''ஆபீசை உள்பக்கமா பூட்டிண்டு வேலை பார்க்கறாங்க ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''யாருங்க அந்த அதிகாரி...'' என கேட்டார், அந்தோணிசாமி.''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவில் வளாகத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை ஆபீஸ் இருக்கு... இங்க ஒரு பெண் அதிகாரி, எப்பவும் தன் அறை கதவை உள்பக்கமா தாழ் போட்டுண்டு தான் வேலை பார்க்கறாங்க ஓய்...''செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, பெண் அதிகாரி இஷ்டத்துக்கு தடையில்லா சான்று வழங்கி, பலருக்கு குடுத்திருக்கறதா ஏற்கனவே புகார்கள் இருக்கு... இந்த சூழல்ல, ஆபீசை பூட்டிக்கறதும் பிரச்னையாகிடுத்து ஓய்...''சமீபத்துல, இந்த ஆபீசை பொதுமக்கள் முற்றுகையிட்டு, அதிகாரியை வெளியே வரும்படி குரல் குடுத்தும், அவங்க அசைஞ்சு குடுக்கல... இவங்களுக்கு, 'அன்பான' உயர் அதிகாரி தயவு இருக்கறதால, யாரையும் மதிக்காம செயல்படறதாகவும் துறைக்குள்ள சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''கலைப்ரியா, சாயந்தரம் நானே போன் பண்ணுதேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''ஒரே மாசத்துல பட்டா தந்துடுதாவ வே...'' என்றார்.''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''சென்னை செங்குன்றம், புள்ளிலைன் சுற்றுவட்டாரங்கள்ல, சிலரது இடத்தின் பரப்பளவு குறைஞ்சிருக்கு, மற்றவர் பெயர்ல பட்டா பதிவாகி இருப்பது போன்ற குளறுபடிகள் வருவாய் துறையினர் மூலமா நடந்திருக்கு...''இதை திருத்த, அவங்க பொன்னேரி தாலுகா ஆபீசுக்கு நாலு வருஷமா நடையா நடக்காவ... வருஷா வருஷம் நடக்கிற ஜமாபந்திகள்ல மனுக்கள் குடுத்தாலும், தீர்வு தான் கிடைக்க மாட்டேங்கு வே...''தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் சிலர், 'ஜமாபந்தியெல்லாம் வெறும் கண்துடைப்பு... சத்தமில்லாம, 50,000 ரூபாயை வெட்டுனா, ஒரு மாசத்துல உங்க வேலை முடியும்'னு பேரம் பேசுதாவ... இதனால, பொதுமக்கள் வெறுத்து போயிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''முதல்வர் தொகுதியிலயே வெளிப்படை தன்மை இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''தமிழக சட்டசபை கூட்டம் மற்றும் மாநகராட்சி மன்ற கூட்டங்கள்ல செய்தி சேகரிக்க, பத்திரிகையாளர்களை அனுமதிக்கிறாங்க... பார்வையாளர்களா பொதுமக்களையும் அனுமதிக்கிறாங்க...''ஆனா, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரை உள்ளடக்கிய திரு.வி.க., நகர் மாநகராட்சி மண்டல கூட்டத்துக்கு மட்டும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க மாட்டேங்கிறாங்க... மேயர் பிரியாவின் வார்டும் இந்த மண்டலத்து தான் வருதுங்க... ''ஏன்னா, யாருக்கு டெண்டர் தரணும்... என்ன வேலை எடுக்கணும்... எதை மேலிடத்துல அனுமதி வாங்கி செய்யணும் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் இந்த கூட்டத்துல தான் விவாதிக்கிறாங்க... இதனால தான், கூட்டத்தை ரகசியமா நடத்துறாங்க...''அதே நேரம், 'எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் பேசுறது எல்லாம் வெளியில தெரியுது... ஆனா, நம்ம வார்டு கவுன்சிலர்கள் பேசுறது மட்டும் நமக்கு தெரிய மாட்டேங்குதே'ன்னு இந்த மண்டல மக்கள் புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.