக எதிர்க்கவே, அவர்களை கட்சியிலிருந்து நீக்கினார், சோனியா. காங்கிரசிலிருந்து பிரிந்த அவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தனர். மேலும், அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், சோனியாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டார் என்ற செய்தி, நாடு தழுவிய அளவில் வலம் வர ஆரம்பித்தது. பிரதமராக தான் பதவி ஏற்க முடியாது என்பதை ஐயமின்றி தெரிந்து கொண்ட பின் தான், பிரதமர் பதவிக்கும் மேலான, ‘தேசிய ஆலோசனைக் குழு’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக தன்னைத்தானே நியமித்துக் கொண்ட சோனியா, ‘டம்மி’ பிரதமராக மன்மோகன் சிங்கை நியமித்தார். பிரதமர் பதவிக்குரிய அத்தனை அதிகாரங்களையும், செயல்பாடுகளையும் சோனியாவே கையாண்டார். வெளிநாட்டு அதிபர்கள் நம் நாட்டிற்கு வரும்போது, மன்மோகன் சிங்கை பொம்மை போல் உடன் வைத்து, அதிகாரிகளின் துணையுடன் சோனியாவே அவர்களுடன் பேச்சு நடத்தி முடிவுகள் எடுத்தார்; 2004- – 14 வரை பத்தாண்டுகள் இதுதான் நடந்தது. ‘நீங்கள் தடுக்கிலே நுழைந்தால், நான் கோலத்திலே நுழைவேன்’ என்பது போன்று, வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறி, சோனியா பிரதமர் ஆவதை எதிர்க்கட்சிகள் தடுத்தன; ஆனால் சோனியாவோ, தேசிய ஆலோசனை குழு தலைவராகி, பிரதமருக்கான அத்தனை அதிகாரங்களையும் குறுக்கு வழியில் அனுபவித்தார். உண்மை இவ்வாறு இருக்க, பிரதமர் பதவியை மறுத்து தியாகம் செய்தது போல், தன் சுயசரிதையில் கதை விட்டுள்ளார், சோனியா. இதன் வாயிலாக, தன்னை பெருந்தன்மையாளராகவும், தியாக தலைவியாகவும் காட்டிக் கொள்ள முனைந்துள்ளார். காங்., ஆட்சியின் கடைசி பத்தாண்டுகள் எப்படி இருந்தன என்பது இன்றைய இளைஞர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமா தெரியாமல் இருக்கும்? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை