தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: திருப்பரங்குன்றத்தில், தீபத் துாணில் விளக்கேற்ற வேண்டும் என்றும், அதை தி.மு.க., அரசு தடுக்கிறது என்பதையும் கண்டித்து, பூர்ணசந்திரன் என்ற சகோதரர் தீக்குளித்து உயிரிழந்திருப்பது, மன வேதனையை தருகிறது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால், சட்டப் போராட்டம் நடத்தலாமே தவிர, இப்படி உயிரை மாய்த்துக் கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. வாஸ்தவம் தான்... ஆனால், தீக்குளிக்கக்கூடிய அளவுக்கு அவரை மன வேதனையில் ஆழ்த்தியவர்களை, பூர்ணசந்திரனின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது!மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: சிறந்த இலக்கியங்களுக்கு விருதுகள் வழங்கும், 'சாகித்ய அகாடமி' அமைப்பையும், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர துடிக்கிறது பிரதமர் மோடி அரசு. பா.ஜ., ஆட்சியில், இனி சாகித்ய அகாடமி விருதுகள், சனாதனத்தை ஆதரிப்பவர்களுக்கும், ஆட்சிக்கு, 'ஜால்ரா' போடுபவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இலக்கியம், வரலாறு, அதன் தரம் போன்றவை ஒரு பொருட்டல்ல. கம்யூ.,க்களுக்கு, 'ஜால்ரா' போடுவோருக்கு இனி விருதுகள் கிடைக்காது என்பதால் புலம்பு றாரோ? முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணன் பேச்சு: தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில், 5 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கியுள்ளது. தி.மு.க., 2021ல் ஆட்சிக்கு வந்தபோது, ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், 2.61 லட்சம் ரூபாய் கடன் சுமை இருந்தது; இதை தற்போது, 4.61 லட்சம் ரூபாயாக உயர்த்தி விட்டனர். தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. வரும் சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் தலைமையில் ஊழல் ஆட்சியா அல்லது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் நேர்மையான ஆட்சியா என்பதை எடை போட்டு, மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவர். இதன் வாயிலாக, 'தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே தான் போட்டி... தமிழக வெற்றிக் கழகம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல'ன்னு சொல்லாம சொல்றாரோ? தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா, மகாத்மா காந்தியை அவமதிக்கும் செயல்' என எதிர்க்கட்சிகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த புதிய மசோதாவால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்படும்; அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். மகாத்மா காந்தியும், கிராமங்களின் மேம்பாட்டையே விரும்பினார். அப்படியிருக்க, புதிய மசோதா எப்படி அவரை அவமதிக்கும்? திட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்தவங்க, மகாத்மா காந்தி பெயரை நீக்கியிருக்க வேண்டாமே!