உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / எவ்வளவு கஷ்டத்திலும் கடை போடாமல் இருக்க மாட்டேன்!

எவ்வளவு கஷ்டத்திலும் கடை போடாமல் இருக்க மாட்டேன்!

சாலையோரம் பழக்கடை நடத்தி வரும், திருப்பத்துார் மாவட்டம், கோடியூர் ஏரியாவைச் சேர்ந்த, 68 வயது மூதாட்டி பாரதி:திருப்பத்துார் மாவட்டம், மேட்டுசக்கர குப்பம் கிராமம் தான் என் சொந்த ஊர். சிறுவயதிலேயே திருமணமாகி விட்டது. கணவர் பழ வியாபாரம் செய்து வந்தார். எங்களுக்கு மூன்று பெண்கள், ஒரு ஆண் குழந்தை பிறந்தன. கணவருடன் சேர்ந்து நானும் தொழிலுக்கு செல்ல ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், 10 ஆண்டுகள் தலை மீது கூடை வைத்து, அதில் பழங்களை சுமந்து விற்று வந்தோம். அதன்பின் சைக்கிளில் கூடை கட்டி, அதில் பழங்கள் விற்பனை செய்தோம். காலையில் பழங்கள் எடுத்து சென்றோம் எனில், மாலை வெறும் கூடையுடன் தான் வருவோம்.என் கணவர் அப்படி உழைக்கிற மனிதர். சிறிது காலத்தில் ஒரு பெரிய புளிய மரத்தின் அடியில் கடை போட்டோம். 30 ஆண்டுகளாக அந்த புளிய மரத்தடியில் தான் கடை. மக்கள் நின்று வாங்க ஏற்ற இடம். நிழல் தந்த மகராசி அது. எங்கள் கடைக்கு அந்த மரம் தான் அடையாளம்.அத்துடன் கணவர் ஒரு ஆட்டோ வாங்கி, அதிலும் பழங்களை கொண்டு சென்று, விற்க ஆரம்பித்தார். சிறுக சிறுக சேமித்து, இடம் வாங்கி, வீடு கட்டி, மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து முடித்தோம். அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில், கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். எங்கள் பிழைப்பை துாக்கி நிறுத்திய புளிய மரத்தை, சாலை போடுவதற்காக வேருடன் வெட்டி விட்டனர். ஆட்டோவும் இல்லை; மரமும் இல்லை. எங்கு கடை போடுவது என தள்ளாட்டம்.அதனால், சந்தைகளில் கடை போட்டேன். மகன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துக் கொள்வான். 3,000 ரூபாய்க்கு பழம் விற்பனையானால், 500 ரூபாய் லாபம் கிடைக்கும். என் கடை தான் எனக்கு பலம். என் மூச்சு உள்ள வரை என் மகனுக்கு முடிந்த உதவியை செய்வேன். இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை; கம்பு ஊன்றி தான் நடக்கிறேன்.கடைக்கு வரும் சிலர், 'இந்த வயதில் வீட்டில் இருக்கலாமே' என கேட்கின்றனர். ஆனால், நம் கஷ்டத்தை அவர்களிடம் சொல்வது நன்றாக இருக்காது. இப்போது எல்லாம் வெளிக் கடைகளில் கலர் ஜூஸ் தான் குடிக்கின்றனர். கடையில் ஓரளவுக்கு தான் வியாபாரம் நடக்கிறது.எவ்வளவு கஷ்டத்திலும் கடை போடாமல் இருக்க மாட்டேன். கடை போடவில்லை எனில், உடம்பிற்கு ஏதோ வந்த மாதிரி இருக்கும். வியாபாரம் ஆகட்டும், ஆகாம போகட்டும்... நான் கடையில் தான் இருப்பேன். 40 ஆண்டுகளாக உழைக்கிற கட்டை... எல்லாத்தையும் தாங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை