உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  காளான் வளர்ப்பில் ஓராண்டில் ரூ.8.40 லட்சம் லாபம்!

 காளான் வளர்ப்பில் ஓராண்டில் ரூ.8.40 லட்சம் லாபம்!

காளான் வளர்ப்பில் கணிசமான லாபம் ஈட்டும், தஞ்சாவூர் மாவட்டம், புளியம்பேட்டையைச் சேர்ந்த, 70 வயதான கார்த்திகேயன்: பி.காம்., படித்து, ஸ்டேட் வங்கி பணியில் சேர்ந்து, பல மாநிலங்களில் அதிகாரியாக பணியாற்றி, 2016ல் ஓய்வு பெற்றேன். பின், சொந்த ஊரான புளியம்பேட்டைக்கு திரும்பினேன். என் குடும்பத்துக்கு, 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் நெல் சாகுபடி செய்து வந்தேன். நெல் அறுவடைக்கு பின் கிடைக்கும் வைக்கோலை ஆக்கப்பூர்வமாக வேறு எதற்கு பயன்படுத்தலாம் என்று யோசித்தபோது, காளான் வளர்ப்பு குறித்து தெரியவந்தது. அதுகுறித்த தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி எடுத்தேன். அப்போது பலரும், 'கை நிறைய பென்ஷன் வாங்குறீங்க; நிம்மதியா பொழுதை கழிக்காம, கஷ்டப்பட போறீங்களா' என்று உபதேசம் செய்தனர். ஆயினும், என் முடிவில் உறுதியாக இருந்தேன். கடந்த, 2016ல் காளான் வளர்க்க ஆரம்பித்தேன். முன் அனுபவம் இல்லாததால், இரண்டு ஆண்டுகள் கடும் நஷ்டத்தை சந்தித்தேன். ஆனாலும் மனம் தளராமல், அனுபவம் வாய்ந்தவர்களிடம் இருந்து கற்று, தவறுகளை சரிசெய்து கொண்டேன். கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளுக்கும், 'ரமணா மஷ்ரூம்' என்ற பெயரில், காளான்களை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில் விற்பனை அதிகரித்தது. தொழிலை விரிவுபடுத்தியதில், கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவான லாபம் கிடைத்து வருகிறது. இப்போது, 10,000 சதுர அடியில், பால் காளான் மற்றும் சிப்பி காளான் வளர்ப்புக்கு, தலா நான்கு கொட்டகைகள் அமைத்து உள்ளேன். நவீன இயந்திரங்கள் அமைத்திருப்பதால், விரைவாகவும், தரமா கவும் காளான்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய முடிகிறது. மொத்த விற்பனையாக இருந்தாலும், சில்லரை விற்பனையாக இருந்தாலும், 1 கிலோ, 225 ரூபாய் என விற்பனை செய்கிறேன். மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டுமே சிப்பி காளான்கள் வளர்ப்பேன். இரு மாதங்களில், 1,250 கிலோ சிப்பி காளான்கள் கிடைக்கும். இவற்றை விற்பனை செய்வதன் வாயிலாக, 2 லட்சத்து 81,250 ரூபாய் கிடைக்கும். எல்லா செலவுகளும் போக, 1.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆறு மாதங்களில், 5.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். பால் காளான்களை, ஜனவரி முதல் ஜூன் வரை வளர்ப்பேன். ஆறு மாதங்களில் அதில், 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆக, ஒரு வருஷத்துக்கு, இரண்டு வகை காளான்கள் வளர்ப்பிலும், 8.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு: 94449 02085


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை