பாம்புகளை மீட்கும் பணியை துணிச்சலாக செய்து வரும், கேரளாவை சேர்ந்த ரோஷ்னி: கேரள வனத்துறையில், 'பீட் பாரஸ்ட் ஆபீசர்' என்ற பொறுப்பு வகிக்கும் நான், 2017ம் ஆண்டு கேரள வனத்துறையில் சேர்ந்தேன். 2019ம் ஆண்டு, விஞ்ஞான முறையில் பாம்புகளைப் பிடிக்கும் பயிற்சியை கேரள வனத்துறை தம்முடைய பணியாளர்களுக்கு அளித்தது.அதில் பங்கேற்ற, 539 பேரில், 506 பேர் ஆண்கள்; 33 பேர் பெண்கள். இறுதியாக, ஆண்களில், 295 பேரும், பெண்களில் 23 பேரும் தேர்வானோம். அந்த 23 பெண்களில் நானும் ஒருவள். அதில் பங்கெடுத்து, சிறப்பான முறையில் தேறியதால், பாம்புகளை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் உரிமத்தையும் எனக்கு கேரள வனத்துறை வழங்கியது.முதன் முதலில் பாம்பைத் தொட்டபோது, எனக்கு பயமே ஏற்படவில்லை. மாறாக, மகிழ்ச்சி தான் மேலோங்கியது. விஷமுள்ள நாகப்பாம்பு, விரியன் வகைப் பாம்புகள், மலைப்பாம்புகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் மீட்டு, அடர் வனப்பகுதியில் விட்டிருக்கிறேன்.வனத்துறையின் ஒரு பிரிவான, 'ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்' என்ற அமைப்புக்கு, பாம்புகளை பிடிக்க சொல்லி கோரிக்கை வரும்போது, மின்னல் வேகத்தில் அங்கே சென்று, பாம்பு மீட்பு பணியில் ஈடுபடுவது என் வழக்கம். கிட்டத்தட்ட இந்த அமைப்புக்கு நாளொன்றுக்கு, 30 - 40 தொலைபேசி அழைப்புகள் வரும்.நுனியில் வளைந்த இரும்புக் கம்பியை கொண்டே பாம்பை எளிதில் பிடித்துவிட முடியும். அப்படிப் பிடித்த பாம்பை, பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு பிரத்யேகமான பை ஒன்றையும் வைத்திருக்கிறேன். அந்தப் பையின் வாய்ப் பகுதியில் பி.வி.சி., குழாய் ஒன்றைப் பொருத்தி, சுவர் ஓரமாக வைத்து விடுவேன். அதனருகில் பாம்பை லாவகமாகக் கொண்டு செல்லும்போது, அந்த பைப் வழியாகப் புகுந்து, இணைக்கப்பட்டிருக்கும் பைக்குள் பாம்பு சென்றுவிடும்.அதன்பின் ஜாக்கிரதையாக அந்த பி.வி.சி., பைப்பை நீக்கிவிட்டு, பையின் வாயை சுருக்கிட்டு விடுவேன். இப்படி அகப்பட்ட பாம்பை, அதிக நேரம் பைக்குள் வைத்திருக்கக் கூடாது. எனவே, ஆளில்லாத அடர் வனப்பகுதிக்கு விரைவாக சென்று, கவனமாக பையை அவிழ்த்து, வெளியில் விட்டுவிடுவேன். என்னுடைய அரும் பணிக்கு, கணவர் சஜித்குமார், மிகவும் ஊக்கம் கொடுக்கிறார்.'ஸ்னேக் அவர்னஸ் ரெஸ்க்யூ அண்ட் புரொடெக்சன் அப்ளிகேஷன்' எனும், 'சார்பா' செயலியை மக்கள், தங்கள் மொபைல் போனில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இதில், பாம்பு பிடிப்பவர்களின் போன் எண்கள், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். பாம்பை கண்டால், இவர்களை உடனே தொடர்பு கொள்ள முடியும். கல்வி மட்டுமே மனித நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும்!
சமீபத்தில், சென்னை யில் நடந்து முடிந்த புத்தகக் காட்சி அரங்கில், தொகுப்பாளினியாக கவனத்தை ஈர்த்த திருநங்கை ஜெஸ்சி:எனக்கு
சொந்த ஊர், திருத்தணி அருகே இருக்கும் ராமகிருஷ்ணராஜு பேட்டை. நான்
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே இந்தக் கிராமத்தில் தான். பள்ளிப்
படிப்பின்போது எனக்கு மனரீதியான மாற்றம் வந்தது. ஆனால், அதை யாரிடம்,
எப்படிச் சொல்வது, என்ன செய்வது என்று புரியாமலேயே கடந்தேன்.பல
விஷயங்களுக்கு பயந்து, மாணவனைப் போலவே பேன்ட், சட்டை அணிந்தேன், தலை
சீவினேன், செருப்பும் அணிந்தேன். ஆனால், என் நடை, பாவனையில் ஒரு பெண்ணின்
நளினம் தெரிந்தது.என்னை கூர்ந்து கவனித்த என் அம்மா, 'என்னடா நடை
இது... பொம்பள பிள்ளையாட்டம்? ஆம்பளையா லட்சணமா நடந்துக்கோ...' என்று
கடிந்து கொண்டார். இதனால், கம்பீரமாக நடந்து, நடித்துக் கொண்டிருந்தேன்.சுவாமி
விவேகானந்தரின், 'கல்வி என்பது மனித நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக்
கூடியது' என்ற தன்னம்பிக்கை வாசகமும் என்னைத் துாங்க விடாமல் செய்தது. எனவே, திருநங்கைக்கான உணர்வுகளை மறந்து, படிப்பில் கவனம் செலுத்த துவங்கினேன்.எனக்கு
பிடிபடாத ஆங்கிலத்தை வசப்படுத்த, திருத்தணி அரசுக் கல்லுாரியில் பி.ஏ.,
ஆங்கிலம் படித்தேன். எம்.ஏ., ஆங்கிலத்தை, சென்னை வியாசர்பாடி அம்பேத்கர்
கலைக் கல்லுாரியில் முடித்தேன்.ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி.,
முடிக்க சென்னை லயோலாவில் விண்ணப்பித்தேன். அங்கு, எனக்கு நல்வழி
காட்டினார், ஆங்கிலத் துறை தலைவரும், இணைப் பேராசிரியையுமான டாக்டர்
பி.மேரி வித்யா பொற்செல்வி. விளைவு, பல தங்கப் பதக்கங்களை
வென்றேன். வித்யா மேடமை என் கல்வி கடவுளாக நினைத்ததால், எனக்குள் இருந்த
திருநங்கை மாற்றங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.அதன்பின், அறுவை
சிகிச்சைகள் செய்து, முழு திருநங்கையாக மாறினேன். நான் படித்த அம்பேத்கர்
கலைக் கல்லுாரியில் இப்போது கவுரவ விரிவுரையாளராக இருக்கிறேன்.ஓர்
எளிய குடும்பத்தில் பிறந்து, என்னுடைய கனவுகளை மறந்து, இவ்வளவு துாரம்
பயணித்திருக்கிறேன் என்றால், அது என்னுடைய தன்னம்பிக்கையால் மட்டுமே.பேச்சு
என்பது ஒரு கலை. என் குரல், சென்னை வானொலியில் பல நிகழ்ச்சிகளில்
ஒலித்திருக்கிறது. அம்மாவும், அப்பாவும் என்னை புரிந்து கொண்டனர்.என்
அக்கா என்னை அவ்வப்போது சந்திப்பார். என் அண்ணன் மட்டும் என்னிடம் பேசி
விட்டால், என் நம்பிக்கைக்கு உரம் போட்ட மாதிரி இருக்கும்.கல்வி மட்டுமே மனித நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. இதை தன்னம்பிக்கையோடு கடைப்பிடித்தால், உங்களுக்கான இருக்கை நிச்சயம் கிடைக்கும்.