இதே நாளில் அன்று
மார்ச் 28: தஞ்சை மாவட்டம், ஆலடிக்குமுளை கிராமத்தில், மெய்யப்பன் - சீரங்கத்தம்மாள் தம்பதியின் மகனாக, 1942ல் இதே நாளில் பிறந்தவர் மெய்.ரூஸ்வெல்ட். இவர், பட்டுக்கோட்டையில் பள்ளி படிப்பை முடித்து, சென்னை காயிதேமில்லத் மற்றும் மாநில கல்லுாரிகளில் படித்தார். டில்லி பொருளாதார ஆராய்ச்சி கழகம், மணிப்பால் சிண்டிகேட் வங்கிகளில் பொருளாதார ஆராய்ச்சியாளராக பயிற்சி பெற்று, சென்னை அண்ணா சாலை, ராயப்பேட்டை, நந்தனம் சிண்டிகேட் வங்கி கிளைகளில், மேலாளராக பணியாற்றினார். அப்போது, கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிய சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கி, அவர்களை மேம்படுத்தினார். டில்லியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததுடன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அறக்கட்டளையை துவங்கி, தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார். மேலும், பல்வேறு கலை, இலக்கிய, கலாசார அமைப்புகளின் பொறுப்பாளராகவும் தொடர்கிறார். 'ஒன்றுபடுவோம், மக்கள் கவிஞரின் பாடல் தொகுப்புகள்' உள்ளிட்ட நுால்களை எழுதியதுடன், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது, 84வது பிறந்த தினம் இன்று!