உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அமைச்சர் பெயரில் போலீசாரை மிரட்டிய உதவியாளர்!

அமைச்சர் பெயரில் போலீசாரை மிரட்டிய உதவியாளர்!

பில்டர் காபியை பருகியபடியே, ''மொத்த வியாபாரியை கண்டுக்கல ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''மதுரை மாவட்டம், எழுமலை பகுதி கிராமப்புற கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை ஜோரா நடக்கறது... 10 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டை, 100 ரூபாய்க்கு விக்கறா ஓய்...''சில நாட்களுக்கு முன்னாடி, எழுமலை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற கடை முன்னாடி, 10 சாக்கு மூட்டைகள்ல பதுக்கி வச்சிருந்த 100 கிலோ குட்கா பொருட்களை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தா... அந்த கடைக்காரர் தான் மொத்த விற்பனையாளரா இருக்கார் ஓய்...''அவர், போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறையினருக்கும் முறையா, 'கப்பம்' கட்டிடறார்... இதனால, அவர் மீது வழக்கு போடாம, புகையிலை மூட்டைகள் கடைக்கு முன்னாடி இருந்ததுன்னு வழக்கு பதிவு பண்ணிட்டு, அதை யார் அங்க கொண்டு வந்ததுன்னு தேடிண்டு இருக்கறதா எப்.ஐ.ஆர்.,ல குறிப்பிட்டு கதையை முடிச்சுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''புதுசா வந்தவர் மேலயும் அதிருப்தியில இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில், 25 ஆண்டுகளுக்கு பிறகு 2021 சட்டசபை தேர்தல்ல, தி.மு.க.,வின் அண்ணாதுரை ஜெயிச்சாரு... அப்புறமா, அவருக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலர் பதவியும் தந்தாங்க பா...''ஆனா, ஒன்றிய, நகர செயலர்களை அனுசரிச்சு கட்சி பணி செய்யாம இருந்ததும், தனக்கு வேண்டியவங்களுக்கு பதவி வழங்கினார்னும் இவரை பத்தி, அறிவாலயத்துக்கு வண்டி, வண்டியா புகார்கள் பறந்துச்சு... இதனால, சமீபத்துல அவரது மாவட்ட செயலர் பதவியை பறிச்சு, பழனிவேலுன்னு ஒருத்தரிடம் குடுத்தாங்க பா...''இவரும் கட்சியில பெரிய அளவுல ஈடுபாடுகள் காட்டாத நபர் தானாம்... டி.ஆர்.பாலு ஆதரவாளர் என்ற கோட்டாவுல, மாவட்ட செயலர் பதவியை வாங்கிட்டாரு... இவரது செயல்பாடுகளை சில மாதங்கள் பார்த்துட்டு, புகார்களை தட்டி விடலாம்னு தி.மு.க.,வினர் காத்துட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அமைச்சர் பெயர்ல மிரட்டியிருக்காரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''துாத்துக்குடி மாவட்டம், ஆத்துார் பகுதியில், ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி லோகநாதன் என்பவர் சமீபத்துல தற்கொலை பண்ணிக்கிட்டாரு... அவர் எழுதி வச்சிருந்த கடிதத்துல, தனக்கு கடன் தொல்லை தந்ததா, ஆறுமுகநேரியைச் சேர்ந்த பள்ளி நிர்வாகி ஒருத்தர் பெயரை குறிப்பிட்டிருந்தாரு வே...''அந்த பள்ளி நிர்வாகியிடம், அவர் பெயரை வழக்குல சேர்க்காம இருக்க ஒரு தொகையை தரும்படி, அமைச்சரின் உதவியாளர் ஒருத்தர் பேரம் பேசியிருக்காரு... அதோட, சில போலீஸ் அதிகாரிகளிடமும், அமைச்சர் பெயரை பயன்படுத்தி, பள்ளி நிர்வாகி பெயரை சேர்க்க வேண்டாம்னு மிரட்டியிருக்காரு வே...''போலீஸ் அதிகாரிகளோ, 'தற்கொலை கடிதத்துல தெளிவா பள்ளி நிர்வாகி பெயர் இருக்கு... இந்த விஷயத்துல நீங்க தொந்தரவு குடுத்தா, உங்க மேலயும் வழக்கு பாயும்'னு பதிலுக்கு மிரட்ட, உதவியாளர் கப்சிப் ஆகிட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''சங்கர் இப்படி உட்காருங்க... நாங்க கிளம்புறோம்...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை