உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநில கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இது, தி.மு.க.,வின் வறட்டு கவுரவத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை ஐந்து முறை ஆண்ட, தி.மு.க., ஏன் இதுவரை மாநில கல்வி கொள்கையை வகுக்கவில்லை. தேசிய கல்வி கொள்கை, மாணவர்களை உலக அரங்கிற்கு இழுத்துச் செல்கிறது. மாநில கல்வி கொள்கை, அறிவாலயத்திற்குள் அடைக்க பார்க்கிறது. கல்வி கொள்கை என்ற பெயரில், மத்திய, மாநில அரசுகள் தமிழக மாணவர்களை பந்தாடுவது நல்லாவே தெரியுது! முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி பேட்டி: 'ஓரணியில் தமிழகம்' என்ற தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில், யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை; மக்களே விருப்பப்பட்டு சேர்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இதுவரை நடந்த, 10 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளார். 11வது முறையாக சந்திக்க உள்ள சட்டசபை தேர்தலிலும், மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக வழங்குவர். தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணி கணக்குகள் மாறும்; அப்ப, இவரது ஆரூடம் பலிக்குமா என்பதை பார்க்கலாம்! தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: 'மகளிர் உரிமைத்தொகையை, 1,500 ரூபாயாக உயர்த்துவோம்' என, அ.தி.மு. க., பொதுச்செயலர் பழனிசாமி இப்போது கூறி வருகிறார். ஆனால், கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்' என்ற எங்களின் அறிவிப்பை, பழனி சாமி கேலி செய்தார். 'உறுதியாக வழங்குவோம்; குறிப்பாக, 1 கோடி பேருக்காவது வழங்குவோம்' என, ஸ்டாலின் அப்போது கூறினார். ஆனால், இப்போது, 1.15 கோடி பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார். தற்போதும், உரிமைத்தொகை கிடைக்காத பெண்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காகத் தானே, அவசர அவசரமா மனுக்கள் வாங்கி, நடவடிக்கை எடுக்குறாங்க! தமிழக, காங்., - எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன்குமார் பேச்சு: நாட்டிலேயே முதல் முறையாக ஆதிதிராவிடருக்கு என, தனியாக நலத்துறையும், அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலைக்கழகமும் அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். 2008ம் ஆண்டு அருந்ததியினருக்கு, 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதும் கருணாநிதி தான். பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் இருந்த, 16 சதவீத இட ஒதுக்கீட்டை, 18 சதவீதமாக உயர்த்திய கருணாநிதியை மறக்க முடியுமா? 'கருணாநிதி இவ்வளவு செஞ்சிருக்கார்... அவரது மகன் ஸ்டாலின் எதுவுமே செய்யலை'ன்னு சொல்லாம சொல்றாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஆக 12, 2025 01:05

மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது, ஓசி பஸ் இவையிரண்டும் ஓட்டுகளை வளைப்பதற்கு தானேயன்றி உண்மையில் மகளிர் மீது தனிப்பட்ட எந்த அக்கரையும் திமுக விற்கு கிடையாது.


கண்ணன்
ஆக 11, 2025 11:16

ஏன் உங்கள் கட்சி ஆட்சியிலிருந்த போது இவற்றைச் செய்ய முனையவில்லை?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை