உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: தமிழகத்தில் ஆண்டுக்கு, 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில், 48 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும், 52 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும் நடக்கின்றன. கேரளாவில், 1 லட்சம் மகப்பேறு என்றால், அதில், 19 சிசு இறப்புகள் மட்டுமே நடக்கின்றன. மஹாராஷ்டிராவில் - 33, ஆந்திராவில் - 45 என்றால், தமிழகத்தில், 54 சிசு இறப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இங்கு, மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறையும் உள்ளது.மாரத்தான் ஓடுறதுக்கு நேரம் இருக்கும் அமைச்சருக்கு, மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்க நேரம் இல்லையோ? த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: கடந்த 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில் அளித்த விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு, தற்போதைய வேளாண் பட்ஜெட்டில் இல்லை. கடந்த நான்கு பட்ஜெட் போலவே, நடப்பு ஆண்டிற்கான விவசாய பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது, விவசாய வளர்ச்சிக்கு பயன் தராது.எல்லா பட்ஜெட்டிலும் கடன்களை தள்ளுபடி பண்ணிட்டே போனால், அரசாங்கம் போண்டியாகி விடாதா?தி.மு.க., வர்த்தகர் அணி மாநில செயலர் காசிமுத்துமாணிக்கம் பேச்சு: ஹிந்தியை தாய்மொழியாக கொள்ளாத குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசாவை சேர்ந்த தர்மேந்திர பிரதான் ஆகியோர், ஹிந்தியை திணிப்பதாக நடித்து, ஹிந்திக்காரர்களின் ஓட்டுகளை பெற தந்திரமாக முயல்கின்றனர். ஹிந்திக்காரர்களிடம் ஓட்டு வாங்க, தமிழகத்தின் நிதியை தர மறுக்கின்றனர்.தமிழகத்துக்கு நிதி தராம இருந்தா, வடமாநிலத்தவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுவாங்க என்பது, மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி இருக்கே!தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேட்டி: தேர்தல்கள் வரும்போதெல்லாம் தமிழர் என கூறிக் கொள்ளும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்ற நாட்களில் தமிழை மறந்து விடுகிறார். அவர், தன் டில்லி சகாக்களுக்கு, ரூ என்பது ரூபாய்க்கான முதல் எழுத்து என்பதை கற்பிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த 1934ம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளில் ரூபாய் என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. ஹிந்தி வார்த்தைக்கு பதிலாக, தமிழ் வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.ரூபாய்க்கு, சர்வதேச அரங்கில் ஒரு குறியீடை ஏற்படுத்திய தமிழரின் பெருமையை புறக்கணிச்சிருக்கீங்க என்பது தான் உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ