வாசகர்கள் கருத்துகள் ( 1 )
freeeee ₹99999999999999999999999999⁹999999⁹99999999999
காரைக்குடி ஈ.வெ.ரா., சிலை அருகில் உள்ள, 'அக்கா மீன் சாப்பாடு' கடையின் உரிமையாளர் தீபா: என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், அஞ்சுக்கோட்டை கிராமம். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். 2007ல் திருமணமாகி, கணவர் ஊரான காரைக்குடிக்கு வந்தேன். 'நமக்கு தான், 'டெய்லரிங்' தெரியுமே... இதை ஏன் ஒரு தொழிலாக ஆரம்பிக்கக் கூடாது' என்று ஒரு நாள் தோன்றியது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் டெய்லரிங் பயிற்சியில் சேர்ந்து, சிறந்த மாணவி என்ற பெயரும் வாங்கினேன். பின் சொந்தமாக 'டெய்லரிங் பயிலகம்' ஆரம்பித்து வகுப்புகள் எடுத்து வந்தேன். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்தது. நான் நன்கு சமைப்பேன். ஊரடங்கு நேரத்தில், குடும்பத்தினருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்தேன். கடல் உணவுகள் மீது மக்களுக்கு இருக்கும் பிரியம் எனக்கு நன்கு தெரியும். அதனால், கிராமத்து சுவையுடன், செட்டிநாடு ஸ்டைலையும் இணைத்து, ஒரு உணவகம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. 'டெய்லரிங் வகுப்புகள் நல்லா தானே போயிட்டிருக்கு... அதை விட்டுவிட்டு சமையல் வேலையெல்லாம் தேவையா' என்று பலரும் கேட்டனர். ஆனால், என் முடிவில் உறுதியாக இருந்து, 2023ல் காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில், 'அக்கா மீன் சாப்பாடு' என்ற கடையை ஆரம்பித்தேன். சமூக வலைதள விளம்பரங்கள் வாயிலாக, இன்று எங்கள் கடை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், ஏன் வெளிநாடுகளில் இருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆரம்பத்தில் கேமரா முன் நிற்கவே பயந்தேன். என் தம்பி தான் ஊக்கப்படுத்தி, 'அக்கா நீங்க கேமரா முன் வந்து பேசுங்க... அப்போது தான் கடையை எல்லாரும் தெரிந்து கொள்வர்' என்றான். இன்று ஈ.வெ.ரா., சிலை பக்கத்தில், பிரமாண்டமாக இரண்டாவது கிளையை ஆரம்பித்து விட்டோம். எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள தொண்டி கடற்கரையில், தினமும் பிடிக்கப்படும் மீன்களை நேரடியாக வரவழைத்து சமைக்கிறோம். அது மட்டுமல்லாமல், அசைவத்தில் உள்ள அத்தனை வகைகளையும் இங்கு தருகிறோம். 'பொம்பள புள்ள தனியாக கடை நடத்தப் போறாளா' என்று, ஆரம்பத்தில் பலரும் சந்தேகப்பட்டனர். எனக்கு என் மீதும், என் சமையல் கைமணத்திலும் நம்பிக்கை இருந்தது. கிராமத்து பெண்கள், ஆதரவில்லாதவர்கள் என்று என் கடையில் வேலை பார்க்கும், 25 பேருமே பெண்கள் தான்; அவர்கள் தான் எனக்கு பெரிய பலமே. எங்களை போல் கிராமப்புற பின்னணியில் இருந்து, கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் பெண்களுக்கு, அரசு இன்னும் கூடுதலான மானியங்களுடன் கடனுதவி வழங்க வேண்டும். கடனுக்காக அலைக்கழிக்காமல், அரசே நேரடியாக உதவி செய்ய வேண்டும்.
freeeee ₹99999999999999999999999999⁹999999⁹99999999999