உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / திருமாவின் நிறைவேறா கனவு!

திருமாவின் நிறைவேறா கனவு!

என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒருவர் மட்டுமே இங்கு ஆளப் பிறக்கவில்லை; திருமாவளவனின் கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்' என்கிறார், வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலர், ஆதவ் அர்ஜுனா.கனவு காண, காசா, பணமா... திருமாவளவன் நன்றாக கனவு காணட்டும்;திராவிட கட்சிகள் அவர் கனவை, ஒருபோதும் நிறைவேற்றப் போவதில்லை. ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் நினைப்பது, நிச்சயம் நடக்காது. காரணம், திராவிட கட்சிகளின் தயவுஇல்லாமல், திருமாவளவனால் எம்.பி.,யாககூட முடியாது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப்போல், திருமாவளவன் தனித்துப் போட்டியிட்டால், அவரால், தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியுமா? எத்தனை இடங்களில், டிபாசிட் வாங்கியிருக்க முடியும்? ஜாதியின் பெயரால் கட்சி நடத்தும், பா.ம.க., முன்னாள் தலைவர் ராமதாசால், இதுவரை ஆட்சியைப் பிடிக்க முடிந்ததா?திருமாவளவனைப் பொறுத்தவரை, கடைசி வரை, திராவிட கட்சிகளின் தயவில்அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார். இதில், ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கனவு கண்டால், அது பகல் கனவு என்று சொல்வதை தவிர வேறு என்ன இருக்கிறது!

படித்தவர்களுக்கே விழிப்புணர்வில்லையே?

அ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபரின்மனைவி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,சமீபத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 'சமூக வலைதளத்தில் ஆன்லைன் முதலீடு விளம்பரத்தை பார்த்தேன். அதிலிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, 'வாட்ஸாப்' குழு ஒன்றில் இணைய கூறினர். பின், வாட்ஸாப்பில் வந்த, 'முதலீட்டு செயலி' ஒன்றை பதிவிறக்கம் செய்தேன். 'அவற்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்என ஆசைவார்த்தை கூறியதால், பல்வேறு தவணையாக, 10.27 கோடி ரூபாய் செலுத்தினேன். செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும்,முதலீடு செய்யப்பட்டது போலவும் செயலியில் காண்பித்தது.'பின், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, வாட்ஸாப் குழுவில்இணைத்தவர்கள்பல்வேறு காரணங்களை கூறி, மேலும் பணம் கேட்டு வற்புறுத்தினர். அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்' என்று கூறியுள்ளார். அவருக்கு சில கேள்விகள்... உங்கள் கணவர் ஒரு தொழிலதிபர். இதை வைத்துப் பார்க்கும்போது,அவர் மனைவியான நீங்கள்குறைந்தது ஒரு பட்டப்படிப்பாவது படித்திருப்பீர்கள்; நல்லது கெட்டது தெரியும். இம்மாதிரி ஏமாற்று வேலையைபலர் செய்திருக்கின்றனர்என நாளிதழ்களில் படித்திருப்பீர்கள்.பணம் முதலீடு செய்தால்லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறினால்,அதை நீங்கள் நம்பலாமா?10.27 கோடி அனுப்பினால்,அதை எதில் முதலீடு செய்கின்றனர், எப்படி லாபம் வரும் என்றுஎல்லாம் அவர்களிடம் ஏன் கேட்கவில்லை? பணம் அனுப்பியது உங்கள் கணவருக்கு தெரியுமா? அப்படி தெரிந்துஇருந்தால், அது மோசடி எனக் கூறி அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? லாபம் கிடைக்கும் என்றால்தொழிலதிபராக இருக்கும்உங்கள் கணவரிடம் பணத்தை கொடுத்து தொழிலை விருத்தி செய்திருக்கலாமே!'மரத்தில் உள்ளமாங்காயை விட, கையில் உள்ள களாக்காய் மேல்' என, நீங்கள் ஏன் எண்ணவில்லை? படிக்காத பாமர மக்கள் ஏமாந்தால் அதில் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் மெத்தப்படித்த உங்களைப் போன்றவர்கள்ஏன் ஏமாறுகிறீர்கள்? குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க யார் சொல்லிக் கொடுத்தாலும் அது ஏமாற்று வேலை என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை?'இம்மாதிரி செயல்களை கண்டு ஏமாறாதீர்கள்' என,காவல்துறை தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. அதேபோல்,ரிசர்வ் வங்கியும்பத்திரிகைகளில் அடிக்கடி விளம்பரம் செய்கிறது. இத்தனைக்கும் மேலாக பிரதமர் மோடி தன்,'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியிலும் எச்சரிக்கை செய்துள்ளார்.'செயலி என்ற பாழும் கிணறு உள்ளது. அதில் விழாமல் தள்ளிப் போங்கள்' என எச்சரித்தால்,'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது...' என நினைத்து அதில் விழுந்து விட்டு, 'அய்யோ... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்...' என அலறுவது, எந்த விதத்தில் நியாயம்? இதற்கு ஒரே வழிதான் உண்டு... இம்மாதிரி தவறானசெயலிகள் வரும்போது, போலீசாரை அணுகினால்,அவர்கள் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, உங்களை இக்கட்டில் இருந்து காப்பாற்றுவர்; உங்கள் பணமும் பாதுகாக்கப்படும்.

'டி மிக்கி'யை தவிர்க்க இதை செய்யலாமே!

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழகஅரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும், பணிக்கு வராமல், 'டிமிக்கி'கொடுக்கும் மருத்துவர்கள்மற்றும் செவிலியர்கள், கட்டாயமாக எட்டு மணி நேரம் பணியில் இருக்க வேண்டும் என்றும், அதை கண்காணிக்க, 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படும் என்றும், பொது சுகாதாரத்துறைஇயக்குநர் கூறியுள்ளார். வழக்கம் போல, மருத்துவசங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும், எட்டு மணி நேரம் பணியில் இருக்க வேண்டும் என மத்திய அரசு, ஆணை பிறப்பித்தது. பின்னர், சிலரின் எதிர்ப்பால், அந்த ஆணை, மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கும், பிற மருத்துவமனை ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. பின்னர், மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும் அந்த உத்தரவு பொருந்தும் என்று மாற்றப்பட்டது.'சிசிடிவி' கண்காணிப்பையும் மீறி பலர், 'டிமிக்கி' கொடுத்ததால், 'அனைவரும் தங்கள் ஆதார் அட்டை எண்ணுடன், கைரேகையை பதிவு செய்ய வேண்டும்' என, ஆணை பிறப்பித்தது. இடையில் வெளியே செல்ல நேர்ந்தால் அந்த கைரேகை பதிவு இயந்திரத்தின் மூலம் 'பன்ச்'செய்ய வேண்டும் என ஆணை வந்தது. இதனால்பலரும், 'டிமிக்கி' கொடுத்து விட்டு வெளியே செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.இதே நடைமுறையை தமிழக அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வர வேண்டும். பல மருத்துவர்கள், அரசு பணியில் இருந்து கொண்டு, பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளிலும், தனி கிளீனிக் வைத்தும் பணியாற்றுகின்றனர் எனும் குற்றச்சாட்டு குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sree
நவ 25, 2024 08:57

இவருக்கு ஒரு கனவு


Anantharaman Srinivasan
நவ 24, 2024 23:20

திருமா...ஆட்சியில் பங்கு என்று முரண்டு பிடித்தால் திமுக விசிக வை கழட்டிவிட்டுவிடும்.


D.Ambujavalli
நவ 24, 2024 07:53

ஒருவேளை இந்த அம்மா, கணவருக்குத் தெரியாமல் ' சிறுவாடு ' சேர்த்து, தனியாக சொத்து வாங்க எண்ணி இப்படி ஏமாந்தாரோ என்னவோ? பாவம் திருடிக்குத் தேள் கொட்டியது போல இருந்திருக்கலாம் போலீசுக்கு-போய் கணவரிடமும் 'பாட்டு' வாங்கியிருப்பார்


புதிய வீடியோ