மிலிட்டரிக்கு வரும்படி அழைத்த அதிகாரிகள்!: நடிகர் சிவகார்த்திகேயன்
என் அப்பா சிறைத் துறையில் பணியாற்றியதால், சுதந்திர தினத்தின் போது, அங்கு செல்வேன். அங்கு, உயர் அதிகாரிகள் உட்பட பலர், தேசியக் கொடிக்கு, 'சல்யூட்' அடிப்பதை வியந்து பார்த்திருக்கிறேன். அப்போதிருந்து தேசிய கொடி மீது பெரிய மரியாதை ஆழ்மனதில் பதிந்து விட்டது.ராணுவத்தில் பணியாற்றி வீர மரணமடைந்த, மேஜர் சரவணன் இறுதிச்சடங்கு திருச்சியில் நடந்தபோது அதில் பங்கேற்றேன். அப்போது, ராணுவத்தினர் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது. அப்படியொரு ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக கொண்ட படத்தில் நடிப்பேன் என்று நினைத்து பார்த்தது கூட கிடையாது. அமரன் திரைப்படம், 'மிலிட்டரி ஆப்பரேஷன்' சம்பந்தப்பட்ட கதையல்ல; ஒரு ராணுவ அதிகாரியின், 'எமோஷனல் ஜர்னி!'அமரன் திரைப்படம் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது என்பதால், அதிகமாக, 'செட்' போடாமல், அவர் வாழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம்; ஆனால், அது கஷ்டமாக இருந்தது. குறிப்பாக, காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதல்ல.ராணுவ முகாமில் முறையாக அனுமதி வாங்கி, படப்பிடிப்பு நடத்தினோம். நம்மிடையே இருந்த ஒரு ஹீரோ குறித்த சினிமா என்பதால், ராணுவத்தினரின் ஒத்துழைப்பும் அதிகமாகவே இருந்தது.அப்போது, தமிழகத்தை சேர்ந்த பல ராணுவ வீரர்களை சந்தித்து பேசினோம்; அவர்களின் கதையை கேட்டோம். அவை சுவாரஸ்யமானவை; சில கதைகள் மனதை கனமாக்குபவை. 'நேற்று வரை உடன் இருந்த நண்பர்களை, மறுநாள் சண்டையில் இழந்திருக்கிறோம். ஆனாலும், மறுநாள் வழக்கமான பணியை தொடர்வோம். வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக முகாமுக்கு திரும்புவது நிச்சயமில்லை' என, வேதனையுடன் கூறினர். மேஜர் முகுந்த் பணியாற்றிய, 'ராஷ்ட்ரிய ரைபிள்' என்ற ஸ்பெஷல் ராணுவ பிரிவு தான், அதிரடி சண்டைகளுக்கு செல்லும் முக்கிய அணி.முன்னதாக, முகுந்த் வரதராஜனின் பெற்றோரை சந்தித்து பேசினேன். அவர்களின் மகன் பாத்திரத்தில் நான் நடிக்க போகிறேன் என்று கூறி, ஆசி வாங்கினேன். என்னை உற்சாகப்படுத்தியதுடன், நம் ராணுவம் குறித்த பெருமைகளை பகிர்ந்து கொண்டனர். புதுடில்லியில், அமரன் படத்தை ராணுவத்தில் உள்ள அதிகாரிகள் பார்த்து விட்டு, படத்தின் இடைவேளையில் என்னை தொடர்பு கொண்டு, 'நீங்கள் தவறான துறையில் இருக்கீங்க. மிலிட்டரிக்கு வந்துடுங்க... வந்து எங்களோடு சேருங்கள்' என்று கூறினர். அதை நான் பெருமையாக நினைக்கிறேன். இந்த வார்த்தைகள் தான் எனக்கு விருது!