மாசி பவுர்ணமி தீர்த்தவாரி உத்சவம் மெரினா கடற்கரையில் கோலாகலம்
சென்னை, மாசி மக தீர்த்தவாரி உற்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி நாளில் சில கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தீர்த்தவாரி உத்சவம் நேற்று நடந்தது.காலை, சக்ரத்தாழ்வாருடன் சமுத்திரத்திற்கு புறப்பட்ட உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், கடல்நீராடி பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலுக்கு திரும்பினார்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து சந்திரசேகர சுவாமி, மெரினா கடற்கரைக்கு எழுந்தருளி கடல்நீராடி பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலுக்கு திரும்பினார். இதையடுத்து, நேற்று மாலை கபாலீஸ்வரருக்கு இளவெந்நீர் அபிஷேகம், கம்பளம் சார்த்துதல் வைபவம் நடந்தது.அதேபோல, பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவில் உற்சவர் ஸ்ரீனிவாசப் பெருமாள், கிண்டி, கோதண்டராமர் கோவில் உற்சவர் சென்னை, எலியாட்ஸ் கடற்கரையில் கடல்நீராடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்த வைபதத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பலர் கடலில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்தனர்.