உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பெரிய முதலீடு இல்லாத கேக் வியாபாரம்!: தரமாக கொடுத்தால் வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்!

பெரிய முதலீடு இல்லாத கேக் வியாபாரம்!: தரமாக கொடுத்தால் வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்!

தேனியில், 'நிலாஸ் ட்ரீட்' என்ற பெயரில், கேக் கடையை வெற்றிகரமாக நடத்தி வரும் நித்யா: எம்.பி.ஏ., முடித்துள்ளேன். என் கையிலும் நாலு காசு இருக்கணும்; அதுக்கு ஏதாவது செய்யணும் என்ற தேடல் இருந்தது. வீட்டை விட்டு வெளியே போகாமல் என்ன வியாபாரம் செய்யலாம் என தேடியபோது, கேக் செய்முறை குறித்து தெரிய வந்தது. சென்னைக்கு சென்று கேக் செய்வது குறித்த பயிற்சியில் பங்கேற்றேன். பின், மூன்று மாதங்கள் வீட்டிலும் தொடர்ந்து பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் குக்கரில் தான் கேக் செய்து பழகினேன். என் முயற்சி, ஆர்வத்தை பார்த்த கணவர், நவீன உபகரணங்கள் வாங்கி தந்தார்; அதில் இன்னும் பல விதமான கேக்குகள் செய்ய ஆரம்பித்தேன். கேக் செய்வது என்பது சாதாரண சமையல் கலை இல்லை; அது ஒரு அறிவியல். எப்படி செய்யணும், எந்தெந்த பொருட்களை எவ்வளவு சேர்க்கணும், எந்த வெப்ப நிலையில் செய்யணும் ஆகிய மூன்று முக்கியமான விஷயங்களை சரியாக செய்தாலே, கேக் வல்லுநர் ஆகலாம். நான் தயாரித்த கேக்குகளை முதலில் தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் இலவசமாக கொடுத்து, அவர்களின் கருத்துகளை கேட்டேன். அதன்பின், எங்கு கண்காட்சி நடந்தாலும் கடை அமைப்பேன். அப்போது தான் பெரியகுளத்தில் இருக்கும், தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் குறித்து தெரிய வந்தது. அங்கு சென்று, ஒரு பொருளை எப்படி சந்தைப்படுத்துவது, விலை நிர்ணயம் செய்வது போன்ற அனைத்து விபரங்களை யும் தெரிந்து கொண்டேன். என் கேக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரிந்து, என் குடும்பத்தினர் என்னை கடை துவங்கும்படி கூறினர். அதனால், 'நிலாஸ் ட்ரீட்' கடையை திறந்தேன். ஆரம்பத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு லாபம் இல்லை. தற்போது சுற்றுவட்டாரத்தில் என் கடை பிரபலமாகி விட்டது. கம்பத்திலும் ஒரு கடை ஆரம்பித்துள்ளேன். பெரிய முதலீடு இல்லாமல் தான் வியாபாரத்தில் நுழைந்தேன். இப்போது, 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். வீட்டு வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த பெண்களுக்கு, கேக் செய்ய கற்றுக் கொடுத்து வேலைக்கும் அமர்த்தியுள்ளேன். மாதம், 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. செலவெல்லாம் போக, 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. எவரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் வாழ நினைத்தேன்; அதற்காக உழைத்தேன். தோல்விகளில் இருந்து பாடங்கள் கற்று, திருத்திக் கொண்டேன். இன்று நானும் வெற்றிகரமான தொழில் முனைவோராக வளர்ந்திருக்கிறேன்! தொடர்புக்கு: 93445 97833

தரமாக கொடுத்தால் வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்!

திருநெல்வேலி மாவட்டம், கீழ முன்னீர்பள்ளம் என்ற கிரா மத்தில், 'நற்பவி தேனீ பண்ணை' நடத்தி வரும் சந்தன சரஸ்வதி: தற்சார்பு வாழ்க்கை பயிற்சி ஒன்றில், வீட்டிலேயே தேனீக்கள் வளர்ப்பது பற்றி கற்றுக் கொண்டேன். என் குழந்தைகளுக்கு சுத்தமான தேன் கொடுக்க வேண்டும் என்பதற்காக என் வீட்டை சுற்றி, 20 தேன் பெட்டிகளை வைத்தேன். அதிலிருந்து கிடைத்த சுத்தமான தேனை வீட்டிற்கு பயன்படுத்தினேன். அக்கம், பக்கத்தினர் தங்களுக்கும் விலைக்கு தர முடியுமா என்று கேட்டனர். அப்போது தான், இதை வியாபாரமாக செ ய்யலாம் என்ற யோசனை வந்தது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேனீ வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டு, மேலும் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். சென்னையில் நடந்த ஒரு விழாவில் இலவசமாக, தற்காலிக கடை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற என்னிடம், 'யு டியூப் சேனல்' ஒன்றில் இருந்து, 'எது நல்ல தேன்?' என்ற தலைப்பில் பேட்டி எடுத்தனர். அந்த வீடியோவை, 45 லட்சம் பேர் பார்வையிட்டனர். அதன்பின், வியாபாரம் முன்னேற்றம் அடைந்தது. திருநெல்வேலியில் உள்ள பழத்தோட்ட விவசாயிகள் சிலரை அணுகி, அவர்களின் தோட்டத்தில் தேனீ பெட்டிகளை வைக்க அனுமதி கேட்டேன்; விவசாயிகள் அனுமதி அளித்தனர். ஆரம்பத்தில், 50 பெட்டிகள் வீதம் வைத்தேன். தற்போது, 350 பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபடுகிறேன். பன்மலர் தேன், முருங்கை தேன், நாவல் பூ தேன், மலைத்தேன், கொம்புத் தேன் வகைகளை விற்பனை செய்கிறேன். தேனை பயன்படுத்தி ரோஜா குல்கந்து, தேன் நெல்லிக்காய், பூண்டு தேன் உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து, விற்பனை செய்கிறேன். அதே போல், தேனுடன் சோற்றுக் கற்றாழை, கருப்பட்டி, பூண்டு ஆகியவற்றை கலந்து தயாரிக்கும் குமரி பக்குவம், இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, ஆப்பிள் சி டர் வினிகர் ஆகியவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறேன். இந்தியா முழுதும் தேனை விற்பனைக்கு அனுப்புகிறேன். அதே நேரம், சேதாரம் இல்லாமல் அனுப்புவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு சவாலும், ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும். இணையதளத்தின் வாயிலாக தான் விற்பனை நடக்கிறது. ஏழு பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். மாதம், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. தரமான பொருட்களை, நியாயமான விலையில் கொடுக்கும் போது, வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்! தொடர்புக்கு: 94877 06061.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ