ரூ.50,000 செலவில் காளான் வளர்ப்பு ரூ.1.10 லட்சம் லாபம்!
வீட்டிலேயே சிப்பிக்காளான் வளர்த்து, விற்பனை செய்து வரும், திருப்பத்துார் மாவட்டம், ராமநாயக்கன்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார்: என் சிறு வயதில் அப்பா இறந்து விட்டார். அண்ணன் தான் என்னை வளர்த்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும், பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். பிராய்லர் கோழி பண்ணையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். கொரோனா சமயத்தில் வேலை போய்விட்டது. அந்த சமயத்தில் சொந்த தொழில் துவங்க முடிவெடுத்தேன். அப்போது, காளான் வளர்ப்பு குறித்த சமூக வலைதள வீடியோக்கள் என் கவனத்தை ஈர்த்தன. இது சம்பந்தமான அடிப்படை தொழில்நுட்பங்களை கற்று, 10,000 ரூபாய் முதலீட்டில் சிறு அளவில் தொழிலை துவங்கினேன். தொழில் துவங்கிய புதிதில், நிறைய சவால்களை சந்தித்தேன். ஆனாலும், நம்பிக்கை இழக்கவில்லை. நாளடைவில் நேரடி அனுபவங்கள் வாயிலாக, தொழில் நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் கற்றுக் கொண்டேன்.கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவான லாபம் கிடைத்து வருகிறது. 'காளான் சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது; ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது' என்ற விழிப்புணர்வு அதிகரித்ததால், மக்கள் இதை மிகவும் விரும்பி வாங்குகின்றனர். ஆரம்பத்தில் உறவினர்கள், தெரிந்தவர்கள், பக்கத்து வீடுகள் என விற்பனை செய்து வந்தேன். அதன்பின், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.காய்கறி கடைகள், மளிகை கடைகள், இயற்கை அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வினியோகம் செய்கிறேன். இரண்டு கூடாரங்களிலும் சேர்த்து, மொத்தம் 700 பைகளில் காளான் வளர்க்கிறேன். இதில், ஒரு மாதத்திற்கு சராசரியாக 600 கிலோ மகசூல் கிடைக்கிறது. 1 கிலோ, 250 ரூபாய் என விற்பனை செய்கிறேன். மொத்தம், 550 கிலோ காளான் விற்பனை வாயிலாக, 1 லட்சத்து 37,500 ரூபாய் கிடைக்கிறது. மீதமுள்ள 50 கிலோ காளான்களை ஊறுகாயாக மதிப்பு கூட்டி, 1 கிலோ 450 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்; அதன் வாயிலாக 22,500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.காளான் ஊறுகாய்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 3 - 4 திருமண விருந்துகளுக்கு காளான் ஊறுகாய் கேட்டு ஆர்டர்கள் வருகின்றன. ஒரு திருமண விருந்திற்கு குறைந்தபட்சம் 10 கிலோ முதல் அதிகபட்சம் 20 கிலோ கேட்பர்.ஆக, சிப்பிக்காளான் வளர்ப்பு வாயிலாக, ஒரு மாதத்திற்கு மொத்தம், 1.60 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக, 1.10 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.தொடர்புக்கு: 97877 12528