உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வீடுதான் உலகம் என்று முடங்க கூடாது!: காயப்படுத்துவோரை கண்டுகொள்ளாமல் கடந்து போகணும்!

வீடுதான் உலகம் என்று முடங்க கூடாது!: காயப்படுத்துவோரை கண்டுகொள்ளாமல் கடந்து போகணும்!

திருச்சி, ஏர்போர்ட் பகுதியில், 'கிரீன் இண்டஸ்ட்ரீஸ், ழா மரச்செக்கு' என்ற பெயர்களில், பாக்கு மட்டை தட்டு, செக்கு எண்ணெய் தயாரிப்பு தொழில் நடத்தி வரும், லயான் நிஷா:என் பெற்றோர் வீடும் திருச்சி தான். பெற்றோர் இருவருமே மின்வாரிய ஊழியர்கள் என்பதால், படிப்பை முடித்துவிட்டு நானும் அரசு வேலைக்கு செல்ல நினைத்தேன். இ.சி.இ., டிப்ளமா கோர்ஸ் முடித்த போது, 2006ல் எனக்கு திருமணமானது. அதுவரை வீடு, கல்லுாரி தவிர எதுவும் தெரியாமல் இருந்தேன். கணவர் தான் இரு சக்கர வாகனம், கார் ஓட்ட கற்றுக் கொடுத்தார்.பி.டெக்., அக்குபஞ்சர், நியூட்ரிஷியன் கோர்ஸ்கள் என படிக்க வைத்தார். வங்கி உள்ளிட்ட எந்த இடத்துக்கு சென்றாலும் என்னை அழைத்துச் சென்று சொல்லிக் கொடுத்தார். பாக்கு மட்டை தட்டு தயாரிக்க, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரிடம் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். பின், தொழிற்கடன், என் அக்காவின் பண உதவி, என் நகைகள் என பணம் ஏற்பாடு செய்து, 'கிரீன் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில், வீட்டிலேயே பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தொழிலை, 2009ல் துவங்கினேன்.அருகில் உள்ள கோவில்கள், கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் என, பல கடைகளுக்கு சாம்பிள்கள் கொடுத்தோம்; தரத்தால் ஆர்டர்கள் கிடைத்தன.ஒருவர், வேறு வேறு சைஸ்களில் 15,000 தட்டுகள் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தார். தயார் செய்து முடித்து, அவருக்கு போன் செய்தபோது, 'இப்போதைக்கு வேண்டாம்' என்று, குண்டை துாக்கி போட்டார்; கலங்கி விட்டேன். இரண்டே நாட்களில், இருவர் வந்து அனைத்து தட்டுகளையும் வாங்கி சென்றபோது தான், உயிரே வந்தது. அப்போது தான் தொழிலில் எந்தளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது.திருச்சியில் மட்டுமல்லாது சென்னை, தஞ்சை மாவட்டங்களிலும் 500 தொடர் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். 2016ம் ஆண்டு, 5 லட்சம் ரூபாய் முதலீட்டில், 'ழா மரச்செக்கு' என்ற பெயரில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆட்டி, விற்பனை செய்ய ஆரம்பித்தோம்; பிசினஸ் பிக்கப்பானது.எங்களிடம் ஐந்து ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறோம். வீடுதான் உலகம் என்று, பெண்கள் இனியும் முடங்க கூடாது. வெளியே வந்தால், எத்தனையோ தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் தொழில் முனைவோர் ஆவது, நம் கையில் தான் உள்ளது.

காயப்படுத்துவோரை கண்டுகொள்ளாமல் கடந்து போகணும்!

பெண்கள், தங்கள் வாழ்வில் சுயமாக உழைத்து முன்னேற, பல தொழில்களையும், கலைகளையும் கற்றுத்தரும், திருச்சியைச் சேர்ந்த பிரியா கோவிந்தராஜ்:சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே எனக்குள் இருந்தது. நம் எல்லா தேவைகளுக்கும் கணவரை எதிர்பார்த்து இருக்கிறோமே என்று தோன்றியது. ஒரு பயிற்சி அகாடமி ஆரம்பிக்கலாம் என்று ஊக்கம் இருந்தாலும், கையில் 1 பைசா கூட இல்லை. ஆனால் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மட்டும் மலையளவு இருந்தது.அதனால், எங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே, அகாடமி ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து, 'சாமுத்ரிகா அகாடமி' என்று பெயர் வைத்தேன். நேரம், காலம் பார்க்காமல் வெறித்தனமாக உழைக்க ஆரம்பித்தேன். என் வளர்ச்சிக்கு கணவர் கொடுத்த ஊக்கமும் ஒரு காரணம்.டெய்லரிங், பேஷன் டிசைனிங், ஆரி ஒர்க், பியூட்டிஷியன், சலுான், பரதம், ஜும்பா நடனம், அபாகஸ், யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், கர்நாட்டிக் மியூசிக், வயலின், கீபோர்டு, கிடார், வாய்ப்பாட்டு உட்பட 25க்கும் அதிகமான தொழில்கள் மற்றும் கலைகளை கற்றுக் கொடுக்கிறேன்.அகாடமி துவங்கிய ஓராண்டில், திருச்சி முழுக்க எட்டு கிளைகளை திறந்து விட்டேன். 'பிரான்சைஸ்' கொடுக்கும் அளவிற்கு முன்னேறினேன்.நாங்கள் சொல்லித் தரும் தற்காப்பு கலைகளில் கராத்தே, குங்பூ, சிலம்பம் தவிர, 25 கலைகளில் நானும் மாஸ்டர் பட்டம் வாங்கி இருக்கிறேன்.இதுவரை, 12,000க்கும் அதிகமானோருக்கு இக்கலையை சொல்லி கொடுத்திருக்கிறோம். அகாடமியின், 15வது ஆண்டை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம்.பெண்கள், தங்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்ள, 'பெட்டாக்' என்ற நிகழ்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். திருச்சி, சேலம் உட்பட பல ஊர்களில் கல்லுாரி, வணிக நிறுவனங்களில் இருக்கும் மாணவியர் மற்றும் பெண்கள் 9,500 பேருக்கு இதுவரை சுய பாதுகாப்பு பயிற்சி கொடுத்துஉள்ளேன்.பெண்கள் அவசர காலங்களில், தங்களை தற்காத்துக் கொள்ளும் முறைகளை கட்டணமின்றி சொல்லி கொடுக்கிறேன்; 100க்கும் மேற்பட்ட இடங்களில், 'மோட்டிவேஷனல் ஸ்பீச்' கொடுத்து இருக்கிறேன். இதுபோன்ற செயல்களுக்காக, இதுவரை 150க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளேன்.நம்மை காயப்படுத்துவதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அதை கண்டுகொள்ளாமல் கடந்து போனால் தான், நம் பயணத்தில் ஜெயிக்க முடியும். தொடர்புக்கு: 79047 33124, 93610 35207


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !