உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / எங்கிருந்து வந்தனர் போலி வாக்காளர்கள்?

எங்கிருந்து வந்தனர் போலி வாக்காளர்கள்?

ஆர்.ராமச்சந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மஹாராஷ்டிரா லோக்சபா தேர்தலில் அபார வெற்றி பெற்றோம். ஆனால், சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தோம். இதில், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். மாலை, 5:30 மணிக்கு பின், ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் அலைமோதியதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன், காங்., நடத்திய கருத்து கணிப்பில், 16 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது; ஆனால், 9 இடங்களிலேயே காங்., வெற்றி பெற்றது. வெற்றி வாய்ப்புள்ள ஏழு தொகுதிகளில் தோல்வி அடைந்தோம். 'அதேபோன்று, பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியை ஆய்வு செய்தோம். இத்தொகுதியில் காங்., 1 லட்சத்து, 15,588 ஓட்டுக்களை பெற்றது. பா.ஜ., 2 லட்சத்து, 29,632 ஓட்டுக்களை பெற்றது. ஆய்வில், மகாதேவபுரா சட்டசபை தொகுதியில், 1 லட்சத்து, 250 ஓட்டுக்கள் திருடப்பட்டதை கண்டுபிடித்தோம். 'அதாவது, அனைவருமே போலி வாக்காளர்கள். இதில், 11,965 வாக்காளர் களின் பெயர் இருமுறை பதிவாகி உள்ளது. 40,009 வாக்காளர்களின் முகவரி கள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் உள்ளன. 'புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான, 'படிவம் - 6' ஆவணத்தை, 33,692 பேர் தவறாக பயன்படுத்தி உள்ளனர். தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண், '0' என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒற்றை படுக்கை அறை வீடு கொண்ட முகவரியில், 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்தை பார்வையிட்டபோது, அங்கு யாருமே வசிக்கவில்லை' என, துப்பறியும் கதையில் வரும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரம் போல் கண்டுபிடித்து, புலம்பியுள்ளார், காங்., - எம்.பி., ராகுல். குற்றவாளிகள் எவ்வளவுதான் எச்சரிக்கையோடு செயலாற்றினாலும், ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வது வழக்கம். அதுபோல், மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில் தேர்தல் ஆணையம், காங்., கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளது போல், புள்ளி விபரங்களை அடுக்கி கொண்டே வந்த ராகுல், 'கர்நாடகாவில் ஒரே நபர், பல பூத்களில் ஓட்டு போட்டுள்ளார். இப்படி பலர் ஓட்டு போட்டுள்ளனர்' என்று உளறி கொட்டி விட்டார். கர்நாடகாவில் தற்போது நடந்து கொண்டிருப்பது காங்., ஆட்சி. இப்படி திருட்டுத்தனம் செய்து, ஒரே நபர் பல பூத்களில் போட்ட ஓட்டில் தான் வெற்றி பெற்று காங்., ஆட்சியில் அமர்ந்துள்ளது என்று சந்தேகிக்கலாம் அல்லவா? 'பெங்களூரு மத்திய பார்லிமென்ட் தொகுதியில், 1லட்சத்து, 250 வாக்குகள் திருடப்பட்டு உள்ளது. இப்படி நாடு முழுதும் எவ்வளவு ஓட்டுகள் களவாடப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்...' என்று வேறு கூறியுள்ளார், ராகுல். ஒரு தொகுதியில், 1லட்சத்து, 250 ஓட்டுகள் திருடப்பட்டுள்ளது என்றால், 544 தொகுதிகளுக்கு, 54 கோடியே, 536 லட்சம் ஓட்டுகள்! நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையே,140 கோடிகள் தான். அதில், 54 கோடி போலி வாக்காளர்களை திணிக்க வேண்டுமென்றால், அவர்களை எந்த நாட்டிலிருந்து கொண்டு வருவது? வங்கதேசத்தில் இருந்தா, மியான்மரிலிருந்தா அல்லது இத்தாலியில் இருந்தா?

தமிழகத்தில் மலரும் தாமரை!

ஜெ.பொன்மணி, செங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் திராவிட மண்; ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களால் பண்பட்டுள்ள இம்மண்ணில், பிரதமரோ, அவருடைய சகாக்களோ காவி கட்டிக் கொண்டு எத்தனை முறை வந்தாலும் இங்கே காலுான்ற முடியாது' என்று கூறியுள்ளார், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு. கடந்த 1984ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில், வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெற்றபோது, 'இக்கட்சி எல்லாம் வளர்ந்து ஆட்சியை பிடிப்பது சாத்தியமே இல்லை' என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, படிப்படியாக வளர்ந்து, வாஜ்பாய், 6 ஆண்டுகளும், மோடி, 11 ஆண்டுகளும் என மொத்தம், 17 ஆண்டுகள் இந்நாட்டையே ஆண்ட கட்சியாக வளர்ந்து விட்டது. இப்போது, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியே நடக்கிறது. அக்கட்சியின் இந்த அசூர வளர்ச்சிக்கு அவர்களின் கொள்கை, உழைப்பு மட்டும் காரணம் அல்ல; மற்ற அரசியல் கட்சிகளில் தென்படும் போலி மதசார்பின்மை, ஹிந்து மத துவேஷம், கடவுள் மறுப்பு வேஷம், சிறுபான்மையினர் ஓட்டுக்காக ஹிந்து மத துவேஷத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால், பா.ஜ.,விற்கு பின் ஹிந்துக்கள் அணி வகுத்து வருவதே! சில ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தபோது, அவரை வரவேற்க கூடியவர்களை விட, 'கோ பேக் மோடி' என்று கூச்சலிட்ட கூட்டம் தான் அதிகமாக இருந்தது. ஆனால், இன்றோ மோடி எந்த ஊருக்கு சென்றாலும், அவரை வரவேற்க பிரமாண்டமான கூட்டம் கூடுகிறது. இக்கூட்டம் திராவிட கட்சிகளைப் போல் பணம், குவாட்டர் மற்றும் கோழி பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல; தானா சேர்ந்த கூட்டம். தமிழகத்திலும் போலி மதசார்பற்ற கட்சிகள் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே இது உணர்த்துகிறது. இங்கு, பா.ஜ., ஆட்சியை பிடிக்க அக்கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டிய தேவையே இல்லை. போலி மதசார்பின்மை பேசும் தி.மு.க., - வி.சி., - கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் செயல்பாடுகளே போதும், தமிழகத்தில் தாமரை தானே மலர்ந்து விடும். ஆனால், கருணாநிதியால் தமிழகம் பண்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு கூறியிருப்பது தான் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை! தமிழகத்தில், கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின் தான், ஊழல், மது, வாரிசு அரசியல், தனிநபர் துதி, தனிநபர் விமர்சனம், மேடைகளில் ஆபாச பேச்சு என்ற புதுவகை கலாசாரமே தோன்றியது. அவ்வகையில், கருணாநிதியால் தமிழகம் பண்படுத்தப்பட்ட மண் என்று கூறுவதை விட, கருணா நிதியால் பாழ்படுத்தப்பட்ட மண் என்று அமைச்சர் நேரு கூறியிருந்தால், அது மிகச் சரியாக இருந்திருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 11, 2025 17:17

மாநிலத்தின் ஜனத்தொகை, வாக்க்காளர்களின் எண்ணிக்கை போன்ற தரவுகளை எண்ணிப்பார்க்காமல், வாக்காளர்கள் லட்சம் பேர் உள்ள தொகுதி வேட்பாளர் 80000 வாக்குகளும், எதிர்க்கடிக்காரர் 60000 வாக்குகளும், உதிரிகள் 20000 என்று பெற்றதாக முடிவுகளில் வருமே, அப்போது மொத்தம் லட்சம் பேர் உள்ள தொகுதியில் எப்படி 1,60000 பேர் வாக்களித்தார்கள் என்று பார்த்தாலே தெரியுமே எத்தனை கள்ள ஓட்டுக்களால்தான் என்று. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப்பார்க்குமளவு முயற்சி எதுவும் எடுக்காது இந்த பலவிதமான வாக்காளர் மோசடி காலங்காலமாகவே நடக்கிறது


முக்கிய வீடியோ