பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: பள்ளிக்கல்வி பரவலாக்கப்பட்டதும், உயர் கல்வி உச்சத்தை தொட்டதும், அ.தி.மு.க., ஆட்சியில் தான். அண்ணா பல்கலை, தமிழ் பல்கலை, 400க்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லுாரிகள் ஆகியவை துவக்கப்பட்டு, தற்போது ஐ.டி., துறையில் தமிழகம் சிறந்து விளங்க காரணமானது எம்.ஜி.ஆர்., ஆட்சி தான். அன்னை தெரசா மகளிர் பல்கலை, மீன்வள பல்கலை, விளையாட்டு பல்கலை ஆகியவை ஜெயலலிதா ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டன. அதுபோல் அதிக மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்பட்டது, பழனிசாமி ஆட்சியில் தான். இவற்றுக்கெல்லாம் தி.மு.க., அரசு நடத்திய, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழாவில் பாராட்டுகள் எதுவும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த பாராட்டு விழாக்களில், எந்த எதிர்க்கட்சியையாவது பாராட்டி இருப்பாங்களா? தொழில்நுட்ப கல்வி துறை, டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., - எஸ்.டி., பணியாளர் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் மகிமைதாஸ் அறிக்கை: தசரா பண்டிகையை ஒட்டி நீதிமன்றங்களுக்கும், பள்ளி, கல்லுாரிகளுக்கும் செப்., 27 முதல் அக்., 5 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப ஏதுவாக, பணி நாளான அக்., 3 வெள்ளிக்கிழமையை, தமிழக அரசு சிறப்பு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். பேசாம, அக்., 20ல் வர்ற தீபாவளி பண்டிகை வரைக்கும் லீவு விட்டுடலாமே... எல்லாருக்கும் வசதியா இருக்குமே! இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது பேச்சு: 'நாமக்கல்லில் இருந்து, த.வெ.க., தலைவர் விஜயை பின்தொடர்ந்து வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களால் தான் கூட்ட நெரிசல்' என, ஒரு தரப்பில் கூறுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தி பின்தொடர விடாமல் தடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்ய விஜய் தவறியது ஏன்? பல ஆயிரம் தொண்டர்கள் புடைசூழ வருவதை, 'கெத்து'ன்னு காட்ட நினைச்சவங்க, அதை எல்லாம் செய்வாங்களா? ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: கடந்த கூட்டங்களில் பொருட்சேதம் செய்த த.வெ.க.,வினர் தற்போது உயிர் சேதம் ஆகும் அளவிற்கு நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. இனி வரும் காலங்களில், எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஊருக்கு வெளியே, ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் நடத்த, அரசு விதிகள் வகுக்க வேண்டும். பேசாம சீமான் கட்சியினர் மாதிரி, மலைகள் மீதும், கடலுக்குள்ள போயும் கூட்டங்கள் நடத்துங்கன்னு சொல்லிடலாமோ?