மேலும் செய்திகள்
திண்டாடும் கேரளா!
15-Mar-2025
எஸ்.சங்கீதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை - கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், யு-டியூபர்சவுக்கு சங்கர் வீட்டை ஒரு கும்பல் முற்றுகையிட்டு, சேதப்படுத்தியதோடு, வீடு முழுதும் மனித கழிவுகளை வீசிச் சென்றுள்ளனர்.'இது காங்கிரஸ் கட்சியினரின் வேலையாக இருக்கும்' என, சந்தேகப்படுவதாக சவுக்கு சங்கர் கூறியதும், அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகைக்கு கோபம் வந்து விட்டது.'இந்தியாவிலேயே எங்கும் இல்லாத, அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். இத்திட்டத்தில் தவறு இருந்தால், துறை அதிகாரியிடம் முறையிடலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உண்மையை வெளிக்கொணரலாம். அதைவிடுத்து, திட்டத்தின் பயனாளிகளை கொச்சைப்படுத்துவதுபோல், 'குடித்து விட்டு துாங்குகின்றனர், தகுதி இல்லாதவர்கள், மலம் அள்ளுபவர்கள்' என பேசக் கூடாது அல்லவா? அவரது வீட்டில் மனித கழிவுகளை வீசியவர்கள் எவரிடமாவது காங்., கட்சி உறுப்பினர் கார்டு இருக்கிறதா? இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள்' என்று கூறியுள்ளார். ஐ.டி., கம்பெனி அலுவலர்கள் தான், பணிபுரியும் நேரத்தில் தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கழுத்தில் அணிந்தபடி பணிபுரிவர்.தொழில் முனைவோர் திட்ட பணியாளர்களோ, காங்., கட்சியினரோ கழுத்தில் அடையாள அட்டையை அணிந்து, பவனி வருவது கிடையாது!அத்துடன், சவுக்கு சங்கரை நீதிமன்றம் நாட சொல்லும் செல்வப்பெருந்தகை, திட்டத்தின் பயனாளிகளை அவர் கொச்சைப்படுத்தி பேசியிருந்தால், அவர் மீது வழக்கு தொடுத்து இருக்கலாமே... ஏன் வீட்டுக்குள் புகுந்து, சூறையாடி, மனித கழிவுகளை வீச வேண்டும்?நாகரிக மனிதர்கள் செய்யும் காரியமா இது?செல்வப்பெருந்தகையின் எதிர்வினையே,சங்கரின் குற்றச்சாட்டை ஊர்ஜிதப் படுத்துகிறதே! காமராஜர், கக்கன், மூப்பனார் போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் வீற்றிருந்த சத்தியமூர்த்தி பவனில், செல்வப்பெருந்தகை போன்ற ஒரு தலைவர்!ஜனநாயக வெட்கக்கேடு! எதற்காக இந்த கள்ள மவுனம்?
வி.எஸ்.ராமு,
செம்பட்டியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியர்,
ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பழைய ஓய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறாததால், கடும்
ஏமாற்றத்தில் உள்ளனர்.பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அரசுக்கு எதிராக குரல் உயர்த்தியுள்ளதுடன், அடுத்த கட்ட போராட்டத்தையும் அறிவித்து விட்டனர்.நடப்பு
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்குள், முதல்வர் ஏதாவது முக்கிய
அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்களுக்கு, 2026,
ஏப்., 1 வரை ஈட்டிய விடுப்பு, 15 நாட்கள் சரண் செய்து பணப்பலன் பெற்றுக்
கொள்ளலாம் என்ற அறிவிப்பு, இனிக்கவில்லை. 'மீண்டும் ஆட்சிக்கு வர
மட்டோம் என்பதை கணித்தே, தி.மு.க., அரசு பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளது.
2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க, தலைவர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித்
தலைவர் பதவி கூட கிடைக்காது' என்கிறது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். ஆசிரியர்
சங்க கூட்டமைப்பு செயலரோ, 'எங்களிடம், 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; 50
சட்டசபை தொகுதிகளின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம். அமைச்சர்
துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு போன்றவர்கள் தபால் ஓட்டுகளில் தான் வெற்றி
பெற்றனர்' என்கிறார். 'தேர்தல் அறிக்கையை நம்பி, தி.மு.க., அரசை தேர்ந்தெடுத்தோம்; இன்று ஏமாற்றப்பட்டுள்ளோம்' என்று குமுறுகின்றனர். அரசு ஊழியர்கள். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தி.மு.க.,விற்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இன்று
நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆதரவாக
பேசிய முதல்வர், இன்று கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கோரிக்கைகளை முன்வைத்து போராடும் போதெல்லாம், தி.மு.க., ஆதரவு சங்கங்களை வைத்து போராட்டம் உடைக்கப்படுகிறது. 'எல்லாருக்கும்
எல்லாம்' என்ற முழக்கத்துடன் வெளியாகியுள்ள தமிழக நிதிநிலை அறிக்கை, அரசு
ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'உங்கள் எல்லாருக்கும் அல்வா' என்றல்லவா
கூறுகிறது! ஒருபோதும் அரசால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகள்
என்றால், அதை முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே? எதற்காக இந்த
கள்ள மவுனம்? காங்கிரஸ் அடைந்த நன்மை என்ன?
அ.ரவீந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த, பல மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கின. இக்கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பெருமை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினையே சேரும்!இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் பிரதமர், நாம் துணை பிரதமர் என்ற கற்பனையில் மிதந்தார் ஸ்டாலின்.அதேநேரம், தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால், சிலரை திருப்திபடுத்தி, பெரும்பாலானோரை அதிருப்தியடைய வைப்பது தி.மு.க.,வின் கொள்கை!அதன்படி, சனாதன தர்மத்தை டெங்கு கொசுவுடன் ஒப்பிட்டு, அதை ஒழிக்க வேண்டும்; அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியது, பூதாகாரமாகி, வடமாநிலங்களில், இண்டியா கூட்டணியை மண்ணைக் கவ்வ வைத்தது. சிறுபான்மையினரை தாஜா செய்தால், இந்திரலோக பதவியையே பிடித்துவிடலாம்; பிரதமர் பதவி எம்மாத்திரம் என்பதுபோல், இண்டியா கூட்டணியினர் முக்கியமாக, தி.மு.க.,வினரின் செயல்பாடுகள் வடமாநிலங்களில் இலக்கை அடைய முடியாத தோல்விக்குவித்திட்டது.இந்நிலையில், தற்போது, மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்து, காங்., கட்சிக்கு வடமாநிலங்களில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது, தி.மு.க.,!இதனால் எரிச்சலடைந்துள்ள கதர் சட்டைகள், காங்., தோல்விக்கு ஏதாவது ஒரு விதத்தில் தி.மு.க., காரணமாகி விடுவதாக புலம்புகின்றனர்.மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஆ.ராசாவின் கைங்கரியத்தால், '2ஜி' ஊழலால், காங்., வெற்றி பெரிதாக பாதிக்கப்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், தி.மு.க.,வால் காங்கிரஸ் அடைந்த லாபத்தை விட நஷ்டங்களே அதிகம்! காங்., இன்று காலாவதியாகி வருவதற்கு தி.மு.க.,வும், அதன் கொள்கைகளும் ஒரு காரணமாகி வருவது அனைவரும் அறிந்த உண்மை! பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கப் புறப்பட்ட கதையாக, தி.மு.க.,வை கூட்டணியில் வைத்துக்கொண்டு, காங்., வெற்றி பெறுவது கனவிலும் நடக்காது!
15-Mar-2025