உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமா?

தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமா?

எஸ்.குணசீலன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுதோறும் சட்டசபை கூடும்போது கவர்னரும், பார்லிமென்ட் கூடும்போது, ஜனாதிபதியும் உரையாற்றி, சபையை துவக்கி வைப்பது மரபு!அவ்வாறு அவர்கள் உரையாற்றத் துவங்கும் முன், தமிழகத்தில் என்றால், தமிழ்த்தாய் வாழ்த்தும், பார்லிமென்ட் என்றால் வந்தே மாதரமும், பின், தேசிய கீதமும் இசைப்பது மரபு.பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை கவர்னர் தெரிவித்த பின்னரும், வேண்டுமென்றே இக்கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. கவர்னர் உரையின் துவக்கத்தில், தேசிய கீதம் பாடப்படாமல் இருக்கவே, அரசியலமைப்பு கடமைகளை நினைவூட்டி, முதல்வர் மற்றும் சபாநாயகரை தேசிய கீதம் பாடுவதற்கு கவர்னர் விடுத்த வேண்டு கோளை சபாநாயகர் மறுக்கவே, வேறு வழியின்றி, வேதனையோடு சபையை விட்டு வெளியேறியுள்ளார், கவர்னர். கடந்த ஆண்டும் இது போன்ற சம்பவம் சபையில் நடைபெற்றபோது, அமைச்சர் பொன்முடி, கவர்னரை, 'போய்யா... போ போ...' என்கிற ரீதியில் சைகை காட்டியது, சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.ஆக, திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, தேசிய கீதமும் பாடத் தெரியாது; அதற்கு மரியாதை கொடுக்கும் பண்பும் கிடையாது!தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களுக்கு, தேர்தல் ஆணையம் கல்வித் தகுதியைத்தான் நிர்ப்பந்திக்கவில்லை; நாட்டுப்பற்றை கூடவா நிர்ப்பந்திக்கக் கூடாது?இனி வரும் பஞ்சாயத்து தேர்தல் முதல், பார்லிமென்ட் தேர்தல் வரை வேட்பாளர்களாக போட்டியிடுவோர், வேட்புமனுவை சமர்பிக்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் தேர்தல் அதிகாரி முன், பாடி காட்ட வேண்டும். பாடத் தெரியவில்லை என்றால், அவை இரண்டையும் பிழையில்லாமல், எழுதிக் காட்ட வேண்டும். அப்படி எழுதிக் காட்டினால் மட்டுமே வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அப்போதே வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட வேண்டும்.இப்படி ஒரு நிபந்தனையை தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்தால், எதிர்காலத்தில் தமிழக சட்டசபையில், தேசிய கீதத்துக்கு இதுபோன்ற அவமதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்!தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமா?

கல்வியில் அரசியல் வேண்டாமே!

ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிச்சை புகினும் கற்கை நன்றே!' என்றார் அவ்வையார். ஆனால், இன்று கல்வித் துறையில் என்ன நடக்கிறது?பெயருக்கு தேர்வுகள் நடத்தி, அனைவரையும் ஒன்பதாம் வகுப்பு வரை தடையில்லாமல் தேர்ச்சி பெற செய்கின்றனர். இதனால், என்ன நேர்கிறது...ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, குறைந்து போகிறது; மாணவர்களின் கல்வித் திறனோ அதல பாதாளத்திற்கு சென்று விடுகிறது!அடிப்படைக் கல்வி என்பது, எண்ணும், எழுத்தும் தங்கு தடையின்றி அறிந்து கொள்ளுதல்! ஆனால், இன்று பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இரண்டு இலக்க வகுத்தல் கணக்கோ, பெருக்கல் கணக்கோ தெரிவதில்லை. சாதாரண மூன்று இலக்க கழித்தல் கணக்கு எப்படி போடுவது என்றே அவர்களுக்கு புரியவில்லை. ஐந்தாம் வாய்ப்பாடுக்கு மேல் அவர்களுக்கு வாய்ப்பாடே தெரிவதில்லையே... பின் எப்படி கணக்கு போடுவர்!கழகங்களின் கைங்கரியம் கல்வியில் புகாத வரை, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வகுப்பு ஆசிரியரின் பொறுப்பாக இருந்தது; அதனால், அவர்களின் கற்பித்தல் பணியில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. இந்நிலையில், 'இடை நிற்றல்' என்பதை காரணமாக வைத்து, 'ஆல் பாஸ்' எனும் தாராள மயம் வந்தது. விளைவு... மாணவர் களின் எழுத்து அறிவு கூட தகிடுதித்தமாக உள்ளது. கிராமத்து அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து பாருங்கள்... ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் எத்தனை பேர், சரளமாக தமிழ் வாசிக்கின்றனர், எழுதுகின்றனர் என்பது தெரிய வரும்!மத்திய அரசு விழித்தெழுந்து, 'ஐந்து, எட்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு, 'ஆல் பாஸ்' இனி இல்லை' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நம் அரசோ, இடை நிற்றல் அதிகரிக்கும் என்ற உப்பு சப்பில்லாத காரணத்தைக் கூறி, அதை ஏற்க மறுக்கிறது.இடை நிற்றல் அதிகரிக்கும் என்பதற்காக, ஒரு மாணவனை முட்டாளாக ஒன்பதாம் வகுப்பு வரை கொண்டு செல்வது, அவனது வாழ்வோடு விளையாடும் செயல் அல்லவா?இதைத் தான் அரசு விரும்புகிறதா? கல்வியில் அரசியல் செய்து, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள்!

மக்களே... உஷார்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மாதம், சென்னை எண்ணுார் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டம், எர்ணாவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் கருத்தை பதிவு செய்தார். அங்கிருந்த உடன்பிறப்புகள் கடுப்படைந்து, 'சீமானே வெளியேறு' என்று கோஷமிட்டனர். சீமான் கருத்து தவறாகவே இருந்தாலும், அக்கருத்தை முழுதும் கூற அனுமதிக்க வேண்டும் அல்லவா?தாங்கள் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிக்க, கண்துடைப்புக்காக இது போன்ற கருத்துக் கேட்புகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதே, பல விஷயங்களில் நிரூபணமாகி உள்ளது. கலைஞர் பேனா சின்னம், 'நீட்' தேர்வுக்கு எதிரான கையெழுத்து வேட்டை என்ற கூத்தும் இப்படித் தான் நடந்தது. உண்மை இவ்வாறு இருக்க, ஏதோ பாதிக்கப்பட்ட மக்கள் தாமே முன்வந்து போராடுவதைப் போல, தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில் ஒரு தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. 'ஓய்வுபெற்ற நீதிபதி கமிஷனின் பரிந்துரையின்படி நடவடிக்கைகள் எடுக்கிறோம்' என்கின்றனர். ஆனால், அந்த நீதிபதிகளின் பரிந்துரைகள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் கருத்துகளோடு ஒத்துப் போகிறதே... அது எப்படி? தங்கள் கொள்கையோடு உடன்பாடு உடையவர்களையே விசாரணை கமிஷன் தலைவர்களாக நியமனம் செய்வதே, இதற்கு காரணம்! சமீபத்தில், ஓர் ஓய்வுபெற்ற நீதி அரசரின் பரிந்துரைகள், கடுமையாக விமர்சிக்கப்பட்டன. தப்பித் தவறி ஏதாவது ஒரு விசாரணை கமிஷன் தலைவர், அரசின் கருத்துக்கு மாறான பரிந்துரை வழங்கினால், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிடுகின்றனர். இதற்கு எதற்கு விசாரணை கமிஷன், கருத்துக் கேட்பு என்ற கண்றாவிகள்?ஜனநாயகத்தை தங்கள் விருப்பம் போல வளைத்து, நெளித்து, அடித்து, உதைத்து, தரம் தாழ்ந்த, மலிவு அரசியல் செய்யும் இவர்களிடம், மக்கள் உஷாராக இருக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmavaan
ஜன 10, 2025 19:20

மாநில வாழ்த்து பாடல் பாடுவது பிரிவினைவாதம்.தேசிய கீதம் மட்டுமே பாட வேண்டும் அதுவும் ஆளுநர் இருக்கும் போது


D.Ambujavalli
ஜன 10, 2025 06:22

'பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்பது அதி வீர ராம பாண்டியனின் 'வெற்றி வேற்கை' நூலில் உள்ளது. ஒரு தற்குறி தலைமுறையையே உருவாக்கிய பெருமை திராவிடக் காட்சிகளையே சாரும்


Anantharaman Srinivasan
ஜன 10, 2025 00:50

தேர்தலில் நிற்பவர்கள் தகுதிற்கேற்ப ஐந்தாண்டுகாலம் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டுமென்று விதி கொண்டு வந்தால் நாட்டுப்பற்று மட்டுமல்ல கடமை உணர்ச்சியும் ஒழுக்கமும் நேர்மையும் உறுப்பினர்களிடையே கொஞ்சம் காணப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை