பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக, பா.ஜ., செயலர், எஸ்.ஜி.சூர்யா பேச்சு: துணை முதல்வர் உதயநிதி, 'ஹிந்து மதமும், சனாதனமும் டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கக்கூடியவை' என்றார். அமைச்சர் சிவசங்கர், 'கடவுள் ராமர் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை' என்கிறார். அமைச்சர் ரகுபதியோ, 'ராமர் வழியில் ஆட்சி நடக்கிறது' என்கிறார். ஏன் இந்த முரண்பாடு... ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்துவதை, தி.மு.க., கொள்கையாகவே வைத்துள்ளது.அவங்க கொள்கையில் அவங்க உறுதியா இருக்காங்க... அவங்களுக்கு ஓட்டு போட மாட்டோம்னு ஹிந்துக்கள் தான் கொள்கை முடிவு எடுக்க மாட்டேங்கிறாங்க!தமிழக, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி: 'மாணவர்கள் ருத்ராட்சம், திருநீறு அணிந்து பள்ளிக்கு வர வேண்டும்' என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது, தவறானது. அது, மாணவர்களின் விருப்பத்தை பொறுத்தது. 'பிரச்னை என்றால் முருகனிடம் செல்ல வேண்டும்' என்கின்றனர். பின், அவர்களே, 'முருகனை காப்பாற்ற போகிறோம்' என கூறுகின்றனர். இதை விட சிரிப்பு என்ன இருக்கும்... பிரச்னை என்றால் கோவிலுக்கு சென்று முருகனை கும்பிடலாம். ஆனால், முருகனை காப்பாற்றுவதற்கு நாம் யார்?முருகனை யாரும் காப்பாற்ற வேண்டாம்... ஆனா, முருகன் குடிகொண்டிருக்கும் கோவில்களை, ஹிந்து நம்பிக்கை இல்லாதவர்கள் பிடியில் இருந்து காப்பாற்றியாகணும்!பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'அனைத்து ரேஷன் கடைகளும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றங்களில் முதன்மையானது மக்களை நம்ப வைத்து, கழுத்தறுக்கும் துரோகம். ஆனால், அதைத் தான், தி.மு.க., அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது.'என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டோம்' என, இவரது தந்தை தந்த வாக்குறுதியில் உறுதியாக இருந்திருந்தால், இவர் அரசியலுக்கு வந்திருப்பாரா?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கூலிப்படை தாக்குதல், போதைப்பொருள் கலாசாரம் போன்றவற்றால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தினமும் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உள்ளதால், தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தே.ஜ., கூட்டணியில், அ.ம.மு.க.,வுக்கு வழங்கும் முக்கியத்துவம் குறித்து, மாநில, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும். முக்கியத்துவமா... முதல்ல, தே.ஜ., கூட்டணியில் இவருக்கு இடமிருக்கான்னு கேட்டு உறுதிப்படுத்திக்கிறது நல்லது!