உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / லஞ்சம் பெற்ற வழக்கில் தீர்ப்பு வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் தீர்ப்பு வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை

செங்கல்பட்டு:விவசாய நிலத்திற்கு சிட்டா, அடங்கல் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிர்வாக அலுவலருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.மதுராந்தகம் அடுத்த ஓட்டக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசிவன் என்பவர், கிளியாநகர் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தியிடம், நிலம் வாங்க உள்ள இடத்திற்கு விற்பனை ஒப்பந்தம் செய்தார். இந்த நிலத்திற்கு, சிட்டா, அடங்கல் வாங்க, 2008ம் ஆண்டு, கிளியாநகர் கிராம நிர்வாக அலுவலரை அணுகினார்.அப்போது, சிட்டா, அடங்கல் வழங்க, கிராம நிர்வாக அலுவலர் கண்ணப்பன், 67, என்பவர், 2,600 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்தியசிவன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய 2,600 ரூபாயை, சத்தியசிவனிடம் கொடுத்து அனுப்பினர்.அவர், கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கண்ணப்பனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அதன்பின், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வழக்கை மாற்றினர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்தது.நேற்று நடந்த வழக்கு விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கண்ணப்பனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை