தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம்,
பாலவாக்கம் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள்
மேல்நிலை பள்ளிகளில், 1,000 மாணவ - மாணவியருக்கு மேல் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிகளுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ - மாணவியர்
மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சி முடிய
போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில், எத்தனை பள்ளிகளுக்கு புதிய
கட்டடங்கள் கட்டியுள்ளனர் என்பதை கூற, ஆளும் கட்சியினர் மறுத்து
வருகின்றனர். 'அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின்
அடையாளம்' என்று முழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் எங்க
போனாரு?தமிழக பா.ஜ., இளைஞர் அணி தலைவர், எஸ்.ஜி.சூர்யா பேட்டி: தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் பல நலத்திட்டங்களை மக்கள் பெற்றுள்ளனர். 2017 - 2021ம் ஆண்டு வரை, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி, பொங்கலுக்கு பரிசுத்தொகை, 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் கொண்டு வந்தது உட்பட ஏராளமான வளர்ச்சி பணிகள் செய்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. இதனால், மக்கள் கோபத்தில் உள்ளனர். தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் இரண்டாம், மூன்றாமிடத்தை பிடிக்கவே போட்டி நிலவுகிறது. 'அடுத்து எங்க ஆட்சிதான்'னு மார் தட்டிட்டு இருக்கிற தி.மு.க., - த.வெ.க., கட்சிகளை, அசால்டா ரெண்டாவது, மூணாவது இடத்துக்கு தள்ள பார்க்கிறாரே! தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரத்தை முழுதுமாக தி.மு.க., 'டேக் ஓவர்' செய்து விட்டதாக கூறும் பா.ம.க., தலைவர் அன்புமணி, தன்னை இந்த உலகிற்கு உயிர் கொடுத்து அறிமுகப்படுத்தியவரையே திருப்தியாக வைத்துக்கொள்ள முடியாதவர். அன்புமணியின் தந்தையே, மகனுக்கு, 'கைக்கூலி' என்ற பட்டத்தை வழங்கி உள்ளார். ஆகவே, வேறு யாருக்கும் அந்த பட்டத்தை வழங்க வேண்டிய அவசியம் அன்புமணிக்கு இல்லை. 'கைக்கூலி' என்ற பட்டத்தை மாறி மாறி பந்தாடுறாங்களே... சட்டசபை தேர்தலில் மக்கள் தரப்போகும் கூலிதானே முக்கியம்! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: சீமை கருவேல மரங்களை அழித்து தமிழக மண் வளத்தை பாதுகாக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பலமுறை, 'கெடு' விதித்து விட்டது. தி.மு.க., அரசின் நீர்வளத் துறையோ நீர்த்து போய் விட்டது. தமிழக நீர் மேலாண்மை நிர்கதியற்று கிடக்கிறது. ஆற்று மணலை கூறுபோட்டு விற்கும் கும்பலையே கண்டுக்காத நீர்வளத் துறை, மண் வளத்தை பாதுகாக்க மட்டும் நடவடிக்கை எடுத்துடுமா?