உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  திடமான மனமிருந்தால் எந்த வேலையும் செய்யலாம்!

 திடமான மனமிருந்தால் எந்த வேலையும் செய்யலாம்!

ஈரோடு மாவட்டம், மேட்டுக்கடை பகுதி யில், 'ஸ்ரீ சக்தி ஆட்டோ ஒர்க்ஸ்' கடையில், பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் ரேவதி: எம்.காம்., முதுநிலை பட்டம் பெற்றுள்ளேன். இது, என் கணவரின் கடை. திருமணமான புதிதில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை வாங்கி கொடுப்பது, வண்டிகளை சுத்தம் செய்வது என, கணவருக்கு சிறு சிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். வண்டிகளை பழுது பார்க்க வருவோர், உடனே சரி செய்து தரும்படி கேட்பர். அதனால் கணவர் சாப்பிடாமல் கூட, வேலை செய்தபடியே இருப்பார். அவரது பணிச் சுமையை குறைக்க பஞ்சர் ஒட்டுவது, வண்டியை சுத்தம் செய்வது, டயரை கழற்றுவது மாதிரியான வேலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன்பின் சிறிது சிறிதாக பிரேக், கிளட்ச் வேலைகளையும் கற்றுக் கொண்டேன். இப்போது இன்ஜின் வேலை கூட எனக்கு அத்துப்படி. 'எம்.காம்., படிச்சிட்டு மெக்கானிக் வேலை செய்யுது பாரு' என, பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், எனக்கு பிடித்ததை நான் ஏன் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கணும். இது, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை தான். ஆனால், அது ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் வேலை என்பது தவறான கருத்து. திடமான மனம் இருந்தால், எந்த வேலையையும் எவரும், எந்த வயதிலும் செய்யலாம். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். குடும்பத்தையும், வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்வது மிகவும் சிரமம் தான். ஆனாலும், ஒரு விஷயம் நமக்கு வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தால், எல்லாவற்றையும் சாத்தியப்படுத்துவோம். காலை, 9:00 மணிக்கு வேலைக்கு வந்தால், இரவு 7:00 மணி வரை வேலை இருக்கும். 'நான் முதலாளி. இந்த வேலை தான் செய்வேன்' என்று ஒதுங்கி உட்கார மாட்டேன். தொடர் வாடிக்கையாளர்கள் இருப்பதால், வேலைகள் வந்தபடியே இருக்கும். ஆரம்பத்தில் கணவர் மட்டும் வேலை பார்த்த இடத்தில், இப்போது, ஒன்பது பேர் வேலை செய்கிறோம். நிறைவான வருமானமும் கிடைக்கிறது; பிடித்த வேலையை செய்கிற சந்தோஷமும் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ