உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ஆண்களுக்கு நிகராக பெண் வெல்டர்களை உருவாக்க வேண்டும்!

ஆண்களுக்கு நிகராக பெண் வெல்டர்களை உருவாக்க வேண்டும்!

'வெல்டிங்' தொழிலில் சேர்ந்து, தேசிய, சர்வதேச அளவில் விருதுகள் வாங்கியுள்ள கண்ணகி ராஜேந்திரன்: அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் தான் என் சொந்த ஊர். பெற்றோர் விவசாயம் பார்க்கின்றனர். நான் திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமா படித்தேன். 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் தேர்வாகி, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறில் உள்ள, கனரக வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன். இ.சி.ஐ., படித்திருந்ததால், 'எலக்ட்ரிக்கல் சார்ந்த பிரிவில் தான் வேலை செய்ய போகிறோம்' என்று நினைத்தேன். ஆனால், 'உற்பத்தி பிரிவில் வெல்டிங் வேலை பார்க்க வேண்டும்' என்று நிறுவனத்தில் கூறியதும், சிறிது அதிர்ச்சியாக இருந்தது. காரணம், வெல்டிங் வேலை செய்யும்போது பறக்கும் தீப்பொறி, புகை இதெல்லாம் என்னை பயமுறுத்தியது. வேறு வழியின்றி தான் வெல்டிங் கற்றுக் கொண்டேன். அ ப்போ து, என்னுடன் வேலை பார்த்த ஆண்கள் சிலர், 'பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நாள் தாங்க மாட்டாங்க; சீக்கிரம் போயிடுவாங்க' என்று, 'கமென்ட்' அடித்தனர். இதனால், 'நாம் அந்த வேலையை செய்தே ஆக வேண்டும்' என்று மனதிற்குள் நெருப்பு எரிய துவங்கியது. ஆரம்பத்தில் என்னை பயமுறுத்திய தீப்பொறி, வெல்டிங் சத்தம் எல்லாம் சிறிது சிறிதாக பிடிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு விஷயத்தையும் கவனமுடன் கற்று, 2023ல் இந்திய வெல்டிங் நிறுவனம் நடத்திய, சிறந்த பெண் வெல்டருக்கான போட்டியில் பங்கேற்று, மாநில அளவில் முதல் பரிசு வாங்கினேன். தொடர்ந்து, தேசிய அளவில் நடந்த போட்டியிலும் பங்கேற்றேன். 'கார்பன் டை ஆக்சைடு' வாயுவை பயன்படுத்தி, வெல்டிங் வேலை செய்யும் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். போட்டியில் ஜெயித்த பின், ஆரம்பத்தில் என்னை விமர்சனம் செய்த அதே ந பர்கள், தற்போது என்னை மரியாதையுடன் நடத்துகின்றனர். தற்போது எங்கள் நிறுவனத்தில், 20 சதவீதம் பெண்கள் வெல்டிங் பணிக்கு வந்து விட்டனர். நானும், வெல்டிங் ஸ்கூல் பிரிவில் மாஸ்டராக இருந்து, புதிதாக வருவோருக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன். வெல்டிங் துறை என்பது கடல் போன்றது! அடுத்த கட்டமாக, 'சர்டிபைடு வெல்டிங் இன்ஸ்பெக்டர்' சான்றிதழ் வாங்குவதற்காக தயாராகி வருகிறேன். அதற்காக, என் சீனியர்களிடம் செயல்முறையை கற்று வருகிறேன். பல பெண்கள் வெல்டராக விரும்புவது இல்லை. என்னை பொறுத்தவரை வெல்டராக இருப்பதே மிகப்பெரிய, 'இன்ஸ்பிரேஷன்' தான். என் நிறுவனத்தில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில், பெண் வெல்டர்களையும் உருவாக்க வேண்டும் என்பது தான் என் கனவு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Shankar Ganesh
ஜூலை 24, 2025 19:59

வாழ்த்துக்கள். இசிஇ படிச்ச உங்கள ஏழ்மை/ வறுமை/ இயலாமையை பயன்படுத்தி சுயநலகார கம்பெனி வெல்டர் ஆக்கி கஷ்ட படுத்தியும் நீங்கள் வென்று விட்டீர்கள். சி.எஸ்.டபிள்யூ.ஐ.பி படித்து மேலும் ஐ.டபிள்யூ.இ படிக்க வாழ்த்துக்கள்.


Padmasridharan
ஜூலை 24, 2025 01:58

வாழ்த்துகள் பெண்மணி. நிறைய பெண்கள் ஆண்களுக்கு நிகரென்று சொல்லிக்கொள்வார்களே தவிர ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளும் செய்ய இயலாது. எ. கா. கடலில் படகோட்டி மீன்பிடிப்பது, மூட்டைகள் தூக்குவது.. ,


சமீபத்திய செய்தி