உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / உழைப்பு இருந்தால் எந்த சூழலிலும் மீண்டு விடலாம்!

உழைப்பு இருந்தால் எந்த சூழலிலும் மீண்டு விடலாம்!

சென்னை குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையில் பானி பூரி கடை நடத்தி வரும், வேலு: என் சொந்த ஊர், திருப்பத்துார் மாவட்டம், ஜலகம்பாறை. பிழைப்பு தேடி சென்னை வந்தேன். கையில், 10 காசு கூட இல்லை. இந்த பகுதியில், ராமச்சந்திரன்னு ஒரு மாஸ்டர், பானி பூரி கடை நடத்தி வந்தார்; அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்பத்தில் வெங்காயம் வெட்டுவது, பாத்திரம் தேய்ப்பது என, சிறு சிறு வேலைகள் கொடுத்தார். அன்னன்னைக்கு வியாபாரத்தை பொறுத்து, 100, 200 என சம்பளம் கொடுப்பார்; ஐந்து ஆண்டுகள், அவரிடம் வேலை பார்த்தேன். மசாலா பொடி தயாரிப்பது முதல் வியாபாரம் வரை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். மாஸ்டர் இல்லாதபோது, கடையை நடத்தும் அளவுக்கு அனைத்தையும் தெரிந்து கொண்டேன். இதற்கிடையில் திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தனர். பழைய வருமானத்தில் குடும்பம் நடத்த முடியவில்லை. அதனால் நானும், மனைவியும் சேர்ந்து பானி பூரி கடை ஆரம்பித்தோம். எல்லா வேலைகளையும், மனைவிக்கு சொல்லிக் கொடுத்தேன். கடை ஆரம்பித்த புதிதில், வியாபாரமே இருக்காது. ஒரு நாளைக்கு, 200 ரூபாய் சம்பாதிப்பதே பெரிய விஷயமாக இருந்தது. சாப்பாட்டுக்கு கூட காசில்லாமல், பசியுடன் துாங்கிய நாட்கள் அதிகம். முதல் நாள் கிடைக்கிற வருமானத்தை வைத்து தான், அடுத்த நாள் கடையை திறப்போம். மெல்ல வியாபாரம் சூடுபிடித்த நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்து, எங்களை மீளவே முடியாத இடத்துக்கு தள்ளியது. கடை போட முடியாமல், வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, சாப்பாடு என அனைத்திற்கும் மிகவும் சிரமப்பட்டோம்; சேமிப்பும் இல்லை. எத்தனை நாட்கள் பிள்ளைகளை பட்டினி போட முடியும்... கடன் வாங்கி, சமாளித்தோம்! கொரோனா முடிவுக்கு வந்தபோது, கடன் சுமை விஸ்வரூபம் எடுத்திருந்தது. ஏதோ ஒரு நம்பிக்கையில் மறுபடியும் கடையை திறந்தோம்; மெல்ல எழுந்து நின்றோம். கடந்த மூன்று ஆண்டுகளில், கடைக்கு ஒருநாள் கூட லீவு விட்டதில்லை. இப்போது நாள் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக கடன்களை அடைத்து, மகளுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டோம். பணம், சொத்து, சுகம் என எதுவுமே இல்லாத நிராயுதபாணி நிலைக்கு, வாழ்க்கை நம்மை தள்ளலாம். ஆனால், உழைப்பு என்ற ஆயுதம் உங்களிடம் இருக்கும் வரை, எந்த சூழ்நிலையில் இருந்தும் மீண்டு எழுந்து விடலாம்; இதற்கு நானே உதாரணம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ