உள்ளூர் செய்திகள்

பக்க வாத்தியம்

'குத்தாட்டம் அப்பறம் ஆரம்பிக்கும்!'

காஞ்சிபுரம் நகர பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டம் துவங்கும் முன், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பார்வையாளர்கள் குறைவான அளவிலேயே வந்திருந்தனர்.அதைக் கண்ட தொண்டர் ஒருவர், 'திராவிட கட்சிகள் எல்லாம், கூட்டம் துவங்கும் முன், குத்தாட்ட நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. அதனால், அங்கு கூட்டம் அலைமோதுகிறது. இங்கு, பக்தி பாடல்களை ஒளிபரப்பி, நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதைப் பார்க்க யார் வருவார்...?' என்றார். அருகிலிருந்த மற்றொரு பார்வையாளர், 'இருக்கட்டும்... இப்ப தான ஆரம்பிச்சிருக்காங்க... முதல்ல பக்தி பாடலுடன் நிகழ்ச்சி துவங்கட்டும்... நாளடைவில் குத்தாட்டத்துல வந்து நிப்பாங்க...' எனக் கூறியதும் சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.

'எல்லாம் கூட்டணி செய்யற வேலை...'

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு நன்றி சொல்ல செல்லும் வழியில், மதுரை வந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, நிருபர்களை சந்தித்தார்.'மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை, நெல்லை பேரணியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி, தியாகி இமானுவேல் சேகரன் விழா, நிலத்தடி நீர் காக்க மக்கள் இயக்கம்' என, நீண்ட பேட்டியளித்துக் கொண்டார்.அவரை இடைமறித்த மூத்த நிருபர் ஒருவர், 'அதெல்லாம் இருக்கட்டும் சார்... இன்னிக்கு முக்கியமான பிரச்னையா உள்ள சமச்சீர் கல்வி குறித்து என்ன சொல்றீங்க...' என, கிடுக்கிப்பிடி போட்டார்.'அந்தப் பிரச்னையில, அரசு மேல்முறையீடு செய்து, சுப்ரீம் கோர்ட்ல, உத்தரவு வரப் போகுதே. ஆக்க பொறுத்தாச்சு... ஆற பொறுக்க மாட்டீங்களா...?' என, பழமொழியை உதிர்த்துவிட்டு நழுவினார்.இதைக் கண்ட மற்றொரு நிருபர், 'எல்லாம் கூட்டணி செய்யற வேலை...' என, 'கமென்ட்' அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை