உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / டார்கெட் நிர்ணயித்து டார்ச்சர் பண்ணும் அதிகாரி!

டார்கெட் நிர்ணயித்து டார்ச்சர் பண்ணும் அதிகாரி!

''பட்டாக்கள் வழங்காம இழுத்தடிக்கிறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''யாருக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''தமிழகம் முழுக்க அடுத்த அஞ்சு மாசத்துல, 5 லட்சம் பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுத்திருக்காங்க... மதுரை, சூர்யா நகர்ல எந்த மானியமும் இல்லாம, தமிழகத்துலயே அதிகமான வழிகாட்டி மதிப்பீட்டு தொகையில், 86 பத்திரிகையாளர்களுக்கு, 2019ல் வீட்டுமனைகள் ஒதுக்குனாங்க...''இதுல, 46 பேர் தலா 5.25 லட்சம் ரூபாய் வீதம் பணம் கட்டி, 2021ல் தற்காலிக பட்டா வாங்கினாங்க... ஆனா, இலவச பட்டாக்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை காரணம் காட்டி, இதுக்கு முன்னாடி இருந்த மாவட்ட உயர் அதிகாரி, 38 பேரின் பட்டாக்களை அதிரடியா ரத்து பண்ணிட்டு, மறுநாளே டிரான்ஸ்பர்லயும் போயிட்டாருங்க...''இதனால, கடன் வாங்கி பணம் கட்டியவங்க, நாலு வருஷமா மனைகள்ல வீடு கட்ட முடியாம தவிக்கிறாங்க... ''இது சம்பந்தமா, முதல்வர், துணை முதல்வர்னு பலரிடம் மனுக்கள் குடுத்தும் தீர்வு கிடைக்கலைங்க... '5 லட்சம் இலவச பட்டாக்கள் வழங்குற அரசு, பணம் கட்டியவங்களுக்கு பட்டாக்களை குடுத்தா என்ன'ன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சோலார் கட்டமைப்பு இல்லாம திட்டம் நொண்டியடிக்கறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் மதிப்பில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் நடக்கறதோல்லியோ... பவானி காளிங்கராயன் அணையில் இருந்து நீரை, 'பம்பிங்' செய்து, குளம், குட்டைகள்ல நிரப்பறது தான் இந்த திட்டம் ஓய்...''அ.தி.மு.க., ஆட்சியில் திட்டத்தை துவங்கறச்சே, 'நீரேற்ற நிலையத்தில் மோட்டார்களை இயக்க, 132 கோடி ரூபாய் மதிப்பில், 33 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சோலார் மின்னாற்றல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்'னு திட்ட அறிக்கையில குறிப்பிட்டிருந்தா...''ஆனா, திட்டமே முடிவுக்கு வந்தும், சோலார் கட்டமைப்பு மட்டும் ஏற்படுத்தல... அதுக்கு ஒதுக்கிய நிதியையும், திட்டத்தின் கட்டமைப்பு பணிக்கு பயன்படுத்திட்டாளாம் ஓய்...''இப்ப, சில மாதங்களா மின்சாரம் மூலமா தான் பம்பிங் பணிகள் நடக்கறது... 'இதுக்கு நிறைய கட்டணம் வர்றதால, பம்பிங் பணிகள் சரியா நடக்கல'ன்னு விவசாயிகள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''டார்கெட் நிர்ணயிச்சு டார்ச்சர் பண்ணுதாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''சென்னையை ஒட்டியிருக்கிற போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தர், தனக்கு கீழ வேலை பார்க்கிற போலீசாரிடம், 'எனக்கு தினமும் 35,000ல இருந்து 50,000 ரூபாய் வரை வந்தாகணும்'னு இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்காரு வே...''இதனால, போக்குவரத்து போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகளை போட்டு, வண்டிகளை மறிச்சு, வசூல் வேட்டையில ஈடுபடுதாவ...''இவங்களது கறார் வசூலால, பொதுமக்களுடன் அடிக்கடி தகராறும் நடக்கு... 'அதிகாரி டார்கெட்டால, நாங்க தான் மக்களிடம் ஏச்சு, பேச்சு வாங்குதோம்'னு போலீசார் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''சந்திரமவுலி இப்படி உட்காரும்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanns
மார் 07, 2025 10:29

Simply Encounter All Such Corrupt -People


Anantharaman Srinivasan
மார் 07, 2025 01:13

சந்திரமவுலி பெயரை பார்த்தால் forward மாதிரி தெரியுது. அவரா இப்படி..?? ஒருவேளை மேலிடத்து குடைச்சலோ..?


சமீபத்திய செய்தி