உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அமைச்சர் படங்களுக்கு தி.மு.க., புள்ளி அதிரடி தடை!

அமைச்சர் படங்களுக்கு தி.மு.க., புள்ளி அதிரடி தடை!

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “கனிமவள கொள்ளையை கண்டுக்கல வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“சேலம் மாவட்டம், இடைப்பாடி, சங்ககிரி தாலுகாக்கள்ல, 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இருக்கு... இந்த குவாரிகள்ல இருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட தினமும் 5 டன் முதல் 15 டன் வரை பெரிய அளவிலான வெள்ளை கிரானைட் கற்களை வெட்டி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புதாவ வே...“இந்த கற்களை, சின்ன சின்னதா வெட்டி லாரிகள்ல ஏத்திட்டு போயிடுதாவ... இதை தடுக்க வேண்டிய கனிமவளம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், 'கவனிப்பு' காரணமா கையை கட்டிட்டு இருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.“இடமாறுதலை தடுக்க பார்த்தும் முடியல பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“சமீபத்துல, டி.ஆர்.ஓ.,க்கள்அந்தஸ்திலான அதிகாரிகள் இடமாறுதல் நடந்துச்சே... இதுல, மதுரை மாவட்ட அதிகாரியை சென்னைக்கும், சென்னை அதிகாரியை மதுரைக்கும் மாத்தினாங்க பா...“மதுரை அதிகாரி, தன் மகன்களுக்கு பொது தேர்வுகள் முடிஞ்சதும், வேற ஊருக்கு போகலாம்கிற எண்ணத்துல இருந்தாரு... சென்னை அதிகாரிக்கும், மதுரைக்கு வர விருப்பமில்ல பா...“இதனால, ரெண்டு அதிகாரிகளும், அவங்கவங்க பணியிடங்கள்ல கமுக்கமா வேலை பார்த்துட்டு இருந்தாங்க... இப்படியே ரெண்டு, மூணு மாசத்தை ஓட்டிடலாம்னு மதுரை அதிகாரி நினைச்சாரு பா...“ஆனா, சென்னை அதிகாரி, தன் துறையின் உயர் அதிகாரியை பார்த்து, 'எனக்கு மதுரைக்கு போக விருப்பமில்ல'ன்னு முறையிட்டிருக்காரு... உயர் அதிகாரியோ, 'ஆர்டர் போட்டு, இத்தனை நாளாகியும் நீங்க இன்னும் மதுரைக்கு போகலையா... முதல்ல அங்க போய் ஜாயின் பண்ணுங்க'ன்னு கோபமா சொல்ல, சென்னை அதிகாரி கப்சிப்னு மதுரைக்கு வண்டி ஏறிட்டாரு... இதனால, மதுரை அதிகாரியும் இடத்தை காலி பண்ணிட்டாரு பா...” என்றார், அன்வர்பாய்.“அமைச்சர் படங்களை போடப்டாதுன்னு எச்சரிக்கை பண்ணியிருக்கார் ஓய்...” என்றார், குப்பண்ணா.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.“சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., புள்ளி, தன் கட்டுப்பாட்டுல வர்ற இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகளை எல்லாம் சமீபத்துல தனித்தனியா கூப்பிட்டு பேசியிருக்கார் ஓய்...“அப்ப, 'நீங்க எந்த ஆலோசனை கூட்டம் நடத்தறதா இருந்தாலும், என் தலைமையில், என் ஆபீஸ்ல தான் நடத்தணும்... முதல்வர் பிறந்த நாளை ஒட்டி ஒரு மாதம் நடத்த போற விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கான பேனர்கள், போஸ்டர்கள்ல துணை முதல்வர் உதயநிதிக்கு அடுத்து என் படத்தை மட்டும் பெருசா போடணும்... அமைச்சர்கள் யார் படத்தையும் போடப்டாது...“இதுக்கெல்லாம், துணை முதல்வரிடம் நான் ஒப்புதல் வாங்கிட்டேன்... அதனால, இதை மீறி யாராவது நடந்துண்டா கடும் நடவடிக்கை எடுப்பேன்'னு எச்சரிக்கை குடுத்திருக்கார் ஓய்...“துணை முதல்வர் பெயரை பயன்படுத்தியதால, கட்சிக்காரா எல்லாம் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்டிண்டு கிளம்பிட்டா... 'உதயநிதி ஆதரவு இருக்குன்னு சொல்லிண்டே, 'சின்ன அரசர்' மாதிரி தி.மு.க., புள்ளி வலம் வரார்'னு கட்சியினர் புலம்பறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.பெரியவர்கள் பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை