| ADDED : செப் 16, 2011 08:58 PM
'குறைவான கட்டணம் திருப்தியான சேவை!' நடமாடும் பல் மருத்துவர் வித்யா: அம்மா கலிங்கராணி நர்சாக இருந்தார். அதனால், எனக்கு சின்ன வயதிலேயே அம்மா போல, சேவை மனப்பான்மை வந்துவிட்டது. 2004ல், ராமச்சந்திராவில் பல் மருத்துவம் முடித்தேன். உடனே தரமணி மருத்துவமனையில், எச்.ஐ.வி., நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்தனர். விருப்பத்துடன் சென்றேன். சொந்தமாக ஒரு பல் மருத்துவமனையைத் துவக்கினேன். மிகக் குறைவான கட்டணம் வாங்கிக் கொண்டு, திருப்தியான பணி செய்கிறேன். சமூகத்திற்கு, நான் பல பணிகள் ஆற்ற வேண்டியுள்ளது. அதனால், 'வளமுடன் வாழ்வோம்' என்ற பெயரில் சமூக அமைப்பைத் தொடங்கினேன். இதில், பெண்களின் நலத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற முனைப்பில், இன்று வரை செயல்படுத்தி வருகிறேன். நிறைய வீடுகளில், அம்மாக்கள் தங்கள் நலத்தைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது. கிராமப்பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தும் போது, பல குழந்தைகளுக்கு உடல் நலத்தைப் பேணும் அறிவுரைகளையும், மருத்துவ உதவிகளையும் செய்கிறேன். முதியவர்கள், கிராமப்புறவாசிகள் போன்ற பலரிடம் அன்பாக, கனிவாக பேசி உடல் நலம் விசாரிப்பது, எல்லா இடங்களிலும் குறைவு. அதனால் தான், கிராமப்புற பெரியவர்கள் மருத்துவமனைக்கு வராமலே, பல பிரச்னைகளை மூடி மறைத்துக் கொள்கின்றனர். அவர்களைத் தேடிச் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று நினைத்துத் துவக்கியது தான், நடமாடும் பல் மருத்துவக் குழுமம். என்னைத் தேடி வருபவர்களிடமும் சரி, அவர்களே அழைத்து நான் செல்லுமிடத்திலும் சரி, கட்டணம் குறைவாகத் தான் பெற்றுக் கொள்வேன். மக்களைத் தேடித் தேடி வைத்தியம் பார்க்கிறேன். இன்னும் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமை நிறைய உள்ளது.