உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது மன்னராட்சி அல்ல!

இது மன்னராட்சி அல்ல!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது; போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது' என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.'முதல்வர் ஸ்டாலினை, அவருடைய இல்லத்தில் ரகசியமாக சந்தித்து அதானி பேசியுள்ளார். அந்த ரகசிய சந்திப்பின்நோக்கம் என்ன?' என்று கேள்வி எழுப்பினார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.'பழனிசாமியின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையும், அவசியமும் இல்லை' என பதிலளித்த ஸ்டாலின், ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டிற்கு, 'அவருக்கு வேறு வேலையே இல்லை; தினந்தோறும் எதையாவது சொல்லிக்கொண்டு இருக்கிறார்' என்று பதில் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டாலோ, குற்றச்சாட்டு கூறினாலோ, கோபத்தில் முதல்வருக்கு முகம் சிவந்து விடுவது ஏன்?அவரை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா என்ன? மக்கள் பிரதிநிதி தானே... மன்னர் இல்லையே?இவரது தந்தை கருணாநிதி, விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார் தெரியுமா... ஒருமுறை, அரசியல் விமர்சகரும், துக்ளக்இதழின் முன்னாள் ஆசிரியருமான சோ, 'ஊழல், வன்முறை, ஆட்சியை விமர்சிப்போரை தாக்குவது எல்லாமே தி.மு.க., துவங்கி வைத்தவை தான்' என்று கருணாநிதியை குற்றம்சாட்டினார்.இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் ஒருவர், கருணாநிதியிடம் கேட்ட போது, 'தி.மு.க., என்றாலே அலர்ஜி, ஒவ்வாமை எனக் கருதி எழுதி, பேசிவரும் நண்பர் ஒருவரிடமிருந்து வெளிப்படும் கருத்துக்களை, நான் வெறுப்புடன் எதிர்கொள்வதில்லை; வேடிக்கையாகவே எடுத்துக் கொள்கிறேன்' என்று பதில் அளித்தார்.அதேபோன்று, ஒருசமயம், திரையுலகபிரமுகர்கள் கருணாநிதியிடம் பேட்டி கண்டனர். அதில், நடிகர் விஜய், 'நீங்கள் சிறு வயதில் வீட்டில் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றி இருக்கிறீர்களா? நல்ல பிள்ளையாக இருந்தீர்களா, இல்லை சேட்டை செய்யும் பிள்ளையாகஇருந்தீர்களா?' என, கேள்வி கேட்டார்.அதற்கு, 'சிறு வயதிலேயே, ஈ.வெ.ரா., பின்னால் ஓடும் பிள்ளையாக, வீட்டார், தெருவினர், ஊரார் என, எல்லாரும் என்னை வெறுப்போடு பார்த்து, 'இது உருப்படாது' என்று சாபம் கொடுத்துக் கொண்டிருந்ததை, அப்போதே நான் கேள்விப்படாமல் இல்லை' என்றார், கருணாநிதி. 'முத்துவேல் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் எனும் நான்' என்று முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டும் போதுமா... அவரின் திறமையான பேச்சை இன்று வரை ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லையே!கருணாநிதியை போல், ஸ்டாலின் விமர்சனங்களை வரவேற்க வேண்டுமே தவிர, இப்படி அலட்சியமாக பதில் கூறக் கூடாது. எதிர்க்கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது, ஒரு முதல்வரின் கடமை. காரணம், இது மன்னராட்சி அல்ல; மக்களாட்சி!

குற்றங்கள் குறைய போவதில்லை!

ஆர். கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பிரமணியன், ஆசிரியர்,(பணி நிறைவு), புதுச்சேரியில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,தென்காசி மாவட்ட சங்கரன் கோவிலில், உண்டியல் காணிக்கை பணம் எண்ணும்போது, பணத்தை திருடியதாக பெண்ஏட்டு உட்பட, நான்கு பேர் கைதாகி உள்ளனர். ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, லஞ்சப்பணத்துடன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் ஆகி,காத்திருப்பு பட்டியலில்இருந்த நிலையில், இரண்டேவாரத்தில், மீண்டும் புதிய இடத்தில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், கள்ளச்சாராய மரண வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் மேல், ஒழுங்கு நடவடிக்கை இல்லாமல், மீண்டும் பணி அமர்த்தப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்து உள்ளது. இது குறித்து, நம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என்ன கூறுகிறார் தெரியுமா...'தவறு செய்து சஸ்பெண்ட் ஆகும் அதிகாரிகளை, மீண்டும் பணியில் அமர்த்தாமல் என்ன செய்வது? ஒரு அதிகாரியையோ,போலீசையோ காலத்துக்கும்தண்டித்துக் கொண்டே இருக்க முடியுமா... ஆறு மாதங்களுக்குப் பின், சஸ்பெண்ட், ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெற்று, மீண்டும் பணி வழங்க தான் வேண்டும்' என்று குற்றம் புரியும் அதிகாரிகளுக்கு வக்காலத்துவாங்கி உள்ளார். ஐயா சட்ட அமைச்சரே...ஊழல் வழக்கில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது, பணிநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்காமல், வெறும் கண் துடைப்புக்காக இடைநீக்கம் செய்து, மீண்டும் அதே பதவியில் தொடர அனுமதித்தால், யார் தான் தவறு செய்ய பயப்படுவர்? பணி நீக்கம் எனும் கடுமையான தண்டனை இருந்தால் தானே, குற்றத்திற்கு துணை போக பயப்படுவர்? இதுபோன்ற கடினமான தண்டனை இல்லாததால் தானே, வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல்துறையின் பெண் ஏட்டே, கோவில் உண்டியல் பணத்தை திருடியுள்ளார்!சஸ்பெண்ட் செய்யப்படுவதால், இந்த அதிகாரிகள் பெரிதாக என்ன பாதித்து விடுகின்றனர்... சஸ்பெண்ட் ரத்துசெய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்தவுடன், சஸ்பெண்ட் காலத்தில் இழந்த பாதி சம்பளத்தை, நிலுவைத் தொகையாக பெறுகின்றனர். இதில், எங்கே அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்? சொல்லப்போனால், சஸ்பெண்ட் காலத்தில், முழு ஓய்வு எடுப்பதுடன், 'மீண்டும் சிக்கிக் கொள்ளாமல் எப்படிதவறு செய்வது' என்று சிந்தித்து செயல்படுத்துவர். எது எப்படியோ, உங்களைப் போன்ற ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் உள்ள வரை, தவறுசெய்யும் அதிகாரிகள்திருந்தப் போவதுமில்லை;குற்றங்கள் குறையப் போவதும் இல்லை!

பதில் கூறுவாரா?

ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய 'இ - -மெயில்' கடிதம்: 'மதவாத சக்திகளை தமிழகத்தில் அண்ட விடாமல் தடுக்கவே, கடந்தஏழு ஆண்டுகளாக, தி.மு.க.,கூட்டணியில் அங்கம் வகிக்கிறது ம.தி.மு.க.,' என,அக்கட்சியின் அமைப்பு செயலர் துரை வைகோ கூறியுள்ளார்.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிப்பதற்கான காரணத்தை கூறிய துரை, தி.மு.க.,வை வாரிசு கட்சியாக மாற்ற பார்க்கிறார்கருணாநிதி என்று குற்றஞ்சாட்டி, விலகி, ம.தி.மு.க.,எனும் தனிக்கட்சி ஆரம்பித்த தங்கள் தந்தை வைகோ, தற்போது கருணாநிதியின் கொள்ளுப் பேரன் வரை, அடுத்த முதல்வர் என்று கோஷம் போடுவதை, ம.தி.மு.க., ஆதரிக்கிறதா என்பதையும்தெளிவுபடுத்த வேண்டும்.மது ஒழிப்பிற்காக நடை பயணம் மேற்கொண்ட வைகோ, கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய மரணத்திற்கு மறந்தும் கூட கண்டனம் தெரிவிக்காத மர்மத்தையும்கொஞ்சம் விளக்க வேண்டும். 'சிகரெட் கம்பெனி ஏஜென்சிகளை எடுத்து, என் மகன் பிழைத்துக் கொள்வார்; அவர் அரசிய லுக்கு வர மாட்டார்' என்ற வைகோ, தற்போது ம.தி.மு.க.,வின் அடுத்த வாரிசாக உங்களை முன்னிலைப் படுத்திய ரகசியத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம், துரை வைகோ விளக்கம் கூறுவாரா அல்லது இது போன்ற அறிக்கையால் மட்டுமே ம.தி.மு.க.,வை வாழ வைத்துக் கொண்டிருப்பாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Anantharaman Srinivasan
டிச 07, 2024 20:53

சொரணையற்று போனதால் தான் மீண்டும் திமுக–வை அண்டி பிழைக்கின்றனர்.


Anantharaman Srinivasan
டிச 07, 2024 20:52

அதிகாரிகளை லஞ்சம் வாங்க ஊக்குவிப்பபதே மந்திரிகள் தானே. அப்புறம் எப்படி full தண்டனை வாங்கிக்கொடுப்பர்.


Anantharaman Srinivasan
டிச 07, 2024 20:44

கருணாநிதியின் திறமையான பேச்சை இன்று வரை ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லையே சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் தெரியாதோடி நோக்கு..??


RAMESH
டிச 07, 2024 18:58

வாரிசுகளின் கூடாரம் திமுக மற்றும் மதிமுக..... கொள்கை யற்ற கூட்டணி திமுகவின் கூட்டணி....ஊழல் போதை அராஜகம்..,.. சட்டம் ஒழுங்கு சீர்கேடு... மக்கள் விரோத ஆட்சி... பயனற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்... இன்னும் பல


V K Saravanan
டிச 07, 2024 10:31

நீங்கள் சொன்னது உண்மை


sankar
டிச 07, 2024 09:32

ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் - தமிழக அரசியல் என்பது ஒரு சாக்கடை - எம்ஜியார் கட்சி ஆரம்பித்தார் - பின்னர் கருணாநிதியுடன் இருந்த அத்தனை ஊழல்வாதிகளும், பாவு சண்முகம், நாவலர் என்று அதனை பெரும் அவருடன் சேர்ந்து புனிதர் ஆனார்கள் - இப்போது பாருங்கள் - பத்து ரூபாய் பாலாஜி, கண்ணப்பன் என்று பல அதிமுக உத்தமர்கள் ஸ்டாலினுடன் - கர்மவீரர் சொன்னது போல இரண்டுமே ஒரு குட்டையில் ஊறிய இரு மட்டைகள்


Dharmavaan
டிச 07, 2024 09:18

ஊழல் அதிகாரிகளை திரும்ப சேர்த்துக்கொள்ள காரணம் இவங்களுக்கு பங்கு வருகிறது என்பதே .


VENKATASUBRAMANIAN
டிச 07, 2024 08:09

வைகோ குடும்ப அரசியலை எதிர்த்து விட்டு இப்போது தம் மகனுக்காக கடசியையே அடகு வைத்து விட்டார். தீக்குளித்த குடும்பம் அனாதை ஆகி விட்டது. தொண்டர்கள் என்று கூறுபவர்கள் இதை சிந்திக்க வேண்டும். எல்லோருக்குமே அவர்கள் குடும்பம்தான் முக்கியம். நீங்கள் மட்டும் ஏன் இப்படி


D.Ambujavalli
டிச 07, 2024 06:36

சஸ்பென்க்ஷன் என்பதெயெல்லாம் யாரும் அவமானமாக எண்ணுவதேயில்லை. அடுத்து அதே துறையில் பதவி உயர்வுடன், இன்னும் ஊக்கமாக. விலைப்பட்டியலை உயர்த்தி லஞ்சம் வாங்க வசதி செய்து கொடுக்கிறது அரசு எண்கள் துறையில் ஒருவர் இந்த பணியிடை நீக்க காலமாக 6 மாதத்தில் தன் மேற்பார்வையில் அழகாக வீடு கட்டி கிருஷப்பிரவேசமும் செய்துவிட்டார் அதில் வேடிக்கை என்னவென்றால் சஸ்பெண்ட் செய்த மேலதிகாரிதான் சிஎப் கெஸ்ட் ?


RAMAKRISHNAN NATESAN
டிச 07, 2024 06:32

யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்கிற மனப்பான்மை, அதிகார ஆணவம் தலைதூக்குகிறதல்லவா ???? இதற்குத் தீர்வு என்ன ???? பிரதமராக இருந்தாலும் சரி .... முதல்வராக இருந்தாலும் சரி ..... வேறெந்த மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் சரி ..... அவர்களுடைய செயல்பாடுகள் வாக்களித்த மக்களுக்குத் திருப்தி தராவிட்டால் அவர்களது பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்படவேண்டும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை