உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மிளகாய் அரைத்து பூசி வழிபட்ட அ.தி.மு.க., மாஜிக்கள்!

மிளகாய் அரைத்து பூசி வழிபட்ட அ.தி.மு.க., மாஜிக்கள்!

மெது வடையை தேங்காய் சட்னியில் புரட்டியபடியே, ''பேனர்களை துாக்கிட்டார் ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''கள்ளக்குறிச்சி தி.மு.க., - எம்.பி., மலையரசனுக்கு சமீபத்துல பிறந்தநாள் வந்துது... அவரது சொந்த ஊரான தியாகதுருகம் நகர வீதிகள்ல,ஆதரவாளர்கள் வாழ்த்து பேனர்களை வச்சிருந்தா ஓய்...''அதுல, எம்.பி., படத்தை பெரிதாகவும், மாவட்ட செயலரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் படத்தை சின்னதாகவும் போட்டிருந்தா... அந்த வழியா போன, 'மாவட்டம்' இதை பார்த்து, 'டென்ஷன்' ஆகிட்டார் ஓய்...''அடுத்த அரை மணி நேரத்துல, அந்த பேனர்கள் எல்லாம் மாயமாயிடுத்து... 'மாவட்டம் தான், இதுக்கு காரணம்'னு எம்.பி., ஆதரவாளர்கள் புலம்பறா... மாவட்டம்தரப்போ, 'பேனர்கள் காத்துல விழுந்து யாருக்காவது ஏதாவது ஆகிடுத்துன்னா, ஆட்சிக்குன்னா கெட்ட பெயர்... அதான் எடுக்க சொன்னேன்'னு சமாளிக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சொத்துக்களை வாங்கி குவிக்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''துாத்துக்குடி தாலுகா ஆபீஸ்ல அதிகாரியா இருக்கிறவர், விதிகளை மீறி ஒரு வருஷத்தையும் தாண்டியும் அந்த பதவியில நீடிக்கிறாருங்க... அவருக்கு உள்ளூர் அமைச்சரின் ஆசியும் இருக்கிறதால, நாலா திசைகள்லயும் சொத்துக் களை வாங்கி குவிச்சிட்டு இருக்காருங்க...''சங்கரப்பேரி பகுதியில், தனியார் பள்ளி கட்டுறதுக்கு ஒருத்தர் இடம் வாங்கி போட்டிருந்தாருங்க... ஆனா, பக்கத்துலயே இன்னொருத்தர் பள்ளிக்கூடம் கட்டிட்டதால, தன் இடத்தை வீட்டுமனையா மாத்த தாலுகா ஆபீஸ்ல விண்ணப்பிச்சிருந்தாருங்க...''பல மாசமா கிடப்புல இருந்த அவரது விண்ணப்பம், சமீபத்துல அதிகாரி தயவுல, 'ஓகே' ஆகிடுச்சுங்க... கைமாறா, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு இடம், அதிகாரி மனைவி பெயருக்கு மாறியிருக்குதுங்க...''இந்த ஆவணங்களை தேடி பிடிச்ச சிலர், அதிகாரிக்கு எதிரா லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பியிருக்காங்க... ஆனா, அதை பத்தி எல்லாம் கவலைப்படாத அதிகாரி, தன் சொத்து வேட்டையை தொடர்ந்துட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.கேப்டன் பிரபாகரன் படத்தின், 'ஆட்டமா, தேரோட்டமா...' பாடல் ரேடியோவில் ஒலிக்க சில நிமிடங்கள் ரசித்த பெரியசாமி அண்ணாச்சி, ''மிளகாய் அரைச்சு பூசி வழிபட்டிருக்காவ வே...'' என்றார்.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலையில் பிரபலமான மாசாணியம்மன் கோவில் இருக்குல்லா... ஆடி மாசத்துல இந்த கோவில்ல, காய்ந்த மிளகாய் அரைத்து வழிபடுறது ரொம்பவும் விசேஷமாம்...''அதாவது, காணாம போன பொருட்கள் திரும்ப கிடைக்கவும், நம்பிக்கை துரோகம் செய்தவங்களை பழிவாங்கவும், பகைவர்களை வீழ்த்தி, எதிரிகளிடம் வெற்றி பெறவும், அங்க இருக்கிற நீதி கல்லில் மிளகாய் அரைச்சு பூசிட்டு வருவாவ வே...''சமீபத்துல, அ.தி.மு.க.,வின், 'மணி'யான கோவை மாஜியும், தெர்மாகோல் புகழ் மதுரை மாஜியும் இங்க தனித்தனியா குடும்பத்தினருடன் வந்து மிளகாய் அரைச்சு வழிபாடு நடத்தியிருக்காவ...''இதுல, மதுரை மாஜிக்கு, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஒருத்தர் நல்ல நண்பராம்... இதனால, மாஜியை ஆளுங்கட்சி அமைச்சரை உபசரிக்கிற மாதிரி தடபுடலா வரவேற்று தரிசனம் முடிச்சு அனுப்பி வச்சிருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 04, 2024 17:20

மிளகாய் அரைத்தல், மிளகாய் எரித்தல் நேர்த்திக்கடன்களை 'சின்னம்மா' கூட ஒரு காலத்தில் செய்தார்கள் மீதி மாஜிகள் மிளகாய் மூட்டைகளுடன் படையெடுப்பார்களா ? அந்த 'மணி' பெரிய மாஜியுடன் உள்ள காழ்ப்பில் இந்த பூச்சு பிரார்த்தனை வைக்கிறாரோ என்னவோ ?


வல்லவன்
ஆக 04, 2024 16:39

இவர்கள் நம் தலையில் மிளகாய் அரைத்தவர்கள்


R.RAMACHANDRAN
ஆக 04, 2024 07:30

லஞ்ச ஊழல் ஒழிப்பு என்பது பெயரளவிற்கு ஒரு சில குற்றங்களை பதிவு செய்து பல குற்றங்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுப்பது இல்லை. அதனால்தான் குற்றவாளிகள் லஞ்ச ஊழல் செய்து துணிவுடன் சொத்துக்கள் குவிக்கின்றனர்.


மேலும் செய்திகள்