மேலும் செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்வேன்!
13-Jul-2025
பொரி உருண்டை தயாரித்து விற்பனை செய்யும், திருச்சி மாவட்டம், காவல்காரன்பட்டியைச் சேர்ந்த அன்னகாமாட்சி:எனக்கு, 18 வயதில் திருமணம் ஆனது. பெற்றோர் வீட்டிலும், கணவர் வீட்டிலும் பொரி வியாபாரம் தான் தொழில். இதனால், திருமணம் ஆனதும், நாங்கள் பொரி உருண்டைகளாக செய்து விற்க ஆரம்பித்தோம்.இந்த, 27 ஆண்டுகளாக இதுதான் எங்களுக்கு பிழைப்பு. நானும், கணவரும் எங்கள் இரு மகள்களையும் படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இரு மகள்களையும் டிகிரி படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து விட்டோம். எல்லாமே பொரி உருண்டை வியாபாரத்தில் வந்த காசு தான்.நான் பொரி உருண்டை செய்வேன்; கணவர் அதை ஊர் ஊராக சென்று விற்று வருவார். திங்கள் கிழமையில் எங்கள் ஊர் சந்தையில் நான் கடை போட்டு, பொரி உருண்டை விற்பேன். மற்றபடி, சமயபுரத்தில் மொத்த விற்பனையாளர்களுக்கு பொரி உருண்டை செய்து விற்று விடுவோம். கணவர், மணப்பாறைக்கு சென்று பொரி வாங்கி வருவார். நான் அதிகாலை எழுந்து, வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து, பொரி உருண்டை செய்ய ஆரம்பிப்பேன்.முதலில், சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வெல்லத்தை போட்டு பாகு காய்ச்சணும். பாகை கையில் எடுத்தால், மிட்டாய் மாதிரி ஆகும் வரைக்கும் பதம் பார்த்து, அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும். பாகில் சூடு இறங்குவதற்குள் பொரியை போட்டு கிளறி, கையால் உருண்டை பிடிக்க வேண்டும்.ஒரு பாக்கெட்டுக்கு ஐந்து உருண்டைகள் வைத்து அடைத்து விட்டால், வியாபாரத்துக்கு கிளம்ப வேண்டியது தான். கணவர் அதை எடுத்துச் சென்று சமயபுரத்தில் விற்று வருவார். முன்பெல்லாம் ஊர் ஊராக செல்வார்; தற்போது அதை குறைத்துக் கொண்டார்.ஐந்து பொரி உருண்டை, 20 ரூபாய் என விற்கிறோம். எங்கள் ஊர் சந்தையில் கடை போடும்போது சிறு குழந்தைகள் கூட்டம் முண்டியடிக்கும். இப்போது, சில பெண்கள் கையில் அவர்களின் குழந்தைகளுடன் வந்து, 'அக்கா, சிறு வயதில் உங்களிடம் தான் பொரி உருண்டை வாங்கி சாப்பிட்டேன். என் பிள்ளைகளுக்கும் பொரி உருண்டை கொடுங்கள்' என்று கேட்டு, என்னை நலம் விசாரித்து செல்லும்போது சந்தோஷமாக இருக்கும்.பொரி உருண்டையில் பாகு சேர்க்கும்போது, கவனமாக, தரமாக தயாரிப்பேன். அதுதான் எங்கள் தொழிலையும், எங்களையும் இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றி வருகிறது. உழைப்போருக்கு பிழைப்பு எப்படியும் ஓடிடும். விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்!
பிரபல எழுத்தாளர் அ.வெண்ணிலா - முருகேஷ் தம்பதியின் மகள்களான கவின்மொழி, நிலாபாரதி. ஐ.பி.எஸ்., அதிகாரிக்கான பயிற்சிக்கு தயாராகி வரும் கவின்மொழி:நாங்கள் இருவருமே வந்தவாசி அரசு பள்ளியில் தான் படித்தோம். எங்கள் குடும்ப நண்பரான, டாக்டர் மு.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., தான் எங்களுக்கான, 'இன்ஸ்பிரேஷன்' என சொல்லலாம். இதன்படி, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகி வந்தேன். இடையில் தமிழக அரசின், 'குரூப் 2' தேர்வில் வெற்றி பெற்று, 2024ல் குன்றத்துார் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டேன்.இதற்கான, 'டிரெயினிங்' சமயத்தில், எனக்கு யு.பி.எஸ்.சி., மெயின் தேர்வுகள் இருந்தன. பயிற்சி காலத்தில் படிப்பதற்கான சுதந்திரமும், அவகாசமும் நிறையவே இருந்தது. இத்தேர்வில் எனக்கு இது நான்காவது முயற்சி. இந்த முறையும் வெற்றி பெறவில்லை எனில், இனி முயற்சியே செய்யக்கூடாது என்ற முடிவில் இருந்தேன்.ஆனால், அகில இந்திய அளவில், 546வது, 'ரேங்க்' எடுத்து, ஐ.பி.எஸ்., பணிக்கு தேர்வாகி விட்டேன்.இத்தேர்வின் ஒவ்வொரு லெவலிலும் தேர்ச்சி பெறுவது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிச்சயம் ஓர் அழுத்தத்தை கொடுக்கும். நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவரும் நம்முடன் தேர்வெழுதலாம். அவர்களை பார்க்கும்போது, நம் பதற்றம் அதிகரிக்கும். மூன்று முயற்சியிலும் வெற்றி பெறாதபோது, எனக்கும் அந்த பதற்றம் இருந்தது.ஆனாலும், முந்தைய தோல்விகளில் என் தவறுகள் என்ன, எதையெல்லாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்க எனக்கு நல்ல வழிகாட்டிகள் இருந்ததால், ஒவ்வொரு லெவலாக தேர்ச்சி பெற்றேன்.வனப்பணிக்கான ஐ.எப்.எஸ்., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள நிலாபாரதி:நாங்கள் இருவருமே வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறோம். யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராக, அந்த படிப்பு பெரிய உதவியாக இருந்தது. 'இந்தியன் பாரெஸ்ட் சர்வீசஸ்' தேர்விலும், வேளாண் துறைக்கு பெரிய பங்கிருக்கிறது. அந்த வகையில் விவசாய பின்னணியில் இருந்து, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராவோருக்கு அது இன்னும் சாதகமாகவே இருக்கும்.'யு.பி.எஸ்.சி., தேர்வுகள் என்றாலே அவ்வளவு சுலபத்தில் தேர்வாக முடியாது. நிறைய முயற்சிகள் தேவைப்படும்' என்றெல்லாம் நினைத்து பயப்படுவோர் தான் அதிகம். எங்களுக்குமே ஆரம்பத்தில் அந்த தயக்கம் இருந்தது. அந்த தேர்வுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து படிக்க வேண்டும்.தொடர் முயற்சி மிக முக்கியம். விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.
13-Jul-2025