உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / கோலி சோடாவுக்கு காதல் பெயர் வைத்தது ஏன்?

கோலி சோடாவுக்கு காதல் பெயர் வைத்தது ஏன்?

கணவர் குடும்பத்தினர் நடத்தி, மூடப்பட்ட கோலி சோடா தொழிலில் இறங்கி, வெற்றிக்கொடி நாட்டிய வேலுாரைச் சேர்ந்த வனிதா:என் கணவரின் தாத்தா ரங்கநாதன், 70 ஆண்டுகளுக்கு முன், 'கணபதி' என்ற பெயரில், வேலுாரில் கோலி சோடா கம்பெனியை துவக்கினார். அவருக்கு அடுத்து மாமனார், அதன்பின் என் கணவர் என, மூன்று தலைமுறைகளாக விற்பனை அமோகமாக நடந்து வந்தது. ஆனாலும், பன்னாட்டு குளிர்பானங்களின் வருகையால், 15 ஆண்டுகளுக்கு முன் கம்பெனியை மூடி விட்டனர்.கொரோனா காலகட்டம் எங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது. நிதி நெருக்கடி, குடும்பத்தில் பொறுப்புகள் கூடியதால், 'கணவர் மட்டுமே உழைத்தால் போதாது; நாமும் உதவி செய்ய வேண்டும்' என்று முடிவு செய்தேன். என்னை போன்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு தரக்கூடிய வகையில் பிசினஸ் இருக்க வேண்டும் என்று யோசித்தபோது, குடும்ப தொழிலான கோலி சோடா பிசினஸ் நினைவுக்கு வந்தது. கடந்த 2022ல், 'தன்வந்திரி பாட்டில்லர்ஸ்' என்ற பெயரில் கம்பெனியை துவக்கினேன். எங்கள் கோலி சோடாவின் பெயர், மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக, 'காதல்' என்ற பிராண்டில் விற்பனை செய்கிறோம்.என் தொழில் முயற்சிக்கும், வளர்ச்சிக்கும் துணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தியவர் என் கணவர் தான். ஐந்து பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன். 12 சுவைகளில் சோடா தயார் செய்து, தினமும் 2,500 பாட்டில்களை கடைகள், ஹோட்டல்களுக்கு அனுப்புகிறோம்; மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.விற்பனைக்கு பின், கடைகளில் இருந்து திரும்பி வரும் காலி பாட்டில்களில் துாசி, துகள்கள் இருக்கும். எனவே, இயந்திர முறையில் மூன்று கட்டமாக பாட்டிலை சுத்தப்படுத்துகிறோம். இயந்திரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் நவீன பிரஷ் வாயிலாக அழுக்குகளை நீக்கி, சுத்திகரிக்கப்பட்ட நீரை கொண்டு பாட்டிலை, 'பளிச்'சென சுத்தப்படுத்துகிறோம்.வியாபாரிகளுக்கு ஒரு கோலி சோடா, 10 ரூபாய் என தருகிறோம். விற்பனை விலை 20 ரூபாய் என்பதால், வியாபாரிகளுக்கும் நிகர லாபம் கிடைக்கிறது. உற்பத்தி செலவு போக, பாட்டிலுக்கு 4 ரூபாய் எங்களுக்கு லாபமாக நிற்கும்.திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் நாங்களே, 'பல்க்' ஆர்டர் எடுத்தும் சப்ளை செய்கிறோம். வேலுாரையும் தாண்டி, மாவட்டம் முழுதும் கோலி சோடா விற்பனையை விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்; அந்த முயற்சியிலும் வெற்றி காண்பேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை