‘அதிகாரியே இப்படி இருந்தா எப்படி?’
பெரம்பலுார் அரசு மேல்நிலை பள்ளியில், மாணவ – மாணவியருக்கு கேக் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. கலெக்டர் அப்துல் ராசிக் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான லட்சுமி பங் கேற்று, மாணவ – மாணவியருக்கு கேக் வழங்கினார். விழாவில், பெரம்பலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் வரவேற்று பேசுகையில், குழந்தைகள் தின விழா என்பதற்கு பதிலாக, ‘குடியரசு தின விழா’ என மாற்றிக் கூறினார். இதை கேட்ட மாணவ – மாணவியர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். பார்வையாளர் வரிசையில் இருந்த ஒருவர், ‘என்னது... குடியரசு தின விழாவா... பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடக்கிற விழாவுல, அந்த துறையின் உயர் அதிகாரிக்கே இது என்ன விழான்னு தெரியலைன்னா என்ன அர்த்தம்...’ என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.