உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / அன்பு ஒன்றே அனைத்தையும் மாற்றும் சக்தி!

அன்பு ஒன்றே அனைத்தையும் மாற்றும் சக்தி!

கணியான் கூத்து கட்டும், பொறியியல் பட்டதாரியான திருநங்கை வினோதினி:என் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம், பணகுடி கிராமம். எனக்கு ஒரு அக்கா, அண்ணன். சிறு வயது முதலே என் உலகம் பெண்கள் சார்ந்தே இருந்தது. பிளஸ் 2 படித்தபோது, என் நண்பனும் இதே சிக்கலில் இருந்தான். அவனிடம் பேசி, நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். சில திருநங்கையரின் நட்பு கிடைத்தது. நானும் என் நண்பனும் யாருக்கும் தெரியாமல், கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தோம்.அந்த திருவிழாவில் நான் சேலை கட்டி, வளையல் போட்டு எனக்கு பிடித்த மாதிரி இருந்தேன். என் உடம்பில் நடக்கும் மாற்றத்திற்கு நான் காரணம் இல்லை என்று முழுதாக புரிந்தது. ஆனால், அதை என் குடும்பத்தாருக்கு புரிய வைக்க முடியவில்லை.அடிப்பது, கோவிலுக்கு அழைத்துச் சென்று விபூதி போடுவதுன்னு புதிது புதிதாக சித்ரவதைகள் தொடர்ந்தன. கவுன்சிலிங் கொடுக்க ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர்தான் அப்பாவிடம், 'சிகிச்சை வாயிலாக எதையும் மாற்ற முடியாது' என்று கூறினார்.அதை கேட்டதும் அப்பாவுக்கு வெறுப்பு அதிகமாகி, கையில் 100 ரூபாய் கொடுத்து, 'எங்கேயாவது சென்றுவிடு' என்றார். கால் போன போக்கில் நடந்து, திருநெல்வேலிக்கு சென்று அங்கு இருந்த திருநங்கை கூட்டத்தில் சேர்ந்து கொண்டேன்.அப்போது பி.இ., மூன்றாமாண்டு படித்துக் கொண்டு இருந்தேன். கல்லுாரி கட்டணம் கட்ட பணம் இல்லை. என் தோற்றம், பாலினத்தை பார்த்து எவரும் வேலையும் தரவில்லை. வேறு வழியின்றி பாலியல் தொழிலுக்கும், கலெக் ஷனுக்கும் போக ஆரம்பித்தேன். அதில் என் படிப்பை முடித்தேன்.எங்களது சமூகத்தில் ஸ்டெல்லா என்பவர், என்னை தத்து எடுத்து பாலியல் தொழிலில் இருந்து மீட்டெடுத்தார். ஒப்பாரி ஆட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பின், கணியான் கூத்து ஆட ஆரம்பித்தேன்.தற்போது எட்டு ஆண்டுகளாக கணியான் கூத்து தான் பிழைப்பு. கணியான் கூத்து என்பது, தென் மாவட்டங்களில் வாழும் கணியான் மக்களின் குலதெய்வ வழிபாடு நடக்கும்போது ஆடும் ஆட்டம். ஒரு கூத்துக்கு போனால் 1,500 ரூபாய் கொடுப்பர். திருநங்கையர் சிலரை தத்து எடுத்து அவர்களை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு, என்னுடன் கூத்து கட்ட அழைத்துச் செல்கிறேன்.தற்போது என் பெற்றோரையும், அக்கா குழந்தைகளையும் என் வருமானத்தில் பார்த்துக் கொள்கிறேன்.வாழ்க்கை எப்போதும் போல் இருக்காது; சூழல் மாறும். யார் வெறுப்பைக் காட்டினாலும், பதிலுக்கு அன்பை காட்டுங்கள். அன்பிற்கு மட்டுமே அனைத்தையும் மாற்றும் சக்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை