உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பயறு, எண்ணெய் விற்பனையில் மாதம் ரூ.2.80 லட்சம் லாபம்!

பயறு, எண்ணெய் விற்பனையில் மாதம் ரூ.2.80 லட்சம் லாபம்!

பயறு மற்றும் எண்ணெய் வகைகளை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும், தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆதவன்: நாங்க விவசாய குடும்பம். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். பள்ளி படிப்பை முடிச்சதும், உணவு துறை சார்ந்து படிக்க முடிவெடுத்து, நாமக்கல்ல உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், பி.டெக்., உணவு தொழில்நுட்பம் படிச்சேன். அதை முடிச்சதுமே, ஒரு பிரபல நிறுவனத்துல உணவு பொருட்கள் தயாரிப்பு பிரிவுல, சில மாதங்கள் வேலை பார்த்தேன்.ரசாயனம் கலந்து தான் பெரும்பாலான பொருட்கள் மதிப்பு கூட்டப்படுதுன்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அந்த வேலையில எனக்கு உடன்பாடு இல்லாம விட்டுட்டேன்.அதனால், இயற்கை முறையில் விளைவிக்கிற உளுந்து, துவரை, பச்சை பயறு, கொண்டைக்கடலை உள்ளிட்ட பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முடிவெடுத்தேன். வங்கியில் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்று, கோவையில் இருந்து இயந்திரங்கள் வாங்கி தொழிற்கூடத்தை துவக்கினேன்.பருப்புகளை கொள்முதல் செய்து தோல் நீக்கியும், உடைத்தும் விற்பனை செய்கிறேன். விவசாயிகள் தரும் பயறுகளையும் மதிப்பு கூட்டி தருகிறேன். மாசத்துக்கு 1,000 கிலோ வெள்ளை உருட்டு உளுந்து விற்பனையில், 1 கிலோவுக்கு 140 ரூபாய் வீதம், 1.40 லட்சம் ரூபாயும்; 700 கிலோ பச்சைப்பயறு விற்பனையில், 1 கிலோவுக்கு 160 ரூபாய் வீதம், 1,12 லட்சம் ரூபாயும் வருமானம் கிடைக்குது.தவிர, 600 கிலோ துவரம் பருப்பு விற்பனையில், 90,000 ரூபாயும்; 300 கிலோ கடலைப் பருப்பு விற்பனையில், 36,000 ரூபாயும் வருமானம் கிடைக்குது. இந்த நாலு வகையான பொருட்கள் விற்பனை மூலம், மாசத்துக்கு 3.78 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது.செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் இவற்றில் கிடைக்கும் புண்ணாக்கையும் விற்பனை செய்கிறேன்.பயறு வகைகளில் 3.78 லட்சம் ரூபாய், எண்ணெய் மற்றும் புண்ணாக்கு விற்பனை யில் 3.13 லட்சம், விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தானியங்களை மதிப்பு கூட்டல் பண்ணி கொடுக்குறதுக்கான கட்டணம் மூலம் 25,000 ரூபாய் என, ஒரு மாசத்துக்கு 7.16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது.இதுல, எல்லா செலவுகளும் போக, 2.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்குது. எதிர்காலத்துல இன்னும் பல மடங்கு லாபம் பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு.தொடர்புக்கு63744 85144கையால் நெசவு செய்வதால் தான் நாங்கள் தனியாக தெரிகிறோம்!பள்ளி படிப்பை எட்டாம் வகுப்புடன் கைவிட்டு, தன் அப்பாவுடன் சேர்ந்து தொழில் கற்று, கோவில் நகரமாக விளங்கும் கும்பகோணத்தின் அடையாளமாக மாறியிருக்கும், 'ஸ்ரீ முருகன் சில்க்ஸ்' கடையின் உரிமையாளர் கே.ஆர்.முருகன்:எங்கள் சொந்த ஊரான கும்பகோணத்தில், அப்பா தறி நெய்கிற நெசவுக் கூடத்தில் கூலி வேலை பார்த்தார். பின், சேமித்த பணத்தில் சொந்தமாக திருபுவனம் பட்டுப் புடவை நெய்வதற்கான தறியை ஆரம்பித்து, பாவு, பட்டு, ஜரிகை ஆகியவற்றை வாங்கி சொந்தமாக தொழில் செய்ய துவங்கினார்.அப்பா செய்வதை பார்த்து, எனக்கும் இந்த தொழில் மீது ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. அதனால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, முழு நேரமாக இதையே செய்ய ஆரம்பித்தேன்.என் திருமணத்திற்கு பின், 1993ல் ஸ்ரீ முருகன் சில்க்ஸ் என்ற பெயரில் தனியாக கடை ஆரம்பித்து, 10க்கும் மேற்பட்ட தறிகள் அமைத்து, திருபுவனம் பட்டுப் புடவை உற்பத்தியில் இறங்கினேன்.அப்பாவுடன் வேலை செய்யும் போதே பல கடைகள் மற்றும் வியாபாரிகளின் அறிமுகம் இருந்ததால், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை அமோகமாக நடந்தது.எந்த சமரசமும் செய்யாமல் ஒரிஜினல் பட்டு, ஜரிகை போன்ற தரமான பொருட்களில் கஸ்டமர்களுக்கு புடவை செய்து கொடுத்தேன்.என் உழைப்பிற்கு ஏற்றாற்போல் ஒரு கட்டத்தில், 45 தறிகளில், 100 பேர் வேலை செய்து, மாதம் 150 பட்டுப் புடவைகள் உற்பத்தி செய்யும் அளவுக்கு கடை வளர்ச்சி அடைந்தது.இன்றைக்கும் பாரம்பரிய முறைப்படி, கையால் நெசவு செய்வதால் தான் நாங்கள் தனியாக தெரிகிறோம்.இந்த 30 ஆண்டு களில் பல போட்டியாளர்கள் வந்தாலும் கூட, எங்களின் கஸ்டமர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது.இப்போது கூடுதலாக காட்டன் வேட்டி, சட்டை உள்ளிட்ட ரகங்களும் விற்பனை செய்கிறோம். தரம், நேர்மை, பணிவான அணுகுமுறை ஆகியவற்றால் கஸ்டமர்களின் கைராசி கடையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை