உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / தமிழகத்திலிருந்து தேர்வான 7 பேரில் நானும் ஒருவன்!

தமிழகத்திலிருந்து தேர்வான 7 பேரில் நானும் ஒருவன்!

நம் ராணுவத்துக்கு சொந்தமான, 'டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன்' எனும் டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின், ஆளில்லா போர் விமான இன்ஜின் ஆராய்ச்சி திட்ட மேலாளர் டில்லிபாபு:சென்னை வியாசர்பாடி, மல்லிகைப்பூ காலனியில் சின்ன ஓட்டு வீட்டில் தான் பிறந்தேன். 10ம் வகுப்பு வரை தமிழ் மீடியம் தான்; அதன்பின் ஆங்கில மீடியம். திடீரென அப்பா வேலை பார்த்த கம்பெனியை மூடியதால், வறுமை தாண்டவமாடியது.அப்போது, பிளஸ் 1ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். வீட்டில் கடனுக்கு மேல் கடன். ஆனாலும், 'டாப்பராக' வந்தேன். டி.வி.எஸ்., அசோக் லேலண்ட் என, இரண்டு நிறுவனங்களிலும் வேலை கிடைத்தது. ஆனாலும், இன்ஜினியரிங் படிக்க ஆசை; அப்பாவிடம் கூறினேன். அப்பாவும், 'கொஞ்சம் காலம் கஷ்டத்தை தாங்கிக்கலாம், படி' என்றார்.இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே ரயில்வேயில் வேலை கிடைத்தது. இந்திய அளவில் இரண்டே இடம். இரண்டு பேரில் ஒருத்தனா தேர்வானேன்.ஆயினும், அப்துல் கலாம் அய்யா போல, எனக்கும் ராணுவ விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவு சிறு வயது முதலே இருந்தது. அதனால், ரயில்வே வேலை பார்த்தபடியே தேர்வுகள் எழுதினேன்.கடனில் இருந்து சிறிது சிறிதாக குடும்பத்தை மீட்டெடுத்தேன். அப்துல் கலாம், 'சீப் சயின்டிஸ்ட்'டாக பணியாற்றிய டி.ஆர்.டி.ஓ.,வில் பணி அறிவிப்பு வந்தது; தேர்வெழுதினேன். தமிழகத்தில் இருந்து தேர்வான ஏழு பேரில் நானும் ஒருவன்.டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தை இந்திய ராணுவத்தோட மூளை என்று சொல்லலாம். புதிய ஆயுதங்கள், டேங்குகள், நீர்மூழ்கி கப்பல்கள், பாம்கள் என, ராணுவத்துக்கான தளவாடங்களை வடிவமைக்கும் நிறுவனம். பெரிய ரக ஆளில்லாத போர் விமான இன்ஜின் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் திட்ட பொறுப்பாளராக இருக்கேன்.'வியாசர்பாடியில் வீடு கட்டணும்' என்றார் அப்பா. 'படித்தால் வாழ்க்கை மாறும்; அதை எல்லாருக்கும் புரிய வைக்கணும்' என்றார். உடனே வீடு கட்டும் வேலையை துவக்கினேன். வீட்டின் முதல் தளத்தில் ஒரு நுாலகமும், வழிகாட்டி மையமும் உள்ளன.மாணவர்கள் இந்த நுாலகத்தை எப்போது வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாதம் ஒரு கலந்துரையாடல் நடக்கும். சிவில் சர்வீஸ் அதிகாரிகள், பைலட், கேப்டன் என மாதம் ஒருவர் இங்கு கலந்துரையாடலுக்கு வருவர்.'படித்தால் ஜெயித்து விடலாம்' என்ற அழுத்தமான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியவர், என் தாத்தா சபாபதி. கலாம் அய்யா பேருடன், தாத்தா பெயரையும் சேர்த்து, 'கலாம் - சபா நுாலகம், வழிகாட்டி மையம்' என, பெயர் வைத்துள்ளேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karthik
டிச 07, 2024 09:18

நல்ல வேளை நீங்க படிக்கும் பொது உங்க பகுதியில் இந்த மிதிக்கிறாங்க பிதுக்குறாங்க கும்பல் இல்லை.. ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் இந்நேரம் பிதிக்கிட்டாங்க மித்திச்சுட்டாங்க என்று ரோட்ல பாட்டு பாடிட்டு இருந்திருப்பீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை