தனிமை மிகவும் வேதனையான விஷயம்!
திருநெல்வேலியில் பிறந்து, மதுவுக்கு அடிமையாகி, மனைவி, மகன்களை பிரிந்து, 78 வயதில், தற்போது சென்னையில், தனிமையில் வாடும், கவுரவமான பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான, கவிஞர் விக்ரமாதித்யன்: தமிழ்க் கவிதைகள் எளிமையானவை. சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், சிற்றிலக்கியம் முழுதும், எளிமையானவை தான். எங்கள் நெல்லை மக்கள் எளிமை யான தமிழில் தான் பேசுகின்றனர். என் அப்பாவிடம், சினிமாவின் தாக்கம் அதிகம் இருந்தது. நான் வந்த வழி, தமிழ் திரைப் பாடல்கள் வழியாக தான். கண்ணதாசனின் வரிகளில் உள்ள அளவிட முடியாத நயம், யோசிக்க முடியாத எளிமையே, என்னை கவிதைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். சொல்லப்போனால் எனக்கு எழுத வரும் என்று கூட தெரியாது. கவிதை எழுதுவேன் என்று ச த்தியமாக தெரியாது. வரும் என்று தெரிந்த பின் கூட, பணம், புகழ் பெரிதாக படவில்லை. காலத்திற்கும் நிற்கக் கூடிய, 50 கவிதைகளையாவது வாழ்நாள் முடிவதற்குள் எழுதி விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கவிதை எழுதுவதை தான் எப்போதும் கருத்தில் வைத்துக் கொண்டே இருந்தேன். குடும்பத்தை கவனிக் காமல், மது அருந்திக் கொண்டு, பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகை வேலையை கூட விட்டு விட்டு திரிந்தேன். என் மனைவி தான், குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தாள். கடந்த, 1958 - 63 காலங்களில், குழந்தைத் தொழிலாளியாக நான் பார்க்காத வேலை கிடையாது. சித்தாள் வேலை, காயலான் கடை உதவியாளர், ஹோட்டல்களில் சாப்பாட்டு டேபிள் துடைப்பது என, பல வேலைகளில் இருந்திருக்கிறேன். எங்கள் வீட்டில் வறுமை கொடி கட்டிப் பறந்த காலம் அது. குன்றக்குடி அடிகளார் ஆதீனத்தில் உதவியாளராக இருந்தேன். அந்த வேலையிலேயே தொடர்ந்திருந்தால், இன்றைக்கு காசு பணத்தில் நிறைவாக இருந்திருப்பேன். கவிதை எழுதுவதும், கவிதை குறித்து எழுதுவதும் தான் என் வேலையாக இருந்தது. 'உன்னை சிதைத்துக் கொண்டு இப்படி இருக்கணுமா?' என வேண்டப்பட்டவர்களும், நண்பர்களும் கேட்டுக் கொண்டே தான் இருந்தனர். அதையெல்லாம் இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர்; திருப்பித் தர வேண்டிய நிர்ப்பந்தம் அல்லாதவை அவை. மதுவை குறைவாக குடிப்பதில், எனக்கு சிறிதும் உடன்பாடு இருந்ததில்லை. மகன்களுக்கும், மனைவிக்கும் அது, கடும் துன்பமாக மாறிவிட்டது. தற்போது, மது அருந்துவதை நிறுத்தி விட்டேன்; தனியாக தான் இருக்கிறேன். கடந்த இரு ஆண்டுகளாக, முதுமையை உணர்கிறேன். நோய் வந்து படுத்து விட்டால் யார் பார்ப்பர் என்ற பயம் ஏற்படுகிறது. 'தனிமை' என்ற வார்த்தை, நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது; அது வேதனையான விஷயம்.