ஆண்கள் மைனாரிட்டி தானே!
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் பங்கேற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய ஆசிரியர் சங்க பெண் நிர்வாகி ஒருவர், 'இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிக அளவில் வந்துள்ளோம்...' என்றார். இதை கேட்ட ஆண் ஆசிரியர் ஒருவர், 'பல்வேறு அரசு பணியிலும் பெண்களே அதிகம் உள்ளனர். அதுபோல, ஆசிரியர் பணியிலும் பெண்கள் தான் அதிகம் உள்ளனர். ஆண்களான நாங்க எல்லா இடத்திலும் மைனாரிட்டியாகத் தானே இருக்கோம்... அதான், எங்க கூட்டம் குறைவா தெரியுது...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.