உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / புரட்சி சிந்தனைகளுக்கு விதையிட்டது யார்?

புரட்சி சிந்தனைகளுக்கு விதையிட்டது யார்?

முனைவர் வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ஒரு பள்ளி நிகழ்வில் பங்கேற்ற பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மாணவர்களிடம், 'நிலவில் முதலில் காலடி வைத்தது ஆம்ஸ்ட்ராங் அல்ல; ஹனுமன்' என்று கூறினார். இது, அறிவாலய பகுத்தறிவாளர்களின் மனதை புண்படுத்தி விட்டதாம்! தமிழக சபாநாயகர் அப்பாவு முதல், தி.மு.க., - எம்.பி., கனிமொழி வரை கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்பாவு பார்வையில், இது ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் என்பதால், பா.ஜ., இதை மாணவர்களிடம் திணிக்கிறது என்கிறார். கனிமொழி பார்வையில், இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாக தெரிகிறது. அதனால், 'அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல; வகுப்பறையில் மாணவர்களை தவறாக வழிநடத்துவது நம் அரசியல் அமைப்பின் அடிப்படை மதிப்புகளான அறிவு, பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அவமதிப்பதாகும்' என்று கூறியுள்ளார். ஆன்மிகம் கட்டுக் கதையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்... ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒருமுறை தன்னை மாவலியுடனும், காங்., - எம்.பி., சோனியாவை மணிமேகலையுடனும் ஒப்பிட்டு பேசியுள்ளாரே... அப்படியெனில், கருணாநிதி அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதித்தாரா? இன்றைய அறிவியல், அரசியல், சமூக நிகழ்வுகளுக்கு ஆன்மிகம் தான் முன்னோடி என்பதாவது கனிமொழிக்கு தெரியுமா? முதன் முதலில் நிலவில் கால் வைத்தது ஹனுமனா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... முதன் முதலில் சுருக்கெழுத்து தந்தது பிள்ளையார். வியாசர் சொல்லச் சொல்ல, மஹாபாரதத்தை எழுதியது அவர்தானே? முருகனுக்கும் - வள்ளிக்கும் திருமணம் செய்து வைத்து, முதல் கலப்புத் திருமணத்திற்கு வித்திட்டவரும் அவர்தான்! அதேபோன்று, உலகில் முதன் முதலில் மகளிர் இட ஒதுக்கீடு, அதுவும், 50 சதவீதம் தந்தது சிவபெருமான். தன் உடம்பில் சரிபாதியை பார்வதி தேவிக்கு தந்தாரே! உலகின் முதல் வாடகைத்தாய் பகவான் கிருஷ்ணரின் அண்ணன் பலராமனின் தாய் ரோகிணி தான். குந்தி கர்ணனைப் பெற்றதும், கன்னி மரியாள் கருத்தரித்ததும் முதல் தாய்மை புரட்சி அல்லவா? இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் முதல் விதை பெறப்பட்டது, நீங்கள் கட்டுக்கதை என்று சொன்ன ஆன்மிகத்தில் இருந்து தான்! எனவே, அறிவாலய பகுத்தறிவாளர்கள், உலகில் ஈ.வெ.ரா., என்பதைத் தாண்டி பல விஷயங்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!  திருமா எப்படி ஓட்டு கேட்டு வருவார்? கே.ஆர்.அனந்த பத்மநாபன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம் : சென்னை ரிப்பன் மாளிகை முன்பு, கடந்த மாதம் பணி நிரந்தரம் கோரியும், துாய்மைப் பணியை தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும் துாய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்தது. தற்போது மாதம், 25,000 ரூபாய் சம்பளம் பெறும் துாய்மைப் பணியாளர்கள், தனியார் மயமாக்கலால் தங்கள் வருமானம், 15,000 ரூபாயாக குறையக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, தொடர்ந்து போராடினர். ஆனால், சுதந்திர தினவிழா கொண்டாட்டத் திற்கு இடையூறாக இருக்கும் எனக் கூறி, தி.மு.க., ஆதரவாளர் ஒருவர் வழக்கு தொடுத்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை யடுத்து, ஆகஸ்ட் 13 அன்று இரவோடு இரவாக துாய்மைப் பணியாளர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது, காவல் துறை. இதனால், வேறு வழியின்றி அவர்கள் குறைந்த ஊதியத்துடனே பணியைத் துவங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இச்சூழலில், இடது சாரி கட்சிகளும், வி.சி., தலைவர் திருமாவளவனும் போராட்டத்திற்குப் பெரிதாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதுடன், தலித் மக்களின் பாதுகாவலர் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அவர், 'துாய்மைப் பணியாளர்களை நிரந்தரப் பணி யாளர்களாக ஆக்கினால், அவர்கள் தலை முறை தலைமுறையாக அதே பணியில் தொடரும் நிலை உருவாகி விடும். அது அவர்களின் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும்' என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். பணி நிரந்தரம் என்றால்தான் முறையான ஊதியம் கிடைக்கும். ஊதியம் கிடைத்தால்தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க முடியும். பிள்ளைகளும் உயர் பதவிகளை பெற்று, சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியும். துாய்மை பணியாளர்கள் வெறும் ஒப்பந்த ஊழியர்களாக, குறைந்த வருமானத்தில் காலத்தைக் கடத்தினால், வாங்கும் சம்பளத்தை உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கும் செலவு செய்வரா இல்லை பிள்ளைகளை படிக்க வைத்து, அடுத்த நிலைக்கு உயர்த்துவரா? இந்த அடிப்படை விஷயம் கூட திருமாவளவனுக்கு தெரியாமல் போனது எப்படி? தன் சமூகத்தின் நியாய மான கோரிக்கைகளை கூட புரிந்து கொள்ள முடியாத இவரா, அவர்கள் வாழ்வு முன்னேற பாடுபடப் போகிறார்? சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், சீட்டுக்காக தி.மு.க.,வை பகைத்துக் கொள்ள விரும்பாத திருமாவளவன், ஓட்டுக்காக இவர்களிடம் தான் வர வேண்டும் என்பதை மறந்து விட்டாரே!  நாடக மேடை நடிப்பு வரவில்லை! எஸ்.சேதுநாராய ணன், சென்னையில் இருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரையில் நடைபெற்ற த.வெ.க., மாநாட்டில் திரைப்பட நடிகர் விஜய், நாடக நடிகராக புதிய பரிணாமம் எடுத்தார். அந்தோ பரிதாபம்... சினிமா நடிகராக வெற்றி பெற்ற வரால், நாடக நடிகராக வெற்றி பெற முடிய வில்லை. சினிமாவில் ஒரு தடவை சரியாக நடிக்கவில்லையென்றால், சரியாக நடிக்கும் வரை பலமுறை, 'டேக்' எடுப்பர். அப்படியும் காட்சி நன்றாக வரவில்லையென்றால் அந்த சீனையே நீக்கிவிடுவர். ஆனால், நாடக நடிகராக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல; ஒரே டேக்கில் நடிப்பு, முகபாவம், வசனம் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும். மறுமுறை, 'டேக்' என்பது கிடையாது. அதேபோன்று, சினிமா வசனங்களிலிருந்து நாடக வசனங்கள் வித்தியாசமானவை. நாடகத்தில் நடிக்கும்போது சிறு தவறும் பூதாகரமாகிவிடும். அத்தகைய மேடை நடிப்பு விஜய்க்கு கைதராததால், மதுரை மாநாட்டில் விஜயின் நாடக நடிப்பு எடுபடாமல் போயிற்று. எனவே, அடுத்த மாநாட்டிற்கு, சினிமா, 'ஸ்கிரிப்ட்' எழுதுவோரை தவிர்த்து விட்டு நாடகத்திற்கு, 'ஸ்கிரிப்ட்' எழுதுபவரை வைத்து டயலாக் எழுதி வாங்கி வந்து அவர் பேசுவது நல்லது. அதேநேரம், ரசிகர்களை மட்டும் ஈர்க்கும் ஸ்கிரிப்ட்டாக இல்லாமல், எல்லாத்தரப்பட்ட மக்களையும் ஈர்க்கும் விதமாக, மக்களின் அன்றாட பிரச்னைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கூடவே, சிறந்த நாடக இயக்குநரின் உதவியுடன் பலமுறை 'ரிகர்சல்' எடுத்த பின், 'மேடையில் தவறில் லாம நடிக்க முடியும்' என்ற நம்பிகை வந்தவுடன், விஜய் மேடை ஏறுவது, அவரது அரசியல் நாடகத்திற்கு நல்லது! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மூர்க்கன்
செப் 03, 2025 12:40

புராணத்தை கொண்டு புழுகி கொண்டு திரிந்தால் மக்கள் பெரியாரின் கைத்தடி கட்டையை கொண்டு அடித்து விரட்டுவர் இதுவும் கருணாநிதி சொன்னதுதான் ?? முனைவர் பட்டம் ஒரு கேடு?? அறிவை கொண்டு சிந்தியுங்கள் மத காமாலைக்கண் கொண்டு பார்த்தல் புழுகலுரைகள் எல்லாம் அறிவியலாகத்தான் தெரியும். வயது முதிர்ச்சியை விட அறிவு முதிற்சியே மேலானது.


முக்கிய வீடியோ